திருக்கதைகள்
Published:Updated:

'மகிழ்ச்சியின் ரகசியம் இதுதான்!'

துளித் துளிக் கடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
துளித் துளிக் கடல்கள்

துளித் துளிக் கடல்கள்

அந்தச் சத்திரத்தில் ஊரே திரண்டிருந்தது. வெளியூரில் இருந்து வந்திருக்கும் ஜென் குரு ஒருவர் அங்கு தங்கியிருந்தார். அவரை தரிசித்து ஆசிபெறவே உள்ளூர்க்காரர்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர்.

துளித் துளிக் கடல்கள்
துளித் துளிக் கடல்கள்


குரு தரிசனம் ஆரம்பமானது. ஒவ்வொருவரும் தங்களின் பிரச்னைகளைக் கூறி, அதற்கான தீர்வுகளைக் கேட்டுச் சென்றனர். இந்த நிலையில் கூட்டத்தில் மிகவும் முகவாட்டத்துடன் நின்றிருந்த அன்பர் ஒருவரைக் கண்டார். அவரை அருகில் அழைத்தார்.

“என்னப்பா உனக்குப் பிரச்னை. ரொம்ப சோர்வா இருக்கியே!” எனக் கேட்டார் ஜென் குரு.

“கூலி வேலை செய்கிறேன். குறைவான சம்பளம். வருமானம் பத்தல சாமி. அதனால குடும்பத்தில் பல பிரச்னைகள்!”

“ஏன், சம்பளம் அதிகமா கிடைக்கிற வேறு வேலைக்கு முயற்சி பண்ணல?”

“இல்ல சாமி... இந்த வேலையை விட்டுட்டு, வேற வேலையும் கிடைக்கலேன்னா இருக்கிறதும் போயிடுமே... பயமா இருக்கு சாமி!”

“சுயதொழில் எதுவும் தெரியாதா?”

“சில தொழில்கள் தெரியும். ஆனா செய்யலாமா, வேணாமா, லாபம் கிடைக்குமா, நஷ்டம் ஆயிடுமான்னு பல குழப்பங்கள்... பயம் வேறு...’’ என்றவர், குருவிடம் கெஞ்சும் குரலில் கேட்டார்:

``சாமி! நான் வாழ்க்கையில சீக்கிரமா முன்னுக்கு வரணும். அதுக்கு ஏதாவது ஒரு மந்திரமோ, பரிகாரமோ சொல்லுங்க!”

“அப்படியா? சரி! இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி மட்டும் நீ குரங்குகளை நினைக்காதே. போயிட்டு காலையில வா. நான் உன் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கிறேன்!” என்றார் குரு.

“என்ன சாமி சொல்றீங்க? எனக்குப் புரியலையே! நான் எதுக்குக் குரங்குகளை நினைக்கப் போறேன்..?’

“எதிர்க் கேள்வி கேட்காதே. நான் சொல்றத மட்டும் செய். இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி குரங்குகளை நினைக்காதே!’’ என்று கண்டிப்புடன் கூறினார் குரு.

அந்த அன்பர் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் சத்திரத்தில் இருந்து வெளியேறினார்.

அன்று இரவு முழுதும் தூங்கவே இல்லை. குரு எதை நினைக்க வேண்டாம் என்று சொன்னாரோ, அந்தக் குரங்குகள் நிறைய எண்ணிக்கையில் எல்லா இடங்களிலும் வாயைப் பிளந்து சிரித்துக் கொண்டு நிற்பது போல் இருந்தது. சில குரங்குகள் அவன் மேல் பாய்ந்து கடிப்பது போல் ஒரு கற்பனை!

‘என்னாச்சு நமக்கு. போன ஜன்மத்தில் ஏதாவது குரங்கைக் கொன்னுருப்போமா? அதனால்தான் இந்தப் பரிகாரத்தைக் குரு சொல்லியிருக்கிறாரோ... ஆனால் இப்ப என்னால குரங்குகளை நினைக்காம இருக்க முடியலையே... ஏற்கெனவே குழப்பத்தில் இருந்த என்னை குரு மேலும் குழப்பிட்டாரே!’ என்று அவர் மனசுக்குள் பல கேள்விகள். தூக்கம் தொலைந்தது; அவரின் எண்ணத்திலும் காட்சியிலும் ஆயிரக்கணக்கான குரங்குகள் கூடி நின்று கும்மி அடித்தன!

அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு குருவைப் பார்ப்பதற்கு ஓடினார்.

“குருவே! எனக்கு அதிக சம்பளம் உள்ள வேலை எல்லாம் வேண்டாம்; வேறு தொழிலும் வேண்டாம். இந்தக் கூலி வேலையே போதும். தயவுசெய்து என்னைத் துரத்தும் குரங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள். எங்கு பார்த்தாலும் குரங்காக இருக்கிறது. இந்தக் குரங்குச் சிந்தனைகள் என்னை தற்கொலைக்குத் தூண்டுகின்றன. தயவுசெய்து காப்பாற்றுங்கள் குருவே!” என்று அவர் காலடியில் விழுந்து கதறினான்.

குரு சிரித்தார்.

“மகனே! உன்னை எந்தக் குரங்கும் பீடிக்கவில்லை; கடித்துக் குதறவும் இல்லை. முதலில் குரங்கு பயத்தைப் போக்கி மனதை இயல்பாக இருக்கச் செய்!”

அவன் மீண்டும் குழப்பமானான்!

“என்ன சொல்கிறீர்கள் குருவே? மறுபடியும் முதல்லேருந்தா?”

குரு விளக்கினார்: “உன் எண்ணங்களை ஆளும் அரசன் நீயே. வெளியிலிருந்து யாரும் உன் மனசுக்குள் புகுந்து உன் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. நான் சொன்னேன் என்பதற்காக நீ ஏன் குரங்கின் வாலைப் பிடித்து ஓடினாய்?

முடியாது, நடக்காது என்ற எதிர்மறை எண்ணங்களை விரட்டு. தேவையற்ற பயங்களைத் துரத்தி அடி. உன்னால் முடியும் என்று உறுதியாய் நம்பு. வெற்றியின் மந்திரம், மகிழ்ச்சியின் ரகசியம் இது மட்டுமே. எல்லாம் நலமாகும்!”

நம்பிக்கை மந்திரம் நாளும் சொல்வோம்!

நாளைய மகிழ்ச்சியை இன்றே வெல்வோம்!

- பருகுவோம்...