ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ஆறே மாதங்களில் கற்க முடியுமா!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

ஆன்மிகக் கதை

முடியாது என்று உலகில் எதுவும் இல்லை. அதிலும் கல்வியைப் பொறுத்தவரை முடியாது என்ற எண்ணமே தவறானது. எந்த வயதிலும் யாரும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். அதற்கான ஊக்கமும் முயற்சியுமே வேண்டும். இதை நிரூபிக்கப் பழங்கால ஒரு நிகழ்வு ஒன்று உண்டு.

ஆன்மிகக் கதை
ஆன்மிகக் கதை


சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலன் என்ற சாதவாஹன மன்னன் இருந்தான். அவன் மனைவி பெயர் மலயவதி; அறிவுத்திறன் வாய்ந்தவள். வடமொழியில் புலமை பெற்றவள். இருவரும் ஒருநாள் ஆற்றில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தபோது, ஹாலன் மலயவதி மீது நீரை அள்ளி வீசி விளையாடினான். உடனே மலயவதி, ‘மோதகஸ் தாடய’ என்று சம்ஸ்கிருதத்தில் சொன்னாள். இதன் பொருள், ‘தண்ணீரால் அடிக்காதீர்கள்’ என்பதுதான்.

ஹாலனுக்கோ வடமொழி தெரியாதது. அவள் கூறியதை, ‘மோதகம் வேண்டும்’ என்று கேட்பதாகப் புரிந்துகொண்டான். பணியாளர்களிடம் சொல்லி மோதகம் கொண்டுவரச் செய்து மலயவதியிடம் கொடுத்தான். அவள் சிரித்துவிட்டாள். பிறகு, தான் கூறியதன் பொருள் என்ன வென்று ஹாலனுக்கு விளக்கினாள்.

இதைக் கேட்ட ஹாலனுக்கு அவமானமாகப் போய்விட்டது. தனக்கு சம்ஸ்கிருதம் தெரியவில்லையே என்று வருந்தினான். ‘எப்படியும் ஆறே மாதத்தில் சம்ஸ்கிருதம் கற்றே தீருவேன்’ என்று சபதம் செய்தான். ஆனால் கடினமான இலக்கணம் கொண்ட சம்ஸ்கிருதத்தை ஆறுமாததில் கற்க முடியாது என்று புலவர் குணாட்டியர் சவால் விட்டார். ஆனால், `சர்வ வர்மா’ என்ற பண்டிதன் தன்னால் கற்பிக்க முடியும் என்றார்.

குணாட்டியருக்குக் கோபம் வந்தது. ‘ஆறு மாதத்தில் நீர் மன்னனுக்கு சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டால் இனி நான் எழுதவே மாட்டேன்’ என்று சபதம் செய்தார். நிறைவில் மன்னனின ஊக்கமே வென்றது. அவன் இரவும் பகலுமாக உழைத்து ஆறே மாதத்தில் சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்றான்.

குணாட்டியர் வெட்கம் அடைந்து அவமானத்தில் தான் எழுதிய நூலை எரித்துவிட முயன்றார். ஹாலன் அதைத் தடுத்து நூலைக் காப்பாற்றினான். பிற்காலத்தில் ஹாலனே பெரும் கவிஞன் ஆனான். `காதா சப்த சதி’ என்னும் பிராகிருத நூலைத் தொகுத்தது இந்த ஹாலன்தான்.