ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

'24 மணி நேர கோபம்!'

துளித்துளிக் கடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
துளித்துளிக் கடல்கள்

துளித்துளிக் கடல்கள்

ஜென் குரு ஒருவர் ஓர் ஊருக்கு வெளியே வந்து முகாமிட்டிருந்தார். அவருடைய சீடர்கள் ஊருக்குள் சென்று “உங்கள் மனக் குறைகளைக் குருவிடம் வந்து பகிர்ந்துகொண்டு தீர்வு காணலாம்!” என்று அறிவித்தனர்.

துளித்துளிக் கடல்கள்
துளித்துளிக் கடல்கள்


ஊர் மக்கள் ஜென் குரு முகாமிட்டிருந்த இடத்தில் குவிந்தனர். வரிசையாக குருவிடம் சென்று தங்கள் மனக்குறைகளை சொல்லித் தீர்வு கேட்டனர்.

வரிசையில் வந்த ஒருவன் குருவிடம் சென்று “ஐயா! எனக்கு எப்போதும் கோபம் வருகிறது. எதைப் பார்த்தாலும் கோபம் வருகிறது; யாரைப் பார்த்தாலும் கோபம் வருகிறது. அதனால் என்னைப் பார்த்து மற்றவர்களுக்குக் கோபம் வருகிறது. இந்த அடங்காத பெருங் கோபத்தை எப்படி ஐயா நான் தீர்ப்பது?” என்று கேட்டான்.

குரு சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. நீண்ட மௌனத்துக்குப் பிறகு அவனைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். “ஐயா! நான் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா... என் கோபத்தை எப்படியாவது என்னிடமிருந்து விரட்டியடிக்க வழி சொல்லுங்கள்” என்றான்.

இப்போது குரு வாய்விட்டுச் சிரித்தார். “ம்! உனக்குக் கோபம் வருகிறது. அதுதானே உன் பிரச்னை? சரி… அதை நான் சரிசெய்து விடுகிறேன். அந்தக் கோபத்தை எடுத்து என்னிடம் கொடு!” என்று அவனைப் பார்த்து கையை நீட்டினார்.

அவன் அவரை முறைத்துப் பார்த்தான். “ஐயோ ஐயோ... கோபம் என்பது மனதில் உள்ளது. பெரிய ஞானியான உங்களுக்கு இதுகூட தெரியாதா? அதை எப்படி நான் எடுத்து உங்கள் கைகளில் கொடுப்பது?”

குரு மீண்டும் சிரித்தார். “உன்னால் உன் கோபத்தை எடுத்து என்னிடம் கொடுக்க முடியாது... சரி பரவாயில்லை! உனக்குள் உன் கோபம் எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல். நானே எடுத்துக்கொள்கிறேன்” என்றார்.

கோபக்காரன் குருவை இன்னும் அதிகமாக முறைத்துப் பார்த்தான். “அந்தக் கோபம் எனக்குள் எங்கிருக்கிறது என்று தெரிந்தால், நானே அதை எடுத்து காலில் போட்டு மிதித்துவிடுவேனே. கோபம் உடலுக்குள் எங்கு இருக்கிறது என்பதை அறிவதற்கு நான் என்ன உங்களை மாதிரி ஞானியா?” என்றான்.

“கோபத்தை எல்லோரும் கட்டுப்படுத்த முடியும். நீ கட்டுப்படுத்து!” என்றார் குரு.

இப்போது கோபக்காரன் கண்கள் சிவக்கக் குருவை முறைத்துப் பார்த்தான். “குருவே! பிரச்னையைத் தீர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, நீங்கள் பிரச்னையை மேலும் அதிகப்படுத்துகிறீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறேன்… நீங்களோ செய்ய முடியாததைச் செய்யச் சொல்கிறீர்கள்... இப்போது உங்களைப் பார்த்தால் கடுமையான கோபம் வருகிறது” என்றான்.

குரு முன்பைவிடவும் பெருங்குரலில் சிரித்தார். கோபக்காரன் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தான். “உன்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையா... பரவாயில்லை... எப்போது உனக்குக் கோபம் வருகிறதோ அந்தக் கோபத்தை 24 மணி நேரமும் இரவு பகலாக நீட்டிக்க வேண்டும். முடியுமா?”

கோபக்காரன் ஆச்சர்யமாக அவரைப் பார்த்து “அது எப்படி முடியும்? 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கோபப்படுவதற்கு வாய்ப்பே இல்லை!” என்றான்.

இப்போது குரு சொன்னார்: “கோபத்தை எப்படி உன்னால் நீட்டிக்க இயலாதோ, அதேபோல்தான் குறைத்துக் கொள்வதும் இயலாது. அதற்கு மனப் பயிற்சி தேவை. இனி கோபம் வரும்போது, என்னைப்போல் உரத்தக் குரல் எடுத்துச் சிரி… இப்போது நான் சிரித்த சிரிப்புகூட உன் மீதான கோபத்தால் ஏற்பட்டதுதான். அங்ஙனம் நீ சிரிப்பாய் சிரிப்பதைப் பார்த்து, கொஞ்ச நாளில் கோபம் உன்னைவிட்டு பயந்து ஓடி விடும்!” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்!

“குருவே! கோபம் தீர்க்கும் இந்த எளிய மருந்தை இதுவரை அறியாத முட்டாளாக நான் இருந்து விட்டேனே... நல்ல தீர்வு தந்ததற்கு மிக்க நன்றி!” என்று சொல்லிவிட்டு அவனும் உரக்கச் சிரிக்கத் தொடங்கினான்!

- பருகுவோம்...