ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

தேடி வந்து ஆட்கொண்டார்

சிவன் சார்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன் சார்

சிவன் சார் அற்புதங்கள்

`சிவன் சார் மகிமையால் எங்கள் குடும்பமே அவருடன் ஐக்கியமாகி விட்டோம்’ என்று நெக்குருகச் சொல்லும் எஸ்.பி.காந்தன், தன் மகள் கருவுற்றிருந்த தருணத்தில் சிவன் சார் செய்த அனுக்கிரஹம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

``கடந்த வருடம் என் மகள் இரண்டாவது குழந்தையைக் கருவுற்றிருந்தாள். நிறை மாசமா இருக்கும்போது அவளுக்குக் கோவிட் வந்துடுச்சி. அப்போ சாரைத் தவிர வேற சரணாகதியே கிடையாது. ஏற்கெனவே அவளுக்கு 5 வயசில் ஒரு குழந்தை இருந்தது. அம்மாவுடனேயே இருந்ததால், அந்தக் குழந்தைக்கும் கோவிட் தொற்றிக்கொண்டது.

எங்கள் வீட்டில் ஒரு தனி அறையில் பொண்ணும் பேத்தியும் இருந்தாங்க. அந்த ரூமில் பெரியவா போட்டோவும் சிவன் சார் போட்டோவும் நிறைய உண்டு. நாங்கள் மனதாரப் பிரார்த்தனைப் பண்ணிக்கிட்டோம். அவங்க ரெண்டுபேரும்தான் மகளையும் பேத்தியையும் குணமாக்கணும்னு வேண்டிக்கிட்டோம்.

ஆச்சரியப்படும் வகையில் ரெண்டே நாளில் என் பொண்ணு மீண்டு வந்தாள். சுகப்பிரசவம் நடந்தது. அந்தக் குழந்தை தேஜஸ்விக்கு இப்போ ரெண்டு வயசாகுது. சிவன் சார் அருளால் குழந்தைகள் நல்லா இருக்காங்க. குழந்தைகளுக்குப் பிறந்தநாள் முதற்கொண்டு என்ன விசேஷம் என்றாலும் முதலில் நேரே சாகரத்துக்குச் சென்று, சிவன் சார் முன்னாடி குழந்தைகளை நிறுத்திட்டுத்தான் மறுவேலை பார்ப்போம். அவரின் அனுக்கிரஹம் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் அல்லவா!

தேடி வந்து ஆட்கொண்டார்

யோசிச்சுப் பார்த்தால், எனக்குத் தெரியாமலேயே எங்கெல்லாம் அவர் இருந்தாரோ, அங்கெல்லாம் நான் பக்கத்திலேயே இருந்திருக்கேன். தி.நகரில் நல்லி குப்புசாமி செட்டியார் வீட்டில்தான் அவர் ரொம்ப நாள் இருந்திருக்கார். அதுக்குப் பக்கத்துலேயே ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூல்லதான் நான் ஆறு வருஷம் படிச்சேன். ஆனா பக்கத்திலேயே அவர் இருக்கார்னு அப்போது தெரியாது.

அதேமாதிரி பத்மா சுப்பிரமணியம் அம்மா வீட்ல அவர் நிறைய நாள் இருந்திருக்கார். என் பொண்ணு அங்கேதான் டான்ஸ் கத்துக்கிட்டா. எத்தனை நாள் அந்த வாசலில் அவளை இறக்கிவிட்டிருக்கேன்... பிக்கப் செய்திருக்கேன் தெரியுமா... அப்போதும் உள்ளே சிவன் சார் இருக்கார்னு தெரியாது.

ஆனால் சிவன் சார் ‘உன் மூலமா இந்த வேலையை நான் நடத்திக்கொள்ளப் போகிறேன்’ என்று சிந்தித்து, அவர் சரிதத்தை ஆவணப் படமாக்கும் அற்புத வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கார். அதன் மூலமா நான் அவரை அறிஞ்சு சரணாகதி அடைய அருள் செய்திருக்கிறார்... இதை நான் மறக்கவே முடியாது!

சிவன் சார்
சிவன் சார்


கடவுளை நாம் தேடிப் போவது ஒருவகை. நமக்குத் தேவையான தருணங்களில் கடவுளே நம்மைத் தேடி வருவது ஒருவகை. என் வாழ்வில் நிகழ்ந்தது இரண்டாவது வகை. `என்னை அவரே தேடி வந்து ஆட்கொண்டார்’ என்று அவரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

தினமும் காலையில் டிவியில் ‘தெய்வத்தின் குரல்’ கேட்பேன். அதில் சமீபத்தில் கேட்ட பெரியவா திருவாக்கு ஒன்று... `ஒரு பெரிய கஷ்டம் வரும்போது பயப்படாதே. ஏன்னா அந்தக் கஷ்டம் வந்ததனால உன் கர்மா போகப் போகுது. அடுத்து நல்லதுதான் நடக்கும்னு நெனச்சுட்டு நம்பிக்கையோடு இரு. பெருசா ஒரு சந்தோஷம் வரும்போது ரொம்ப குதிக்காதே. கொஞ்சம் வெயிட் பண்ணு... இந்த சந்தோஷத்துக்கு அப்புறம் நம்மோட கர்மா வரப்போகுது... சில கஷ்டங்கள் வரலாம்’ என்று அருளியுள்ளார் மகா பெரியவா.

பெரியவா சொன்ன மாதிரிதான் நானும். சிவன் சார் என் வாழ்க்கையில வந்ததிலிருந்து, கஷ்டமோ நஷ்டமோ அதை அவர் மூலமாகத்தான் நாங்க எடுத்துக்கிறோம். ரொம்ப கஷ்டம் வர்றப்போ, `சிவன் சார் இதைப் பார்த்துக்குவார்’ என்று உளமார நம்புவோம். ‘சார் நீங்கதான் இதைப் பார்த்துக்கணும்’னு அவர்கிட்ட போய் நிற்போம். அவரும் அதைச் சரி பண்ணி அனுக்கிரஹம் செய்வார்.

அதேமாதிரி எந்தவொரு நல்ல விஷயம் நடந்தாலும், `சார் நீங்க கொடுத்த பரிசுன்னு நான் எடுத்துக்கிறேன்’னு அவருக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அதை அனுபவிக்கிறோம். இப்படித்தான் எங்கள் காலம் போய்க்கொண்டிருக்கிறது. எங்கள் மீதிகாலமும் இதேமாதிரி கழியவேண்டும் என்று சிவன் சாருக்கும் மகா பெரியவாளுக்கும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, வேண்டிக் கொள்கிறோம்’’ மனம் நெகிழ விவரித்த காந்தன் மேலும் தொடர்ந்தார்.

“பொதுவாக நான் என் பணிகளுக்கான அங்கீகாரம், விருதுகள் பற்றியெல்லாம் கவலைப்பட்டதும் இல்லை; எதிர்பார்ப்பதும் இல்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ‘இது கடவுளின் ஆசீர்வாதம்’ என எண்ணி, அதில் முழுமூச்சாக இறங்கி எனது மிகச் சிறந்த பங்களிப்பைக் கொடுப்பதுதான் என் வழக்கம்.

சிவன் சார் மீது பக்தி அதிகமாகி, சிவ சாகரத்துக்குச் சென்று நித்ய பூஜைகள் செய்ய ஆரம்பித்த பிறகு, பல அற்புதங்கள் நிகழக் கண்டேன். ஒரு நித்ய பூஜை செய்துவிட்டு வீட்டுக்கு வருவேன். சிறிது நேரத்திலேயே ஒரு போன் வரும். ‘கிருஷ்ண கான சபாவி லிருந்து உங்களுக்கு இந்த முறை ‘நாடக சூடாமணி’ விருது கொடுக்கிறாளாம்’ என்பார்கள். ‘யாருக்கு மாது பாலாஜிக்கா?’ என்று சந்தேகமாகக் கேட்பேன். ‘இல்லை சார்... நீங்கதானே எஸ்.பி.காந்தன். உங்களுக்குத்தான்!’ என்று சொல்லி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள்.

சிவன் சார்
சிவன் சார்

அதே போல, சேஷாத்ரி சுவாமிகள் பற்றிப் படம் இயக்கும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. அந்த அறக்கட்டளை மூலமாக ‘குறும்பட வித்தகர்’ என்னும் விருது கிடைத்தது. அதுவும் சிவன் சார் மற்றும் சேஷாத்ரி சுவாமிகளின் அனுக்ரஹம்தான் என்றே நினைத்து வணங்கினேன்.

இன்னொரு நாள் சிவ சாகரத்தில் பூஜை முடித்து வீட்டுக்கு வருகிறேன்... ‘கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்’-ல் இருந்து போன். `சார் இந்த வருஷம் வாழ்நாள் சாதனையாளர் விருது உங்களுக்குக் கொடுக்கிறோம்’ என்று. அண்மையில் ஒரு நாள், நான் சிவ சாகரத்தில் நித்யபூஜை முடித்துத் திரும்பிவரும்போது, மயிலாப்பூர் அகாடமியிலிருந்து ‘வாழ்நாள் சாதனையாளார்’ விருதுக்காக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தகவல்!

சொல்லப்போனால் அந்த விருது வாங்கும் தினத்திலும் சிவ சாகரம் ட்ரஸ்ட்டில் நித்ய பூஜை செய்யும் முறை எனக்கு வந்தது. இவை எல்லாமே சிவன் சார் எனக்காகக் கொடுத்த அனுக்ரஹம் என்றே எடுத்துக்கொள்கிறேன்.” பரவசத்தோடு கண்மூடி கைகூப்பி வணங்குகிறார் எஸ்.பி.காந்தன்.

இவருக்கு மட்டுமல்ல இன்னும்பல பக்தர்கள் வாழ்விலும் சிவன் சார் அருள்மாரிப் பொழிந்தது உண்டு!

- சிலிர்ப்போம்...

ஐயன் ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்?

`சாஸ்தா’ என்ற வார்த்தைக்கு, உன்னத ஆட்சியாளர், கட்டளை யிடுபவர், ஆள்பவர், தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம். ஹரிஹர புத்திரனை தர்ம சாஸ்தா என்று அழைக்கக் காரணம், அவர் தர்மத்தை நிலைநாட்டி ஆட்சி புரிகிறார்.

தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். `தர்மம் சர’ என்று வேதம் கூறுகிறது. கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் `எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன்’ என்று சொல்கிறார்.

மகா சாஸ்தா
மகா சாஸ்தா

ஒருவன் எப்போது தர்மத்தை நிலைநாட்டுகிறானோ, அப்போது அந்தச் செயல், இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்விகமானவனாக்குகிறது. நாளடைவில், இந்த தர்மம், அவனை தெய்விகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. இதுதான் தத்வமஸி. அந்தத் தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால், ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைக்கிறோம்.