Published:Updated:

பிறை சூடிய பெருமானுக்குத் திங்கள் வழிபாடு!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான் ( ஓவியர் ம.செ. )

- நமசிவாயம் ஓவியம்: ம.செ

பிறை சூடிய பெருமானுக்குத் திங்கள் வழிபாடு!

- நமசிவாயம் ஓவியம்: ம.செ

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான் ( ஓவியர் ம.செ. )

சோமவாரம் - திங்கள்கிழமை சிவபெருமான் வழிபாட்டுக்கு விசேஷமான நாள். இந்த விரதத்தை உத்தமமான விரதம் எனப் போற்றுகிறது திருவிளையாடற் புராணம்.

பிறை சூடிய பெருமானுக்குத் திங்கள் வழிபாடு!

ம் வாழ்வில் சுபிட்சங்கள் நிறைந்திடவும், நம்மைச் சூழ்ந்திருக்கும் கஷ்டங்கள் மற்றும் கவலைகளிலிருந்து மீளவும் இறையருள் அவசியம். ஆம்! விதிப்படி வாழ்வில் தடைகளும் சிரமங்களும் வரும்போதெல்லாம் நாம் சோர்ந்துவிடாமல், தடைகளையே படிக் கட்டுகளாக்கி முன்னேறும் வல்லமையை நமக்குத் தருபவை இறை வழிபாடுகள்தான்.

எனவேதான் நம் முன்னோர் மகிமை பொருந்திய நாள்களைக் குறித்து, அவற்றில் உரிய இறைவழிபாட்டை மேற்கொள்ளச் சொல்லி வழிகாட்டியிருக்கிறார்கள். அவ்வகையில் ஞானநூல்கள் போற்றும் வழிபாடுகளில் சிறப்பானது சோமவார பூஜை.

தட்சனின் சாபத்தால் தேய்ந்துவந்த சந்திரன், தன் வாட்டம் நீங்கிட சிவபெருமானை தவமிருந்து வழிபட்டான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் சோமன் மீண்டும் வளர்ந்து பொலிவு பெற அருள்செய்தார். அத்துடன் சந்திரனுக்கு ஏற்றம் தரும் வகையில், சந்திரனை தன் தலையில் சூடி பிறைசூடிய பெருமான் ஆனார்.

சோமனாகிய சந்திரன் சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற திங்கள்கிழமை சோமனுக்கு உரிய நாள் என்பதால் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் சந்திரன் தோன்றினார். சந்திரனை சிவபெருமான் சூடிய அஷ்டமியும் சிவபெருமானுக்கு உகந்த நாளானது. அதை மகாதேவ அஷ்டமி என்பார்கள். அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் நடு நாளாக இருக்கும் அஷ்டமி தினத்தில் மகாதேவராகிய சிவ பெருமானை வழிபடுவதால் நம் பாவங்கள் அனைத்தும் விலகும்.

கார்த்திகை மாதம் வரும் சோமவாரம் அதாவது திங்கள் கிழமைகளில் சகல சிவாலயாங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கார்த்திகை மாதம் மட்டுமல்ல எல்லா மாதங்களிலும் சோம வாரமாகிய திங்கள் கிழமையில் சிவபெருமானை வழிபடுவதால் சகல நலன்களும் கைகூடும். மனோகாரகனாகிய சந்திரனின் பூரண அருளும் கிடைக்கும். அதனால் நம் மனக்கவலைகள் நீங்கி வாழ்க்கைச் செழிக்கும்.

பிறை சூடிய பெருமானுக்குத் திங்கள் வழிபாடு!

சரி, சோமவார வழிபாடு செய்வது எப்படி?

முதன் முதலில் சோமவாரம் விரதம் தொடங்குபவர்கள் கார்த்திகை மாத திங்களன்று தொடங்குவது சிறப்பு. இயலாதவர்கள் ஏதேனும் ஒரு திங்கள் கிழமையன்று தொடங்கி தொடர்ந்து வாரம்தோறும் இந்த வழிபாட்டைக் கடைப்பிடிக்கலாம்.

