
எஸ்.ராஜகுமாரன்
தென்னாப்பிரிக்கா!
பதினைந்து வயது நிரம்பிய பெண் அவள். உடல் நலம் பாதிக்கப்பட்டு தளர்ச்சியாக படுக்கையில் கிடக்கிறாள். சுற்றிலும் உறவினர்கள். மகாத்மா காந்தி அந்த பெண்ணைப் பார்ப்பதற்காக வந்தார்.

அவரைக் கண்டதும் அவள் எழுந்து உட்கார முயற்சி செய்தாள். முடியவில்லை. அவளைத் தன் கைகளால் தூக்கி உட்கார வைத்தார் காந்தி. “சிறை வாழ்வுதானே உன் உடம்பை இப்படிச் சிதைத்துவிட்டது! சிறை சென்றதற்காக இப்போது நீ வருத்தப்படுகிறாயா?” என்று கேட்டார் காந்தி.
“நிச்சயமாக இல்லை! இன்னொரு தடவை சிறை செல்ல நேர்ந் தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்!” என்றாள் அந்தப் பெண்.
காந்தியிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒரே கேள்வியை வேறு வேறு கோணங்களில் கேட்பது! அவள் மன உறுதியைச் சோதிக்கும் நோக்கில் “சிறை சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு, நீ இறந்து போவதாக இருந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
“நான் கவலைப்பட மாட்டேன். என் தாய் நாட்டுக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இறந்து போவேன்!” என்றாள் அவள்.
அவளுடைய நெஞ்சுறுதியை, மன எழுச்சியைக் கண்டு காந்தி வியந்து போனார். ‘பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்ப வரை உலகம் போற்றும் ‘மகாத்மா காந்தி’யாக உருமாற்றியது இந்த உருக்கமான சம்பவம்தான். அந்தப் பதினைந்து வயது தமிழ்ப் பெண்ணின் பெயர் தில்லையாடி வள்ளியம்மை!
லண்டன் மாநகரில் 1914-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசிக்கொண்டிருக்கிறார். அங்கு முன் வரிசையில் லாலாலஜபதிராய், முகமது அலி ஜின்னா, கவிக்குயில் சரோஜினி தேவி போன்ற முக்கிய ஆளுமைகள் அமர்ந்திருந்தார்கள்.
தில்லையாடி வள்ளியம்மையின் மன உறுதி பற்றி விவரித்துவிட்டு “இப்படிப்பட்டவர்களே இந்திய நாட்டை உருவாக்கக்கூடிய சிற்பிகள். இந்தப் பெண்ணைப் போன்ற தியாகச் சுடர்களுக்கு முன் நம்மைப் போன்றவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் மட்டுமே!” என்று உருக்கமாகச் சொன்னார் காந்தி. அரங்கம் கைத் தட்டல்களில் அதிர்ந்தது.
இந்திய விடுதலைப் போரில், காந்தியின் மன உறுதியை மேலும் மெருகேறச் செய்த திருப்புமுனைச் சம்பவம் இது. இதிலிருந்து நாம் வலிமையாக கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு எளிமையான பாடம் மன உறுதி... நம்பிக்கை!
அந்த நம்பிக்கை என்பது கடவுளிடமோ, காலத்திடமோ வைக் கும் நம்பிக்கையாக இருக்கலாம். எவ்வளவு இடர் வரினும் துயர் வரினும் மனம் தளராமல் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்னும் பாரதியின் வரிகளை மந்திரச் சொற்களாக உருவேற்றிக் கொண்டோம் என்றால், வாக்கினிலே இனிமை உண்டாகும்.
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்.
- பருகுவோம்...
`எழுதுவது சுலபம்தான் ஆனால்...’
புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் லீகாக். ஒருமுறை இவரைச் சந்திக்க இளம் எழுத்தாளர் ஒருவர் வந்தார்.
``சார்... நீங்கள் இவ்வளவு அற்புதமாக எழுதுவதற்கு என்ன செய்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
``ஒன்றும் பிரமாதமில்லை. ஒரு பேனா, கொஞ்சம் மை, சில தாள்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்து மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதிக்கொண்டே போகவேண்டியதுதான்’’ என்றார் லீகாக்.
``எழுதுவது அவ்வளவு சுலபமா?’’ என இளம் எழுத்தாளர் கேட்டார்.
ஸ்டீபன் லீகாக் புன்னகையுடன் இப்படிச் சொன்னார்: ``ஆமாம் எழுதுவது மிகச் சுலபம்தான். ஆனால் மனதில் தோன்றுவதுதான் கடினம்!’’
-எம்.கந்தன், தூத்துக்குடி