பிரீமியம் ஸ்டோரி

`யக்ஞத்துக்குப் பிறப்பிடம் கர்மம். நித்ய

கர்மத்தை நீ செய். செயலின்மையை விடச்

செயல் சிறந்தது. செயலற்று இருப்பவனுக்குத்

தன் உடலைப் பேணுதல்கூட இயலாது.’

- ஶ்ரீமத் பகவத் கீதை

றக்க இயலாதது எறும்பு. ஆனால், மெள்ள மெள்ள சாரை சாரையாக ஊர்ந்து பல காத தூரத்தைத் தாண்டிவிடும். தகுதி இருப்பவன், முயற்சி இழப்பால் தோல்வி அடைகிறான். தகுதி குறைந்தவனோ முயற்சியால் முன்னேறுகிறான்.

முற்பிறவியில் நாம் சேமித்த செயல்பாடுகளை, ‘தெய்வம்’ என்று குறிப்பிடுவார்கள். இந்தப் பிறவியில் நமது செயல்பாட்டை, ‘முயற்சி’ என்பார்கள். இரண்டும் ஒன்றுதான். இரண்டை யும் பிரித்தறிவதற்காக பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. முற்பிறவியின் செயல்பாடு கண்ணுக்குப் புலப்படாது என்பதால், அதை அதிர்ஷ்டம் - பார்வைக்கு இலக்காகாதது என்று சொல்வதுண்டு. அந்த அதிர்ஷ்டம் பலிதமாக வேண்டுமானால், நாம் முயற்சி செய்ய வேண்டும்.

மண்ணைப் பிசைந்து தனது விருப்பப்படி பல மண்பாண்டங்களை உருவாக்குகிறான் கலைஞன். முற்பிறவியின் செயல்பாட்டை அளவு கோலாகவைத்து, பல தரப்பட்ட மனிதப் பிறவிகளை உருவாக்குகிறார் கடவுள். அவரை இயற்கை என்றும் சொல்லலாம்.

முயற்சியின் மறுபெயர் தெய்வம்!

முற்பிறவிச் செயல்பாட்டின் தொடர்பை ஏற்படுத்துகிறார் அவர். நாம், அதைப் பயனுள்ள தாக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது நியதி. அதிர்ஷ்டம் நம்மை வழி நடத்திச் செல்லும்; நாம் முயற்சி செய்ய வேண்டாம் என்று நினைப்பது தவறு.

மாளிகை உச்சியில் சிங்க பொம்மை காட்சி யளிக்கிறது. அதன் மேல் காகம் உட்கார்ந்து எச்சம் இடும். காகத்துக்குத் தெரியும், அது செயல்படாத சிங்கம் என்று. செயல்பாடுதான் உருவத்தின் திறமைக்குச் சான்று.

சலவைத் தொழிலாளி ஒருவன், துணி மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றி, வீடு திரும்பினார்.‘சோ’வென்று மழை கொட்ட ஆரம்பித்தது. மழையில் நனைந்த துணி மூட்டைகள் வண்டியின் பாரத்தை அதிகமாக்கியது. மண் பாதை, மழையால் சேறாகி இருந்தது. எதிர்பாராத விதமாக வண்டியின் சக்கரம் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. எருதுகளால் இழுக்க இயலவில்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லை. தனிமையில் தவித்தார்.

கடவுளை வேண்டினார். கடவுள் தோன்றினார். ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘வண்டிச் சக்கரம் பள்ளத்தில் சிக்கிவிட்டது. எனக்கு உதவ வேண்டும்!’’ என்றார் சலவைத் தொழிலாளி.

‘‘உன் தோள்பட்டையால் சக்கரத்தை உந்து. சாட்டையால் எருதை விரட்டு. இப்படி நீ உனது முயற்சியைத் தொடர்ந்தால், நான் உதவுகிறேன்!’’ என்றார் கடவுள். அதன்படி செயல்பட்டார் தொழிலாளி. வண்டிச் சக்கரம் பள்ளத்திலிருந்து வெளி வந்தது. கடவுளும் முயற்சிக்கு உதவினார்.

அவையில் திரௌபதி அவமானத்துக்கு உள்ளானாள். தன்னை விடுவிக்க தானே முயற்சி செய்து வாதாடினாள். மனமுருக கண்ணனை வேண்டினாள். அப்போது கண்ணன் அவளுக்கு அபயம் அளித்தான். அதிர்ஷ்டம் தானாகவே வந்து அவளைக் காப்பாற்றவில்லை. தனது முயற்சியால் அதிர்ஷ்டத்தை வரவழைத்தாள் அவள்.

அர்ஜுனனுக்கு நெருங்கிய நண்பன் கண்ணன். இருந்தும் தன்னிச்சையாக கண்ணன் அவர்களுக்கு உதவவில்லை. வெறும் பார்வையாளனாகச் செயல்பட்டான். அரக்கு இல்லத்திலிருந்தும் பாண்டவர்களைக் காப்பாற்றவில்லை. சூது விளையாட்டில் வெற்றியையும் அளிக்கவில்லை.

வனவாசத்தில் ஏற்பட்ட சிரமங்களைக் கண்டுகொள்ளவில்லை. பாண்டவர்கள், தங்களது முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு கண்ணனை உதவிக்கு வைத்துக்கொண்டனர். அவர்களது முயற்சி, கண்ணனின் மேற்பார்வையில் பயனளித்தது.

இரண்டு இறக்கைகளையும் அசைத்தால்தான் பறவை பறக்க இயலும். அதில் ஒன்று தெய்வம், மற்றொன்று முயற்சி எனலாம். ஒன்று பிறவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது; மற்றது பிற்பாடு இணைகிறது. அதிர்ஷ்டத்தை வரவழைக்க முயற்சி நிச்சயம் தேவை என்கிறது தர்ம சாஸ்திரம்.

‘பயனை எதிர்பார்க்காதே; செயலில் ஈடுபடு’ என்ற கண்ணனின் அருள் வாக்கை அலசிப் பாருங்கள். முயற்சியின் பெருமை விளங்கும். 16 வயதோடு முடிய வேண்டிய மார்க்கண்டேயனின் வாழ்வை, `என்றும் `16' ஆக மாற்றியமைத்தது மார்க்கண்டேயனின் முயற்சி. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற சொல்லுக்கும் பொருள் உண்டு.

நம் இதிகாசங்களும், புராணங்களும் முயற்சியைத் தழுவும்படி பரிந்துரைக்கின்றன. இளம் தலைமுறையினரில் காணப்படும் அவ நம்பிக்கைக்குச் சரியான மருந்து முயற்சியே.

முயற்சி திருவினையாக்கும்!

ஈஸ்வரனிடம் சமர்ப்பிப்போம்!

சைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்த காரியங்களிடையேயும் உயர்வு - தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இதுவென்று உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம்.

லோகம் க்ஷேமமாக இருக்கும். நான் செய்கின்றேன், எனக்காகச் செய்து கொள்கிறேன் என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து பலனை ஈஸ்வரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்ம யோகம்.

- மகா பெரியவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு