ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

சின்ன சபரிமலை கடுக்கரை ஐயப்பன் கோயில்

கடுக்கரை ஐயப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
கடுக்கரை ஐயப்பன்

கடுக்கரை ஐயப்பன்

சபரிமலை... உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் ஜீவ நாடியாக விளங்கும் தலம். இன்றைக்குக் கோடான கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை கேரளா பக்தர்கள் மட்டுமே சபரிமலையை அறிந்திருந்தனர்.

கடுக்கரை ஐயப்பன்
கடுக்கரை ஐயப்பன்

அதன்பின் நாடு முழுவதும் ஐயனின் புகழ் பரவத் தொடங்கியது. பக்கத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சபரியில் திரண்டனர். ஐயன் அவர்களின் உணர்வுகளோடு கலந்தார். தினம்தினம் ஐயப்பனைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரத்தொடங்கிய தருணத்தில் அந்த விபத்து நிகழ்ந்தது. அது ஐயனின் பக்தர்கள் நெஞ்சை வாடச் செய்தது.

1950-ம் ஆண்டு சபரி சந்நிதானத்தில் நிகழ்ந்த தீ விபத்துதான் அது. அந்த விபத்தில் ஐயப்பனின் திருமேனி பின்னப்பட்டுவிட்டது. பின்னம் ஏற்பட்ட திருமேனியை வைத்து வழிபாடு செய்யும் மரபு நம்மிடையே இல்லை. எனவே அதற்கு மாற்றாக விக்ரகங்களைச் செய்ய பக்தர்கள் தயாராக இருந்தனர்.

மூன்று பக்தர்கள் பெரும் சிரத்தையோடும் பக்தியோடும் சுவாமி ஐயப்பனின் திருமேனியைச் செய்து கொண்டுவந்தனர். சுவாமியின் சந்நிதியிலேயே பிரசன்னம் பார்க்கப்பட்டது. தமிழகத்திலிருந்து ஒரு பக்தர் கொண்டுவந்திருந்த திருமேனியை தனக்கானதாகத் தேர்வு செய்ய ஐயப்பன் உத்தரவு கொடுத்தார். அதன்படி அந்த விக்ரகமே சந்நிதானத்தில் கோயில்கொண்டது. இன்றும் சபரிமலையில் கோடானகோடி பக்தர்கள் தரிசித்து மகிழும் அந்த ஐயப்பன் திருமேனியை வழங்கியவர் ஒரு தமிழர்.

நவாப் ராஜமாணிக்கம்
நவாப் ராஜமாணிக்கம்

அவர் யார் தெரியுமா? நவாப் ராஜமாணிக்கம். ராஜமாணிக்கம் ஓர் நாடகக் கலைஞர். `நாடகக் கலையில் அரசன்' என்று பொருள் வருமாறு அவரை நவாப் என்று அழைக்க ஆரம்பித்தனர். நவாப் ராஜமாணிக்கம் தீவிர ஐயப்ப பக்தர். அவர் ஐயனின் பக்தரான நிகழ்வு அற்புதமானது.

வில்லிசை கலைஞரான கே.எம்.ஐயப்பன் நவாப் ராஜமாணிக்கம் வாழ்வில் நிகழ்ந்த சில அற்புதங்களை நமக்கு விளக்கினார்.

``எங்க தாத்தா கவிரத்தினம் உடையார் பிள்ளை. அவரும் நாடகக் கலைஞர்தான். ஒருமுறை நவாப் ராஜமாணிக்கம் நாகர்கோவிலுக்கு நாடகம் போட வந்தார். அப்போ என் தாத்தாவுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டானது. அந்தக் காலத்திலே ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனி மிகவும் பெரியது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், நம்பியார் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் அங்கிருந்து கலைத்துறைக்குப் புறப்பட்டவர்கள்தான்.

கவிரத்தினம் உடையார் பிள்ளை
கவிரத்தினம் உடையார் பிள்ளை

என்னதான் புகழ் இருந்தாலும் வருமானமும் வேண்டுமல்லவா... நாடகக் கம்பெனியை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அந்தக் கம்பெனியில முந்நூறுபேர் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு சாப்பாடும் சம்பளமும் கொடுக்க முடியாது என்னும் அளவுக்கு நிலைமை மோசமானது. பேசாமல் நாடகம் போடுவதையே விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார் ராஜமாணிக்கம். அப்போ எங்க தாத்தா உடையார்பிள்ளை ராஜமாணிக்கத்திடம், 'சுவாமி ஐயப்பனைப் பற்றி கேரளாவில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வெளிமாநிலங்களில் தெரியாது. அதனால் சுவாமி ஐயப்பன் நாடகத்தைப் போட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும். நம் நிலைமையும் மாறும்" என சொல்லியிருக்கிறார்.

உடனே நவாப் ராஜமாணிக்கம் ஆர்வமாகி எங்கே, 'ஐயனின் கதையைச் சொல்லுங்கள்' என்று கேட்க என் தாத்தாவும் ஐயப்பனின் சரித்திரத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். முழுக்கதையையும் கேட்ட நவாப், 'இதில் வரக்கூடிய காட்சிகளின்படி குதிரை, புலி, யானை ஆகியவற்றை நாடகத்தில் காட்ட வேண்டும் என்றால் மிகவும் செலவாகும். அதனால் இந்தக் கதையை நாடகமாகப் போட முடியாது' என்று சொல்லிவிட்டு வேகமாக மறுத்திருக்கிறார்.

`சரி ஐயன் விட்ட வழி' என்று என் தாத்தா விட்டுவிட்டார். அன்று இரவு ஐயன் தன் திருவிளையாடலைத் தொடங்கினார். நவாபின் கனவில் காட்சி கொடுத்தார். கனவில் ஐயப்பனைக் கண்ட நவாப் திகைத்துப் போனார். அவர் மேனி சிலிர்த்தது. அப்போது ஐயன் திருவாய் மலர்ந்து, `என் சரிதத்தை நாடகமாகப்போடு. உன் நஷ்டம் எல்லாம் மாறும்' என்று சொல்லியிருக்கிறார்.

நவாபுக்கு விழிப்பு வந்துவிட்டது. மறுநாள் காலை வரைக் காத்திருந்து எங்கள் தாத்தா உடையார்பிள்ளையிடம் ஓடிவந்து கனவில் கண்டதைச் சொல்லியிருக்கிறார். பிறகு நிச்சயம் நான் ஐயப்பன் கதையை நாடகமாகப் போடுவேன் என்று சொல்லி அந்தப் பணிகளில் இறங்கினார். நாடகத்துக்கு யார் கதை வசனம் எழுதுவது என்று வந்தபோது சீட்டு குலுக்கிப்போட்டு பார்த்தபோது, அதில் தாத்தா உடையார்பிள்ளை பெயர் வந்தது.

பந்தளத்துக்குப்போய் `பூதநாத சரித்திரம்' எடுத்துப் பார்த்து முழுக்கதையையும் தாத்தா எழுதினார். ஆலப்புழா வில் ஐயப்பன் நாடகம் போட்ட மூன்றே நாளில் கடன் முழுவதும் தீர்ந்து கம்பெனி லாபத்தை நோக்கி போனது. அதில் இருந்து நவாப் ராஜமாணிக்கம் ஐயப்ப சுவாமியின் தீவிர பக்தர் ஆகிவிட்டார்.

தனது நஷ்டங்கள் நீக்கத் தூண்டுகோலாக இருந்த எங்கள் தாத்தாவுக்கு ஒரு பெரியதொகையைத் தர விரும்பினார். ஆனால் எங்கள் தாத்தாவோ, `நான் பணத்துக்கு ஆசைப்பட்டு இதை செய்யவில்லை. இந்தப் பணத்தை நீங்க வச்சுகிடுங்க. நான் கடுக்கரையில் ஐயப்பனுக்கு ஒரு கோயில் கட்டுவேன். அப்போ நீங்க இதைக் காணிக்கையாகத் தாருங்கள்' என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னதுபோலவே கடுக்கரையில் ஐயனுக்கு ஒரு கோயிலையும் கட்டினார் எங்கள் தாத்தா.

கடுக்கரை ஐயப்பன் கோயில்
கடுக்கரை ஐயப்பன் கோயில்
ஐயப்பன் கோயில்
ஐயப்பன் கோயில்
வில்லிசை கலைஞரான கே.எம்.ஐயப்பன்
வில்லிசை கலைஞரான கே.எம்.ஐயப்பன்

கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஐயப்பன் திருமேனி வேண்டும் என்று பந்தளத்துக்கு போய், சபரிமலையில் இருக்கும் தற்போது இருக்கும் ஐயப்பன் திருமேனியை வடித்த ஸ்தபதியிடமே சொல்லி சபரிமலை ஐயப்பன் போலவே ஒரு திருமேனியைச் செய்து வாங்கிவந்து இங்கே பிரதிஷ்டை செய்தார்கள். சபரிமலை ஐயப்ப சுவாமி விக்ரஹமும், அஞ்சுகிரியில் இருக்கும் விக்ரஹமும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டதுதான். கோயில் கட்டுவதற்கான பொருட்செலவில் பெரும்பாலானது நவாப் ராஜமாணிக்கம் தந்ததுதான். அதனால்தான் இந்தக் கோயிலுக்கு 'இராஜமணிக்க விலாஸம்' என்று தாத்தா பெயர் வைத்துவிட்டார்" என்று கடுக்கரை ஐயப்பன் கோயில் எழுந்த வரலாற்றையும் கே.எம்.ஐயப்பன் சொல்லிமுடித்தார்.

சின்ன சபரிமலை
சின்ன சபரிமலை

நாகர்கோவிலிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கடுக்கரை கிராமம். இங்குள்ள ஐயப்பன் கோயிலை சின்ன சபரிமலை என்றே அழைக்கிறார்கள். காரணம் இங்கு தரிசனம் கொடுக்கும் ஐயப்பனின் தோற்றம் மட்டுமல்ல இந்தக் கோயிலின் வழிபாடுகளும்தான். இதுகுறித்து விளக்கினார் கோயிலின் அர்ச்சகர் ராம்சங்கர்.

``சபரிமலையைப் போன்று இங்கும் தமிழ் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து ஐந்தாம் தேதிவரை ஐந்து நாள்கள் நடை திறந்து பூஜை நடக்கும். காலை 5 மணிக்கு நடை திறக்கும். 6 மணிமுதல் 12 மணிவரை நெய்யபிஷேகம் நடைபெறும். 1 மணிக்குநடை சார்த்தப்பட்டு மாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும். பின்னர் ஹரிவராசனம் பாடி நடை சார்த்தப்படும்.

கார்த்திகை 1-ம் தேதி முதல் 41 நாள்கள் அபிஷேகம் நடைபெறும். தை மகர விளக்கு வரை சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாள்களில் இங்கும் நடை திறந்திருக்கும். சபரிமலைக்கு போகமுடியாத ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக்கிட்டு இங்கு வருவார்கள். மண்டல பூஜை அன்று உற்சவர் ஊருக்குள் வாகனத்தில் புறப்பட்டுச் செல்வார். படிபூஜையும் விமரிசையாக நடக்கும்.

கன்னிமூல கணபதி
கன்னிமூல கணபதி
கருப்பசாமி சந்நிதி
கருப்பசாமி சந்நிதி
மாளிகைபுறம் சந்நிதி
மாளிகைபுறம் சந்நிதி

சபரிமலைக்கு போகும் பக்தர்கள் இந்த கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். ஆனால், சபரிமலைக்கு இந்த கோயிலில் இருந்து கட்டுகட்டி போகமாட்டாங்க. வெளி கோயில்களில் இருந்து இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள்" என்றார்.

ஆஞ்சநேயர் சஞ்ஜிவி மலையைத் தூக்கிப் போகும்போது இரண்டு துண்டுகள் விழுந்தன என்றும் அதில் ஒன்று மருத்துவாழ் மலை என்றும், மற்றொன்று அஞ்சுகிரி என்றும் சொல்கிறார்கள். அஞ்சுகிரியில்தான் கடுக்கரை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. மலை ஏறிச்செல்லும்போது முதலில் வாவர் சந்நிதி அமைந்துள்ளது. அடுத்ததாக கருப்பசாமி சந்நிதியைத் தொடர்ந்து பதினெட்டாம் படி அமைந்துள்ளது.

பாறையில் பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதினெட்டாம் படி ஏறிச் சென்றதும் 'தத்வமஸி' என்ற வாசகத்துடன் ஐயப்பன் சந்நிதி அமைந்துள்ளது. ஐயப்பன் கோயிலின் இடப்பக்கம் கன்னிமூல கணபதி சந்நிதியும், வலப்பக்கம் மாளிகைபுறம் சந்நிதியும் அமைந்துள்ளது. சபரிமலைக்கு நிகரான சாந்நித்தியம் உள்ள இடமாக இந்தத் திருத்தலம் கருதப்படுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கடுக்கரை சென்று ஐயப்பனை வழிபட்டு அருள்பெறுங்கள்.

எப்படிச் செல்வது? நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 4பி, 4 ஹெச் பேருந்துகள் செல்கின்றன. கடுக்கரை முத்தாரம்மன் கோயிலில் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம். கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் நாகர்கோவிலில் இருந்து புத்தேரி வழியாக கடுக்கரை செல்லலாம்.

நரகத்திலும் புத்தர்!

‘‘நூறு வருடங்கள் கழித்து நீங்கள் எங்கே இருப்பீர்கள்?’’ என்று ஒருவர் துறவியிடம் கேட்டார்.

‘‘ஒரு குதிரையாகவோ கழுதையாகவோ நான் மாறியிருப்பேன்’’ என்றார் துறவி. ‘‘அதற்கப்புறம் என்ன ஆவீர்கள்?’’ மறுபடியும் அந்த மனிதர் கேட்டார்.

‘‘நரகத்துக்குப் போவேன்’’ என்றார் துறவி. அந்த மனிதருக்கு ஆச்சரியம். ‘‘ஞானமும் நல்ல குணமும் உள்ள நீங்கள் ஏன் நரகத்துக்குப் போக வேண்டும்?’’ என்று கேட்டார்.

‘‘நான் நரகத்துக்குப் போகவில்லையென்றால் நரகத்தில் உனக்கு யார் உபதேசம் செய்வார்கள்?’’ என்று பதிலுக்குக் கேட்டார் துறவி.

‘‘பரிசுத்தமான இடத்துக்கு உரியது ஆன்மிகம் என்று சொல்ல முடியுமா? அசுத்தமான கழிவறைகளுக்குள் புத்தர் நுழைந்ததில்லை என்று சொல்ல முடியுமா? அவர் இல்லாத இடமே இல்லை. சொர்க்கத்தில் இருக்கிறார் என்றாலும் நரகத்தில்தான் புத்தரின் தேவை அதிகம்!’’ என்றார் துறவி.

_ ஜி.ஆர்.

கண்ணனுக்கு மண்ணே நைவேத்தியம்!

யமுனை நதிக் கரையில் ‘நந்தகாம்’ என்ற இடத்தில் கண்ணனுக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு கண்ணனின் பெயர் பிரமாண்ட விஹாரி.

மண்ணை உண்ட வாயைத் திறந்து, தன் அன்னைக்கு அண்ட சராசரத்தையும் காட்டிய இடம் இதுதானாம். அதனால் இன்றும் இங்கு மண்ணையே பிரசாதமாகத் தருகிறார்கள். இதற்கென பிரத்தியேக மண் வரவழைக்கப்பட்டு, பகவானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

இந்த மண்ணை வாயில் போட்டால் கரைகிறது. அங்கு பக்தர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை ‘ராதே ராதே ச்யாம்ஸே மிலாதே’ (ஹே ராதே எங்களைக் கண்ணனிடம் சேர்த்து விடு) தான்!

- ஜெயலட்சுமி கோபாலன், சென்னை-64