மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 - வதான ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களான ஸ்ரீரங்கப்பட்டினம் ,ஸ்ரீரங்கம், சாரங்கம், அப்பாதுரங்கம் என்ற வரிசையில் ஐந்தாவது பஞ்ச ரங்க க்ஷேத்திரமாக ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அழைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் இந்தாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 10 -ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 7-ஆம் திருநாளான நேற்றிரவு (16.03.2022) ஸ்ரீ பரிமள ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ பரிமள ரங்கநாயகி தாயார் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, ஆலயப் பிராகாரத்தில் மாலை மாற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பின்னர், சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி திருக்கல்யாண உற்சவம் நடந்தேறியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18-ம் தேதி திருத்தேர் மற்றும் தீர்த்தவாரியும், 29-ம் தேதி சந்திர புஷ்கரணியில் தெப்போற்சவமும் நடைபெற இருக்கின்றன.