Published:Updated:

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 2: அரசினை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை!

மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பிரீமியம் ஸ்டோரி
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

#Lifestyle

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 2: அரசினை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை!

#Lifestyle

Published:Updated:
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பிரீமியம் ஸ்டோரி
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

கோயில்களிலும், ஊரின் எல்லைகளிலும் ஓங்கி வளர்ந்து காணப்படும் Peepal எனப்படும் அரசமரத்துக்கு மரியாதை இங்கு அதிகம். அரசமரத்தைச் சுற்றி வந்தால், குழந்தைப்பேறு கிடைக்கும், ஆயுள் நீடிக்கும் என்று பெண்கள் இந்த மரத்தைச் சுற்றுகிறார்கள்; மரங்களில் கயிறு கட்டுகிறார்கள். `அரசினை நம்பி புருஷ னைக் கைவிட்ட கதைதான்' போலிருக் கிறது என்று நாம் எண்ணும்போதே, `இல்லை' என்று இந்த மரத்தின் பெருமையைச் சொல்கிறது சத்தியவான் சாவித்திரி கதை.

எதிரிகளிடம் போரில் தோற்ற சால்வ நாட்டு மன்னனான துயுமத் சேனன், தன் மனைவி மற்றும் மகனுடன் காட்டில் மறைந்து வாழும்போது, பார்வையில்லாத அம்மன்னனுக்குப் பணிவிடை செய்து பார்த்துக்கொண்ட அவரின் மகன் சத்தியவானைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள் அசுவ நாட்டு இளவரசி சாவித்திரி.

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 2: அரசினை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை!

காதல் கணவனுக்கு ஆயுள் இன்னும் ஓராண்டு மட்டுமே என்பதை நாரதர் மூலம் அறிந்து கொண்ட அவள், கணவனின் ஆயுளுக்காகக் கடவுளை வேண்டி, விரதங்களை மேற்கொள்கிறாள். ஓராண்டு முடிவில், ஒரு நாள் மரம் வெட்டிக்கொண்டிருந்த சத்தியவான், `சோர்வாக இருக் கிறது' என்றபடி சாவித்திரியின் மடியில் சாய்ந்து, அப்படியே இறந்தும் போகிறான். சத்திய வானின் உயிரை எடுக்க வந்த எமதர்மன், சாவித்திரியின் பக்தியை மீறி, அவள் கணவனின் உயிரைக் கொண்டுபோக முடியாமல் தவித்து, `உன் கணவனின் உயிரைத் தவிர, வேறு என்ன வேண்டுமானாலும் கேள்' என்று வரமளிக்க, சாவித்திரியோ விவேகமாக, `எனது வம்சம் தழைக்க வேண்டும்' என்று வரத்தைப் பெறுகிறாள். அவசரத்தில் வரமளித்துவிட்ட எமதர்மன், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதை உடனே உணர்ந்து, வேறு வழியின்றி சத்தியவானின் உயிரைத் திரும்பக் கொடுத்தார் என்கிறது மகாபாரத கிளைக்கதை.

உண்மையில் சாவித்திரியின் விரதப்பலன் காரணமாக அவளின் கணவன் உயிர்பெற்றான் என்றாலும், அவன் உயிர்பெற அரச மரமும் ஒரு காரணம் என்றும், சாவித்திரி விரதம் இருந்ததும், சத்தியவான் உயிர் பெற்றதும் அரசமரத்தடியில்தான் என்கிறது இப்புராணம். மேலும், உமையவளின் சாபத்தால் ஒருமுறை திருமால் அரசமரமானபோது, அவர் மார்பில் குடிகொண்டிருக்கும் மகாலட்சுமியும் அரசமரத்தில் வசிப்பதாகவும், அதன் காரணமாகவே அனுமனுக்கு உகந்த மரமாக அரசமரம் உள்ளதாகவும் சொல்கிறது பாகவதப் புராணம்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு... 2: அரசினை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை!

மாதங்களில் `நான் மார்கழி' என்ற பகவான் கிருஷ்ணரோ, `அஷ்வத்த: சர்வ விருக்க்ஷானாம்' அதாவது `மரங்களில் நான் அரசமரம்' என்கிறார். மேலும், அரசமரத்தின் வேர்கள் பிரம்மனையும், கிளைகள் திருமாலையும், இலைகள் சிவனையும் குறிப்பதுடன், இந்த மும்மூர்த்திகள் வசிப்பதே அரசமரத்தில்தான் என்றும், அதன் காரணமாகவே சாகாவரம் எனும் தேனை வழங்குகிறது அரசமரம் என்கின்றன வேதங்கள்.

இந்தக் கதைகளைப் பொய்யென மறுப்பவர்கள்கூட, இம்மரத்தைப் பற்றிக் கூறியுள்ள கதைகளில் இருக்கும் அறிவியல் காரணங்களை நிச்சயம் மறுக்க மாட்டார்கள்.

அதிக அளவில் ஆக்ஸிஜனை அளிக்கும் மரங்களில் முக்கியமான அரசமரத்துக்குப் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன.அரசமரத்தின் இலைகளைக் காயவைத்து, பொடிசெய்து தினமும் உட்கொண்டால் மலட்டுத்தன்மை நீங்கும் என்கிறது சித்த மருத்துவம். எனவே, இந்த மரத்தடியில் தனது குலம் வளர சாவித்திரி வரம் கேட்டதும், இறந்த அவள் கணவன் உயிர் பிழைத்ததும் இங்கு பொருந்திப் போகிறதல்லவா..?

தவிர, அரசமரத்தின் துளிர் இலைகளை உட்கொள்வது பித்தம், குடல்புண், ரத்த சோகை, வயிற்றுப்போக்கு, நுரையீரல் நோய்கள், கர்ப்பப்பைக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாகிறது என்று கூறும் ஆயுர்வேதம், இதன் காய், வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ நன்மைகள் கொண்டவை என்றும் கூறுகிறது. மேலும், புத்திக்கு அதிபதியான கணபதி இந்த மரத்தின் அடியில் வீற்றிருப்பதும், புத்தர் ஞானம் பெற்றது போதி மரம் என்ற அரசமரம்தான் என்பதற்கும் சம்பந்தம் உள்ளது.

பொதுவாக, மரங்கள் அனைத்தும் பகல்பொழுதில் ஒளிச்சேர்க்கையின்போது காற்றிலுள்ள கரியமில வாயுவை உள்ளிழுத்து, ஆக்ஸிஜனை வெளியேற்றும். இரவில் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து, கரியமில வாயுவை வெளியேற்றும். ஆனால், அரசமரம் உள்ளிட்ட சில மரங்களில் அவ்வப்போது நிகழும் கேம் ஒளிசேர்க்கை (CAM Photosynthesis) வாயிலாக, இரவிலும் அது ஆக்ஸிஜனை அளிக்கவல்லது என்பதால்தான் அதிக அளவில் ஆக்ஸிஜனைத் தரும் மரங்களில் ஒன்றாக இது கொண்டாடப் படுகிறது. இதைச் சுற்றும்போது சுவாசம் சீராவதுடன், நாளமில்லா சுரப்பிகளின் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, உடலும் மனமும் ஆரோக்கியம் பெறுகின்றன என்பதால்தான், இன்றும் கிராமங்களில் இம்மரத்தடியில் பள்ளிகளையும், பஞ்சாயத்து தீர்ப்புகளையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த மரத்திலிருந்து வெளிப்படும் அதிகளவு ஆக்ஸிஜன், ரத்தத்தைச் சுத்திகரித்து, அதன் மூலம் கருத்தரித்தல் விகிதத்தையும் அதிகரிக்கிறது என்பதுதான், `அரசமரத்தைச் சுற்றுவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த் தாளாம்' என்று இப்போதும் வேடிக்கையாகக் கூறப்படுகிறது.

நமது இந்திய அரசு தன் உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு அரச இலையின் வடிவத்தைக் கொடுத்துள்ளது. அரசமரத்துக்கு மட்டுமல்ல அனைத்து மரங்களுக்கும் ஓர் இறைக்கதையை இணைத்து வைத்திருக்கின்றன இந்தியப் புராணங்கள்.

அரசமரத்தடியில் விநாயகர், ஆலமரத்தடி யில் தட்சிணாமூர்த்தி, வேப்பமர மாரியம்மன் என்பவை நம் நம்பிக்கைகள். கிறிஸ்துவத்திலோ கிறிஸ்துமஸ் என்பதற்கு `கிறிஸ்துமஸ் மரம்'தான் அடையாளமாகவே இருக்கிறது. இஸ்லாத்திலும் ஈச்சமரமும்,

அத்திமரமும் புனிதமாகப் பார்க்கப் படுவதன் பின்னே அனைத்து மதங்களிலும், இறை நம்பிக்கையும் இயற்கை நேசிப்பும் வெவ்வேறு அல்ல என்பதை விளங்க வைப்பதாகவே தோன்றுகிறது.

அனைத்துக்கும் மேலாக இங்கே ஒவ்வொரு மரத்தடியில் ஒரு கடவுளைப் படைத்து வழிபடுவதற்கும், மதங்களுடன் மரங்கள் இணைக்கப்படுவதற்கும் ஆன்மிகம், அறிவியல் தாண்டி மனிதர்கள் தங்கள் தேவைக்காக மரங்களை அழிக்காமல் இயற்கையைக் காப்பாற்றுவதாகவும் இருக்கலாம் என்ற வாழ்வியல் காரணமும் புரிகிறது.

ஆம்... அது அரசமரமோ, ஆலமரமோ... மரம் எதுவாயினும் வானத்தை நோக்கி பூமி எழுதும் கவிதைகளே, மரங்கள்!

- மெய்ப்பொருள் தேடல் தொடரும்...