Published:Updated:

சிந்தனை விருந்து: எது பொய் ஒழுக்கம்!

பொய் ஒழுக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பொய் ஒழுக்கம்

- பாக்கியம் ராமசாமி

சிந்தனை விருந்து: எது பொய் ஒழுக்கம்!

- பாக்கியம் ராமசாமி

Published:Updated:
பொய் ஒழுக்கம்
பிரீமியம் ஸ்டோரி
பொய் ஒழுக்கம்

ஒரு பணக்கார நண்பருக்கு எப்போதும் ஒரு சந்தேகம்; தீராத சந்தேகம். ‘`நான் இன்று காரில் வந்த போது சிக்னலில் வண்டியை நிறுத்தினான் டிரைவர். உடனே ஒரு பிச்சைக்காரன் கார் ஜன்னல் அருகில் வந்து கையை உள்ளே நுழைத்து, ‘ஐயா, தர்மம்!’ என்று குரல் கொடுத்தான்.

எனக்கு அவன்மீது பரிதாபம் ஏற்பட்டது. கடவுளின் பாரபட்சத்தை நினைத்து வருந்தினேன். ‘நான் வசதியாகக் காரில் செல்கிறேன். இவனோ சாப்பாட்டுக்காகப் பிச்சை எடுக்கிறான். கடவுள் ஏன் சிலரைப் பணக்காரராகவும், சிலரை ஏழையாகவும் படைத்துவிட்டான்? இந்தக் கேள்விக்கு யாராவது விடை சொன்னால் எனக்கு ஆறுதலாக இருக்கும்.’’

இதே கேள்வியை அந்தப் பணக்காரர் அடிக்கடி எழுப்பு வார். ஆளாளுக்குத் தங்களுக்குத் தெரிந்த பதிலைச் சொல்வார்கள். ஆனாலும் அவருக்குத் திருப்தி வராது.

ஒரு தினம், சத்சங்கத்துக்கு ஒருவர் தனது பேரனை அழைத்து வந்திருந்தார். அன்றும் பணக்காரர் தனது மாமூலான கேள்வியை நண் பர்கள் முன் வைத்தார். தவிர, தனக்கு அன்று நடந்த சம்பவம் ஒன்றையும் கூறினார்.

அன்று காலையில், அவரது வீட்டுக்கு ஒரு தம்பதியர் மகா ஆசாரமாகப் பளபளவென்று விபூதிப் பட்டையும் மஞ்சளும் குங்குமமாக பளிச் சென்று வந்தார்களாம்.

‘ஆந்திராவிலிருந்து வரோம். எங்களுக்கு மத்தியான பிக்ஷயை உங்கள் கைங்கர்யமாகச் செய்தால் புண்ணியமாயிருக்கும். இரண்டு பேரும் சாப்பிட ஒரு 100 ரூபாயாவது எதிர்பார்க்கிறோம்’ என்றார்களாம்.

‘`அவர்களைப் பார்த்தால் வறுமையானவர்களாகத் தெரியவில்லை. இது மாதிரி விபூதி, குங்குமம் அணிந்து கௌரவப் பிச்சை கேட்பது இவர்கள் தொழில் போலும்! இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளை ஆதரிக்கக் கூடாது என்று விரட்டிவிட்டேன்.

கடவுள் ஏன் தான் இப்படி ஒரு சிலருக்கு ஏமாற்று கிற புத்தியைக் கொடுத்துவிடுகிறாரோ?’’ என்று சபையினரிடம் கேட்டார்.

யாரும் எதுவும் பேசவில்லை. அவரது கேள்வி எல்லோரையும் சிந்திக்கச் செய்து, மௌனமாக்கி விட்டது. அப்போது ஒரு சின்னக் குரல் மௌனத்தைக் கலைத்து, ஒலித்தது.

‘`என்ன மாமா நீங்க! அந்தப் பிச்சைக்காரனுக்கும் பைசா போடலே; இவங்களுக்கும் எதுவும் கொடுக்கலே. ‘யாராவது கஷ்டம்னு வந்தா, நம்மளால முடிஞ்ச உதவியை நாம செய்யணும். ஏன் எதுக்கு, நல்லவனா கெட்டவனான்னெல்லாம் ஆராய்ச்சி பண்ணிண்டு, ஒண்ணும் கொடுக்காம இருந்திடக் கூடாது. பாவமோ, புண்ணியமோ அவனோட சேர்த்தி’ அப்படின்னு எங்க பாட்டி சொல்லுவா!’’ என்றான் அந்தக் குட்டிப் பையன் வெடுக்கென்று.

அவனது பதிலைக் கேட்ட அனைவரும் பிரமித்துவிட்டனர்.

வாயில் வறட்டு வேதாந்தம் பேசிக் கொண்டு, நடைமுறை யில் குணக் கேடனாக இருப்பவனை ‘மித்தியா சாரன்’ (பொய் ஒழுக்கம் உடையவன்) என்று விவரிக்கிறது பகவத்கீதை.

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் I
இந்த்ரியார்த்தான்விமூடாத்மா
மித்யாசார: ஸ உச்யதே II


நல்ல காரியங்களைச் செய்யாமலிருப்பதோடு, அப்படிச் செய்யாமலிருப்பதற்கு நல்லது போன்ற ஒரு காரணம் கற்பித்துக்கொள்வதும் பொய் ஒழுக்கம்தான். அடிமனத்தில் சுயநலத்தை அனுபவித்துக் கொண்டு, மேலுக்கு நல்லவன்போல் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவன் பொய்ஒழுக்கமுடையவன் என்று அழுத்தமாகக் கூறுகிறது கீதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism