Published:Updated:

பேச்சு பேச்சா இருக்கணும்

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து!

`ஒலிகளிலேயே மிக இனிமையானது புகழ் வார்த்தைதான்’ என்கிறார் அமெரிக்க தத்துவவியலாளர் ஸெனோபோன். புகழுக்கு மயங்காத மனிதர் எவர்? இந்தக் கேள்விக்கு `யாருமில்லை’ என்று மறுத்துவிடவும் முடியாது. ஞானிகளும், சில பண்பட்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருவான்மியூருக்கு அருகே காந்திசிலை திறப்புவிழா. தலைமை காமராஜர். அவருக்கு அருகே ஒரு பிரபல பத்திரிகையாளர் அமர்ந்திருந்தார். கூட்டம் ஆரம்பித்தபோதே வானத்தில் கருமேகங்கள் திரண்டு பெருமழை பெய்யக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. ஒருவர் வரவேற்புரை நிகழ்த்தினார். அடுக்குமொழியில் காமராஜரின் புகழ்பாட ஆரம்பித்தார். அவர் அனுபவித்த சிறைவாசம், அவருடைய திறமை, அரசியல் அனுபவம், நேர்மை எல்லாவற்றையும் விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

காமராஜர்
காமராஜர்


காமராஜர் முகத்தில் மெள்ள மெள்ளக் கடுமை கூடிக்கொண்டிருந்தது. தன் அருகிலிருந்த பத்திரிகையாளரிடம் சொன்னார்... ``மழை வந்துடும்போல இருக்கு. ஜனங்களெல்லாம் மழையில மாட்டிக்குவாங்கபோலயே... இவர் என்ன என்னைப் பத்திப் பேசிக்கிட்டே இருக்காரு?’’ பேச்சாளர் பேசுவதை நிறுத்தவில்லை.

காமராஜர் பொறுமை இழக்க ஆரம்பித்தார். பத்திரிகையாளரிடம் சொன்னார்... ``என்ன இது? இன்னிக்கு காந்தியைப் பத்திப் பேச வந்திருக்காங்களா இல்லே என்னைப் பத்திப் பேச வந்திருக்காங்களா? இது நல்லது இல்லையேன்னேன்...’’ பேச்சாளர் மேலும் பேசிக்கொண்டே போக, சடாரென்று எழுந்தார் காமராஜர். பேசிக்கொண்டிருந்தவரின் அருகே போய், ``கொஞ்சம் நிறுத்துங்க...’’ என்றார். மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார். ``இவருக்கு என்மேல ரொம்ப நல்ல அபிப்ராயம். நான் ரொம்ப சாதனையெல்லாம் செய்துபுட்டவன். பெரிய தியாகி. அதை எல்லாரும் புரிஞ்சுக்கிட்டீங்க இல்லே? இது போதும்னேன். இனிமே காந்தியைப் பத்திப் பேசுவோம். என்னைப் பத்திப் பேசவா இங்கே கூட்டம் போட்டிருக்காங்க?’’ இப்படிச் சொல்லிவிட்டு பேசியவரை அமரச் சொன்னார். அந்தப் பத்திரிகையாளர் சோ. `காமராஜை சந்தித்தேன்’ என்ற நூலில் இந்த நிகழ்வைக் குறிப்பிட்டிருக்கிறார்.

சில பேச்சாளர்களை காமராஜரைப்போல நேரடியாகச் சொல்லிப் பேச்சை நிறுத்தலாம். துடுக்கான சிலருக்கு வேறு வழிமுறைதான் உதவும். பிரிட்டன் பிரதமராக சர்ச்சில் இருந்த நேரம். அவருடைய வாதத்தைப் பொறுக்க முடியாத எதிர்க்கட்சி பெண் அரசியல்வாதி ஒருவர் சொன்னார்... ``நீங்க மட்டும் எனக்குக் கணவரா வாய்ச்சிருந்தீங்க... காபியில விஷத்தைக் கலந்து கொடுத்திருப்பேன்.’’ சர்ச்சில் சொன்னார்... ``உங்களை மாதிரி மனைவி வாய்ச்சிருந்தா அதை சந்தோஷமா வாங்கிக் குடிச்சிருப்பேன்.’’