Published:Updated:

புதிய பகுதி! - 1: மெய்ப்பொருள் காண்பது அறிவு... ஆன்மிக நம்பிக்கைகளும், அறிவியல் உண்மைகளும்...

சஷ்டி விரதம்
பிரீமியம் ஸ்டோரி
News
சஷ்டி விரதம்

#Lifestyle

புதிய பகுதி! - 1: மெய்ப்பொருள் காண்பது அறிவு...
ஆன்மிக நம்பிக்கைகளும், அறிவியல் உண்மைகளும்...

கத்திலும் புறத்திலும் இருளை அகற்றி, உற்சாகமளிக்கும் பண்டிகையான தீபாவளி என்றாலே விடுமுறை, புத்தாடை, பட்டாசுகள், பலகாரங்கள் எனக் கொண்டாட்டமும் குதூகலமும் நம் நினைவுக்கு வரும். அதேநேரம், நம்மில் பலரும் தீபாவளி முடிந்த மறுநாள் தொடங்கி ஆறு நாள்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு முடித்திருப்போம். அது கந்தனுக்கான விரதம் என்றாலும், அதை மேற்கொள்வது வெறும் பக்திக்காக மட்டுமல்ல... மகோன்னதமான பலன்களுக்காகவும் என்பது தெரியுமா? முதல் அத்தியாயத்தில் அதைப் பற்றிப் பேசுவோம்.

“அகரமும் ஆகி, அதிபனும் ஆகி,

அதிகமும் ஆகி, அகமாகி,

இருநிலம் மீதில் எளியனும் வாழ...

மகிழ்களி கூரும் வடிவோனே...”

என்று போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி விரதம் தோன்றக் காரணமாக இருந்த புராணக்கதையையும், விரதத்தைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளையும், அவற்றின் பலன்களையும் அறிவோம் வாருங்கள்.

புதிய பகுதி! - 1: மெய்ப்பொருள் காண்பது அறிவு...
ஆன்மிக நம்பிக்கைகளும், அறிவியல் உண்மைகளும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காஷ்யப முனிவருக்கும் சூரசை என்ற மாயைக்கும் பிறந்த அசுரர்களில் மூத்தவனான சூரபத்மன், அனைத்துலகங்களையும் வெல்ல வேண்டி சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிகிறான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான், அவனுக்கு வேண்டிய அத்தனை வரங்களையும் வழங்கியும் திருப்தியடையாமல், சாகாவரம் கேட்கிறான் சூரபத்மன். சிவபெருமான் சாகாவரத்தை அளிக்க மறுக்கவே, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெறுகிறான் சூரன். பெற்ற வரங்களின் காரணமாகக் கடும் ஆணவத்துடன் இருந்த சூரபத்மன், சகோதரர்களான சிங்கமுகன் மற்றும் தாரகாசுரனுடன் அறநெறி தவறி, ஈரேழு உலகங்களையும் வென்று, தேவலோகத்தையும் கைப்பற்றி இந்திரன் மகன் ஜெயந்தன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைக்கிறான்.

அவனிடம் தோற்ற தேவேந்திரனோ பூமிக்குள் ஓடி ஒளிந்துகொள்ள, அசுரர்களின் கொடுங்கோல் ஆட்சியால் பெருந்துன்பத்தை அனுபவித்த தேவர்கள், சிவனிடம் முறையிடுகின்றனர்.

தான் அளித்த வரமான, பெண் வயிற்றில் பிறக்காத குழந்தையால் மட்டுமே சூரனுக்கு அழிவு என்பது சிவ பெருமானுக்கு நினைவுக்கு வர, நெற்றிக்கண்ணைத் திறக்கிறார் அவர். அதிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை, வாயு பகவான் ஏந்திச் சென்று, சரவணப் பொய்கையில் உள்ள தாமரைப் பூக்களில் சேர்த்திட, ஆறு தீப்பொறிகளும் சக்தியின் துணையின்றி ஆறு குழந்தைகளாக உருவெடுக்கின்றனர். ஞானம், வீரம், அழகு, புகழ், வெற்றி, வைராக்கியம் ஆகிய ஆறு குணங்களைக் கொண்டிருக்கும் அந்த அறுவரையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்து வந்திட, ஒருநாள் அங்கு வந்த பார்வதிதேவி, அவர்களைத் தன் குழந்தைகளாக உணர்ந்து உச்சிமுகர்ந்த தருணத்தில் ஆறு குழந்தைகளும் ஒன்றுசேர்ந்து ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும், ஓர் உடலும் கொண்ட ஷண்முகன் தோன்றுகிறார்.

அசுரர்களின் அநீதியை தாயிடம் கேட்டறிந்து வளரும் முருகப் பெருமான், அவர்களை அழிக்க உறுதி பூணுகிறார். தந்தையிடம் பசுபதாஸ்திரம் உட்பட பல்வேறு அஸ்திரங்களையும், பதினோரு ருத்திரர்களையும் பெற்று, தாயிடம் அவளின் சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்த சக்திவேலையும் பெற்று, அசுரர்களை எதிர்த்துப் போரிட வீரபாகு உள்ளிட்ட லட்சத்து ஒன்பது பேர் கொண்ட படையுடன் கைலாயத்திலிருந்து புறப்படுகிறார்.

ஆறு நாள்கள் இரவு பகலாக மேற்கொண்ட கடும்யுத்தத்தில் அசுரர்கள் அனைவரையும் வென்று, இறுதிநாளான சஷ்டியன்று சூரபத்மனை எதிர்கொள்கிறார் முருகப்பெருமான். பறவை, மிருகம், பெருங்கடல் எனப் பல ரூபங்களில் அலைக்கழித்த சூரன், இறுதியில் மாமரமாக உருவெடுக்க, தன் தாய் கொடுத்த சக்திவேல் கொண்டு மாமரத்தை இரண்டாகப் பிளக்கும் முருகப் பெருமான் அதிலிருந்து வெளி வந்த மயிலை வாகனமாகவும் சேவலை கொடியாகவும் ஏற்று சூரசம்ஹாரத்தை நிறைவு செய்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
உண்மையில் ‘நான்’ என்ற அகந்தையையும், ‘எனது’ என்ற மமதையையும் வெல்லும் நிகழ் வாகவே சூரசம்ஹாரம் காணப் படுகிறது.

இந்த ஆறு நாள்கள் தொடர் யுத்தம்தான் சஷ்டி விரதம் என்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தீபாவளிக்கு அடுத்து வரும் சஷ்டியை, ‘கந்த சஷ்டி’ என்று சிறப்பித்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், தொடர்ந்து ஆறு நாள்களும் நீர், இளநீர், பழங்கள் என இறைவன் படைத்த உணவை மட்டும் உட்கொண்டு, தூய்மையான ஆடைகளை உடுத்தி, கந்த புராணம், கந்தர் அந்தாதி ஆகிய நூல்களைப் படித்து துதிபாடி, கந்தனை வழிபட்டு, வாழைத்தண்டுடன்கூடிய பாசிப்பருப்பை இறைவனுக்குப் படைத்து, பகிர்ந்துண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வது வழக்கம். இதை முறையாகக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் ஆயுள், ஆரோக்கியம், புகழ், செல்வம் நிறைந்திருக்கும் என்பதுடன் பிள்ளைப்பேறு இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

புதிய பகுதி! - 1: மெய்ப்பொருள் காண்பது அறிவு...
ஆன்மிக நம்பிக்கைகளும், அறிவியல் உண்மைகளும்...

`சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' அதாவது சூரனை வெல்ல, சிக்கலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்திவேலை வாங்கிச் சென்று, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. உண்மையில் முருகப் பெருமானிடம் அமைந்துள்ள வேல், வெறும் ஆயுதமல்ல. எதிரியை வெல்வது வேல் என்றால், எல்லாவற்றையும் வெல்வது அறிவு. வேலவனின் வேலைப் போலவே நம் அறிவும் ஆழ்ந்து, அகழ்ந்து, கூர்மையுடன் இருக்க வேண்டும் என்பதால்தான் ஞானவேலைத் தொழுகிறோம். அந்த வேலவனுக்கு உகந்த சஷ்டி விரதத்தை ஞானத்தின் பார்வையில் காண்போம் வாருங்கள்...

`சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு, பெண்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் அவர்களின் அகமென்னும் கருப்பையில் கரு உருவாகும் என்றொரு விளக்கம் இருக்கிறது.

சஷ்டி விரதம் மட்டுமல்ல, எந்தவொரு விரதமும் மனதுக்கு நம்பிக்கையை அளிப்பதோடு, உடலுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும், பல்வேறு நோய்களுக்குத் தீர்வாகவும் திகழ்கிறது என்கிறது மருத்துவ அறிவியல். அதிலும் ‘Intermittent Fasting’ என்ற நீண்ட இடைவெளியுடன் உணவை உட்கொள்வது பெரும்பலன்களை அளிக்கிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

விரதங்களைக் கடைப்பிடிக்கும் போது, உடலில் செரிமானம் நிகழ்வ தில்லை என்பதால் கணையத்தில் இன்சுலின் குறைவாகச் சுரப்பதுடன், அதன் மற்றுமொரு ஹார்மோனான Glucagon அதிகம் சுரந்து, உடலுக்குத் தேவையான சக்தியை உடலிலுள்ள கொழுப்புகளிலிருந்து எடுக்கத் தொடங்குகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், கல்லீரலின் Glycogen எனப்படும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரையும் எரிசக்தியாக மாறுவதால் (Glycogenolysis & Neoglucogenesis) கொழுப்பு அளவுகளும், சர்க்கரை அளவும் குறைவதுடன், உடற்பருமனும் குறைகிறது.

அத்துடன் நம் உடலில் இடையறாது உழைக்கும் கல்லீரல், கணையம், இரைப்பை, குடலுக்கு நல்ல ஓய்வை அளித்து, நாளடைவில் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களான சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், மன அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன விரதங்கள் என்கிறது மருத்துவ அறிவியல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், நமது உணவிலிருக்கும் தேவையற்ற சில உணவுச் சேர்க்கைகள், உடலின் கொழுப்புத் திசுக்களுடன் கலந்து ‘Advanced Glycation Products’ என்ற நச்சுகளாக உடலிலேயே தங்கிவிடுகின்றன. விரதத்தின்போது கல்லீரல், சிறுநீரகங்கள் வாயிலாக இவற்றை வெளியேற்றி உடல் தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்வதால், நோய் எதிர்ப்புத் திறன் கூடுவதுடன் மனிதனின் ஆயுள்காலத்தையும் விரதங்கள் அதிகரிக்கின்றன. விரதம் முடிந்த பின்னும் இயற்கை உணவுகளான கனிகள், காய்கள் மற்றும் தண்ணீரை மட்டுமே மனம் தேடுவதால், உடல் மேலும் இலகுவாகிறது.

அதிலும் ஆறு நாள்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதத்தில் புதியதொரு வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, புத்தம்புது செல்களும் உருவாகின்றன.

ஆக, சஷ்டி விரதத்தைக் கடைப்பிடித்தாலே பிள்ளைப்பேறு கிட்டுமா என்றால், நேரடியாக அளிக்காவிட்டாலும், அதைப் பெறுவதற்கான ஆரோக்கியமான உடல்நிலையை உருவாக்குகிறது என்பதுதான் உண்மை.

சமீபத்தில் நடந்து முடிந்த சஷ்டி விரதம் மட்டுமல்ல... அனைத்து மதங்களும் வலியுறுத்தும் அத்துணை உண்ணாநோன்புகளும், மனிதனை இறைவனுடன் இணைப்பதுடன், மனிதனின் உடலையும், அதன் இயக்கத் தையும், ஒட்டுமொத்த வாழ்வையும் வலிமைப்படுத்துகின்றன என்பதே நிதர்சனம்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் விரதங்களால் நன்மைகள் நிறையட்டும். ஆரோக்கியம் கூடட்டும்!

மெய்ப்பொருள் தேடல் தொடரும்...

டாக்டர் சசித்ரா தாமோதரன், கோவையை அடுத்த காரமடையில் இயங்கிவரும் சவிதா மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் மற்றும் தாளாளர். மகப்பேறு மற்றும் பெண்கள் நலச் சிறப்பு மருத்துவத்தில் 20 வருட அனுபவம் உள்ளவர். மருத்துவத்தை தமிழில் பதிவு செய்து, அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற பேரார்வத்துடன் விகடன் குழும இதழ்களிலும், வேறு சில ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், ஆன்மிகம், இசை, இயற்கை என அனைத்திலும் ஆர்வம் மிக்கவர், திருப்பாவை பாசுரங்களிலுள்ள அறிவியல், ஆன்மிக, மருத்துவ, விஞ்ஞான, சரித்திர உண்மைகளை விகடன் ஆன்லைனில் எழுதி `மார்கழி உற்சவம்...' தொடரை நூலாகவும் வெளியிட்டுள்ளார்..

`மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற இந்தத் தொடரின் மூலமாக, நம்மிடையே உள்ள ஆன்மிக நம்பிக்கைகள் குறித்தும், அவற்றில் பொதிந்துள்ள அறிவியல் விளக்கங்களையும் தொகுத்துத் தர உள்ளார்...