சோமவார விரதம் கடைப்பிடிப்பவர்கள், திங்கள்கிழமை அன்று அதிகாலை எழுந்து நீராடித் தீருநீறணிந்து முறைப்படி சிவாலயம் சென்று வழிபட்டு வரவேண்டும். அன்று பகல் முழுவதும் உணவு அருந்தாமலும் தூங்காமலும் இருந்து மாலையிலும் கோயிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவேண்டும்.

இல்லத்திலும் சிவபுராணம் முதலான துதிப்பாடல்களைப் பாடி வழிபடலாம். பின்னர் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். பூஜையின் போது சிவபெருமானுக்குரிய கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி அவரைத் தியானித்து வழிபடுவது விசேஷம்.

வந்தே சம்பும் உம்பாதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்

வந்தே பன்னக பூஷணம் ம்ருக தரம் வந்தே பசூனாம்பதிம்

வந்தே சூர்ய சசாங்க வஹ்னிநயனம் வந்தே முகுந்தப்ரியம்

வந்தே பக்தஜனாச்ரயம் ச வரதம் வந்தே சிவம் சங்கரம்

அதேபோல் சிவனாருக்குரிய காயத்ரீயை திங்களன்று 108 முறை ஜபிக்கலாம்.

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்


அதேபோல் கீழ்க்காணும் அர்ச்சனை நாமங்களைக் கூறி வில்வம் கொண்டு அர்ச்சித்து சிவபெருமானை வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

ஓம் சிவாய போற்றி
ஓம் சம்பவே போற்றி
ஓம் சசிசேகராய போற்றி
ஓம் வாமதேவாய போற்றி
ஓம் பவாய போற்றி
ஓம் சர்வாய போற்றி
ஓம் நீலகண்டாய போற்றி
ஓம் அனந்தாய போற்றி
ஓம் கங்காதராய போற்றி
ஓம் திகம்பராய போற்றி
ஓம் பசுபதயே போற்றி
ஓம் த்ரியம்பகாய போற்றி
ஓம் உமாபதயே போற்றி
ஓம் ருத்ராய போற்றி
ஓம் சதாசிவாய போற்றி
ஓம் மகாதேவாய போற்றி
ஓம் பரமேஸ்வராய போற்றி

இவ்வாறு திருநாமம் கூறி அர்ச்சனை செய்த பிறகு தூப-தீப ஆராதனையுடன் நைவேத்தியம் சமர்ப்பித்து வணங்கலாம். அத்துடன் கீழ்க் காணும் பதிகத்தைப் பாடி குடும்பத்துடன் சிவ பெருமானைப் பணிந்து வணங்கி வரம்பெறலாம்.

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லா பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!

பிறை சூடிய பெருமானுக்குத் திங்கள் வழிபாடு!

சூரியனும் சந்திரனும்!

முருகப்பெருமானின் வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வானையும் தரிசனம் தருவார்கள். இவர்களில் வள்ளி தாமரையுடனும் தெய்வானை நீலோற்பல மலருடனும் காட்சி தருவார்கள். இதுகுறித்து சுவாரஸ்யமாக விளக்கம் சொல்வார் வாரியார்.

``எம்பெருமானின் வலக் கண்-சூரியன்; இடக் கண்-சந்திரன். சூரியனின் ஒளி பட்டு மலர்வது தாமரை; சந்திரனின் ஒளிபட்டு 60 நாழிகைகள் மலர்ந்திருப்பது நீலோற்பலம். ஆகவேதான் முருகனுக்கு வலப்புறம் நிற்கும் வள்ளியம்மை தாமரையுடனும், தெய்வானை நீலோற்பலமும் கொண்டு காட்சி தருகிறார்கள். சிலர், இரண்டு தேவியரும் தாமரை மலர்களையே வைத்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள். அது தவறு! தேவியரின் கரங்களில் இருக்கும் மலர்கள்-முருகனின் பார்வையால் அவன் அடியவர்களின் வாழ்க்கை மலரும் என்பதை உணர்த்தும்'' என்பாராம்.

- இல.மணியரசன், மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism