Published:Updated:

சிந்தனை விருந்து - நானா, தானா, வேணா!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து ( சிந்தனை விருந்து )

பாக்கியம் ராமசாமி

ம்ம ஆள் ஒருத்தருக்கு ‘அரவை மாஸ்டர்’னு பேரு. சதா காலமும், எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டே இருப்பார். சமையலறை டப்பாக்களில் கடுகு, மிளகாய், பெருங்காயம் போன்ற ஒரு சில வஸ்துக்கள்தான் அவரது பார்வைக்குத் தப்பிப் பிழைக்கும்.

வீட்டில் தின்பது போதாதென்று, ஆபீசில் தனது மேஜைக்குள் ஒரு (தின்)பண்டக சாலையே வைத்திருப்பார். இத்தனையும் தின்றுத் தின்று அவரது வயிறு சால் மாதிரி பெருத்துவிட்டது. ஆனால், அசை போடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை, அவர்!

இடையில் அவரை நீண்ட நாள் பார்க்க முடியாமல் போயிற்று. தர்மபுரிக்கு மாற்றலாகிவிட்டார். ஆறு மாதம் கழித்து, விசேஷம் ஒன்றுக்காகச் சென்னை வந்தவர், அப்படியே என் வீட்டுக்கும் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும், தூக்கிவாரிப்போட்டது. அரவை மாஸ்டர், அரை மாஸ்டராகி இருந்தார். அடையாளமே தெரியாத அளவுக்கு ஒல்லிப் பிச்சானாகி இருந்தார்.

`என்னய்யா ஆச்சு..? ஏதாவது வியாதி கியாதி வந்து படுத்துட்டியா? இப்படி இளைச்சுப் போயிட்டியே?’ என்று பேசிக்கொண்டிருந்த சுவாரஸ்யத்தில், அவருக்குக் காபி உபசரிக்க மறந்தே போனோம்.

அவரும் தனது வழக்கப்படி, ‘என்னப்பா... காபி கீபி எதுவும் கிடையாதா?’ என்று உரிமையோடு கேட்கவில்லை. அவர் எப்போது என் வீட்டுக்கு வந்தாலும், உரிமையோடு ஃப்ரிஜ்ஜைத் திறந்து முந்திரியோ, திராட்சையோ, பிஸ்கட்டோ, வேறு கொறிக்கும் பொருளோ இருந்தால், சுவாதீனமாக எடுத்து வாயில் போட்டு மெல்லுவார். இப்போது ஆசாமி இடத்தைவிட்டே எழுந்திருக்கவில்லை. உடல் இளைக்க ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக் கிறார் என்று தோன்றியது.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து‘`என்னய்யா, ஆளே அடியோடு மாறிட்டே?’’ என்று சிரித்தேன். புரிந்துகொண்டவராய், ‘`என்னுடைய இளைப்பின் ரகசியம் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படறீர்... அதானே?’’ என்றவர், தொடர்ந்து சொன்னார்... ‘`அது ஒரு மந்திரம் - நானா, தானா, வேணா!’’

‘`இதுவரை நான் கேள்விப் படாத மந்திரமாய் இருக்கே?’’ என்றேன்.

‘`சொல்றேன். ‘நானா’ என்றால், நானாக எதையும் இஷ்டப்படி எடுத்துச் சாப்பிடு வது; ‘தானா’ என்றால், தானாக வருவதை- அதாவது, பிறர் தானாக முன் வந்து தருவதை மட்டுமே சாப்பிடுவது; ‘வேணா’ என்றால், யார் வலிய வந்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லிவிடுவது.

முதல் நாள் ‘நானா’, மறுநாள் ‘தானா’, மூன்றாம் நாள் ‘வேணா’. சாப்பிடுவதில் இந்த மாதிரி ஒரு வழிமுறையை நானே உருவாக்கிக்கொண்டு, அதன் படி நடக்கத் தொடங்கினேன். என் தொப்பை நாலே மாதத்தில் கரைந்துவிட்டது!’’ என்றார் அரவை மாஸ்டர்- மன்னிக்கவும், என் நண்பர் ரமணி.

அவராக ஃப்ரிஜ்ஜைத் திறக்காததும், எதையும் கேட்காததும் ஏன் என்று புரிந்தது. அதாவது, அன்று அவருக்கு ‘தானா’ தினம்; யாராவது கொடுத்தால், மட்டுமே அதைச் சாப்பிடும் தினம்.

யோகியின் லட்சணங்களில் ஒன்றாக, ‘யத்ருச்சயா லாப சந்துஷ்ட:’ என்கிறார் கிருஷ்ண பகவான். ‘தற்செயலாகக் கிடைக்கும் நன்மையில் திருப்தி அடைபவன்’ என்பது அதற்குப் பொருள். சாப்பாட்டு விஷயத்தில், நண்பர் ரமணி அந்தப் புத்திமதியை அனுசரித்துப் பலன் கண்டுவிட்டார்!

(11.1.2011 இதழில் இருந்து...)