Published:Updated:

ஆறு மனமே ஆறு!

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு!

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20-ம் நாள் சர்வதேச மகிழ்ச்சி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது... மகிழ்ச்சி! வாழ்க்கை முழுக்க இயற்கையாக ஏற்படவேண்டிய ஒன்றை ஆண்டுக்கு ஒருமுறையேனும் நினைவில் கொள்கிறோம். ஆனால், அது போதுமா?

சர்வதேச மகிழ்ச்சி நாள்
சர்வதேச மகிழ்ச்சி நாள்
triloks


எப்போதுமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் படியான வாழ்க்கை அனைவருக்கும் தேவை. ஒரு மனிதன் மகிழ்ச்சியுடனும் மனநிறைவோடும் இருந்தாலே, ஒட்டுமொத்த நற்குணங்களும் அவனுள் அடங்கிவிடும் என்பார்கள் சான்றோர்கள்.

மகிழ்ச்சியைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்? அதற்கு அவசியம் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் துக்கத்துப் பிறகு வருவது தான் மகிழ்ச்சி என்று கருதுகின்றனர். அப்படியல்ல... மகிழ்ச்சி இல்லாத நிலையே துக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சி துக்கம் இரண்டும் இணை பிரியா நண்பர்கள் என் செல்லங்களே!

அது சரி... மகிழ்ச்சி என்றால் என்ன?

மகிழ்ச்சி என்பது...

குழந்தைகளுக்கு பொம்மைகள், சாக்லேட் போன்றவை மகிழ்ச்சியைக் கொடுக்கும். இளைஞர்களுக்குப் பகட்டான உடைகள், புதுப் புது வாகனங்கள், உணவகங்களுக்குச் சென்று பணம் செலவழிப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். அதேபோல் நகைகள் சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்னும் சிலருக்கு வீடும் சொத்தும் சேர்ந்தால் மகிழ்ச்சி.

இப்படி பலவிதங்களில் நம் சமூகம் மகிழ்ச்சியைச் சந்திக்கிறது. ஆனால் அது உண்மையான மகிழ்ச்சியா? பின்னே... வேறு எவ்விதம் மகிழ்ச்சி வந்து சேரும். இதுதானே உலகின் யதார்த்தம்’ என்று நீங்கள் கேட்கலாம். மேலே சொல்லப்பட்ட விஷயங்களால் கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல!

பிறகு, உண்மையான மகிழ்ச்சி என்பது என்ன?

பிறர் மீது அன்பு செலுத்துங்கள். அன்பைப் பெறுபவரைக் காட்டிலும் கொடுப்பவருக்கே அதிக இன்பம் கிடைக்கும் என்கின்றனர் ஆன்றோர். ஆகவே, நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீது அக்கறை செலுத்தினாலே பொதும். அதுவே உண்மையான நிலையான மகிழ்ச்சியைத் தரும். இதைப் பலமுறை அம்மா சொல்லியிருக்கிறேன். அடுத்தவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தால் நாம் மகிழ்ச்சி அடைவதோடு, அந்த உணர்ச்சி நமக்குள் நல்ல மாற்றத்தையும் அளிக்கும்.

சமூகத்தில் நாம் பெற்ற இன்பத்தைப் பிறருடன் பங்கிட்டுக் கொள்வதைவிட வேறு சுகம் ஏதேனும் உண்டா? அவ்வாறு நம் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு உலகில் ஈடு இணை ஏதும் இல்லை; இது என் அனுபவப் பாடம் செல்லங்களே!

நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பது நாம் எடுக்கும் முடிவால் ஏற்படுவதே. எவ்வித துக்கத்தைக் கொடுக்கும் சூழலிலும் கூட, அந்தச் சூழலைக் கடப்பது புன்னகையுடனா அல்லது சோகத்துடனா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

நாம் எந்த முடிவெடுத்தாலும் காலம் நமக்காகக் காத்திருக்காமல் கடந்துபோகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையைக் குதூகலமாக சந்திக்க நினைத்தால், அது உங்களைச் சுற்றிலும் இன்பமயமான சூழலை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆகவே நீங்கள் எப்போதும் மலர்ந்த உள்ளத்துடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து மற்றவரையும் அப்படிச் செயல்படவைக்க முயற்சி செய்யுங்கள்.

சோகம் - துக்கம்

சோகம் அல்லது துக்கம் என்பது என்ன? ஒரு முறை அப்துல் கலாம் அவர்களிடம் ``வெளிச்சத்துக்கு எதிர்ப்பதம் இருளா?’’ என்று சிலர் கேட்டனர். அவர் ``இருட்டு என்று தனியாக ஒன்று இல்லை. சூரியனின் வெளிச்சம் படாத பகுதி இருளாகிவிடுகிறது. மற்றொரு பகுதியில் சூரியன் ஒளிரத்தான் செய்கிறது. ஆகவே வெளிச்சத்துக்கு எதிர்ப்பதம் வெளிச்சம் இல்லாத நிலை என்றே எடுத்துக்கொள்வோம்’’ என்றார்!

சோகம் அல்லது துக்கம் என்பதுவும் நாம் கண்டுபிடித்த பல்வேறு சொற்களில் ஒன்றுதான். எப்போதெல்லாம் நாம் சந்தோஷமாக இருப்பது இல்லையோ, அப்போதிருக்கும் மனநிலைதான் சோகம் அல்லது துக்கம். அதற்குக் காரணம் நீங்களாகத்தான் இருக்கமுடியும்!

சோகத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளும் புத்தியும், திறமையும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. ஆண்டவனின் படைப்பில் மற்ற உயிரனங்களுக்கு இல்லாத வரப்பிரசாதம் அது. நாம் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவேதான், `மகிழ்ச்சியாக இருப்பதற்கான முடிவை நாம்தான் எடுக்க வேண்டும்’ என்று சொன்னேன்.

அம்மாவின் கட்டளைகள்

மகிழ்ச்சியாக இருக்க, உங்களுக்கு அம்மாவின் அன்புக் கட்டளைகள் சில உண்டு.

முடிந்தவரையிலும் உடலையும் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்படி வாழ ஆன்மிகத்தில் ஈடுபடுவது மிகவும் அவசியம்.

இயற்கையின் சக்தியைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதைப் பாதுகாப்பதை நம்முடைய அன்றாடக் கடமையாக உணர்ந்து செயல்படவேண்டும்.

வாழ்க்கையை எந்தவொரு வட்டத்துக்குள்ளும் அடக்கிவிடாமல், எதையும் கடந்துசெல்லும் பாதையில் நடத்திச்செல்ல வேண்டும்.

சுயநலம் மற்றும் பொதுநல செயல்பாடுகளுக்கு இடையே சிக்காமல், ஓர் சமநிலையை உருவாக்கவேண்டும்.

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி


எளிய வழிமுறைகள்...

`வாழ்வில் மகிழ்ச்சி என்பதே தொலைந்துவிட்டது; நிம்மதி காணாமல் போய்விட்டது’ என்று புலம்பும் அன்பர்களின் கவனத்துக்கு... கலி காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பது தானாக நடப்பதல்ல. நாம்தான் கவலையைப் புறந்தள்ளி வாழப் பழக வேண்டும். அதற்கான சில எளிய வழிமுறைகள் உண்டு.

நம்மிடம் உள்ள பணத்தை மட்டுமே அடிக்கடி எண்ணி பார்த்துக்கொண்டு இருக்காமல். நம்மிடம் எவ்வளவு நேரம் உள்ளது, அதனை நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக்குவது எப்படி என்று யோசியுங்கள். கடந்து சென்ற காலம் கடந்ததுதான்; திரும்ப வராது! நம்முடன் பயணிக்கும் நல்ல மனிதர்கள், இயற்கை ஆகியவற்றுக்கு நன்றி உள்ளவர்களாக இருங்கள்.

நல்ல உறக்கத்தைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்; மனம் அமைதிப்படும். அதுவே மகிழ்ச்சிக்கும் வழிகாட்டும். தியானம் - இதுவும் ஒருவகை உறக்கம்தான்; தன்வசப்படாத மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு வகை உறக்கம். தியானத்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்க உதவும் மார்க்கம் அது.

குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் அதிக நேரம் செலவிடுங்கள். ஏதோ ஒன்றைக் காரணம் காட்டி அத்தகைய மகிழ்ச்சியான தருணங்களை விலக்கிவைப்பதே நிம்மதியற்ற நிலைக்குக் காரணம் ஆகிவிடுகிறது. கண்களில் கருணையுடனும் அழகிய கரங்களால் அடுத்தவருக்குக் கொடுத்து உதவும் மனத்துடனும் மகிழ்ச்சியான இதயம் கொண்டவராக வாழ்ந்து வளம் பெறுங்கள்!

- மலரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism