Published:Updated:

திரை விலகியது; தரிசனம் கிடைத்தது!

திருப்பதி ஏழுமலையான்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதி ஏழுமலையான்

ஓவியம்:கோபி ஓவியன்

திரை விலகியது; தரிசனம் கிடைத்தது!

ஓவியம்:கோபி ஓவியன்

Published:Updated:
திருப்பதி ஏழுமலையான்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதி ஏழுமலையான்
திருப்பதியின் அதிகாலைகள் அமைதியும் அழகுமானவை. அந்தக் காலை வேளையில் வேங்கடவனை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்களுக்கு தெய்விக உணர்வையும் பரவசத்தையும் அளிப்பது அங்கு ஒலிக்கும் சுப்ரபாதம். ‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா பிரவர்த்ததே...’ என்னும் வேங்கடேச சுப்ரபாதம் தினமும் அங்கு ஒலிபரப்பப்படும். பொருள் புரிகிறதோ இல்லையோ அந்த கந்தர்வக்குரலை எங்கு கண்மூடி நின்று கேட்டாலும் நாம் வேங்கடவனின் சந்நிதியில் நிற்கும் பரவசத்தை நொடியில் அடைந்துவிடலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அத்தகைய குரலுக்குச் சொந்தக்காரர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்குச் சொந்தக்காரரான எம்.எஸ்.அம்மா, தன் பாடல்களால் பல கோடி மக்களின் மனத்தில் இடம் பிடித்தவர். இந்த உயரத்தை அவர் அடைந்ததற்குப் பின்னால் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளன. அதை அருகிலிருந்து பார்த்தவர்கள் மட்டுமே, தங்களால் உணர முடிந்த அந்த அர்ப்பணிப்பின் சில துளிகளைப் பகிர்ந்துகொள்ளமுடியும்.

அப்படி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவர் திருமதி கௌரி ராம்நாராயணன். பத்திரிக்கையாளர், நாடக ஆசிரியர், பாடகர் என்ற பல்வேறு பரிணாமங்களோடு இயங்கும் கௌரி ராம்நாராயணன் எம்.எஸ் அவர்களின் உறவினர்.. அதாவது திரு. சதாசிவம் அவர்களின் தங்கையின் பேத்தி.

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்

குழந்தைப் பருவம் முதலே எம். எஸ் அவர்களின் அன்பில் வளர்ந்தவர். பல சந்தர்ப்பங்களில் எம்.எஸ் அம்மாவோடு இணைந்து பாடியவர். அவரிடம், சக்திவிகடன் வாசகர்களுக்காக எம்.எஸ் அம்மாவுடனான அனுபவங்களை, அர்ப்பணிப்புகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டோம்.

“ என் பால்யத்திலிருந்தே எம். எஸ் அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவரின் சுப்ரபாதத்தைக் கேட்டு மனனம் செய்து வளர்ந்தவர்கள் நாங்கள். ஓர் அத்தையாக அவருக்கு என் மேல் அலாதி பிரியமும் அன்பும் இருந்தது. அதேநேரம், நான் அவரிடம் கண்டு வியந்தது அவரின் அர்ப்பணிப்புதான். அவர் எதையும் கடமைக்குச் செய்து பார்த்ததேயில்லை. பார்த்துப் பாடுவதோ அல்லது பாடும் பாடலின் பொருள் அறியாமல் பாடியதோ இல்லை. தான் பாடும் சகல பாடல்களையும் சொல் சொல்லாகப் பொருள் அறிந்து, பின் அந்த ஜீவனை உள்வாங்கிப் பாடக்கூடியவர்.

திரை விலகியது; தரிசனம் கிடைத்தது!

எம். எஸ் அம்மா என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது சுப்ரபாதமும் விஷ்ணு சகஸ்ரநாமமுமே. இதில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை அவர் பாட வேண்டும் என்று முடிவானதும் அவர் மேற்கொண்ட பிரயாசை அபரிமிதமானது. நான் அப்போதெல்லாம் சின்னப் பெண். 40 நாள்கள் வீட்டில் தினமும் பூஜை நடந்தது. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் அதில் உண்டு. வேத பண்டிதர்கள் வந்து ஒவ்வொரு பதத்தையும் எப்படி உச்சரிப்பது என்று சொல்லிக்கொடுப்பார்கள். பாராயணம் முடிந்ததும் அக்னிகோத்திரி தாத்தாசார்யர் விஷ்ணு சகஸ்ரநாமம் குறித்த பிரவசனம் செய்வார். ஒவ்வொரு வார்த்தை வார்த்தையாக அர்த்தம் சொல்லி விளக்குவார். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கேட்டுக் கேட்டு மனனம் செய்து பாடப் பயின்றார் எம். எஸ். அம்மா. அதற்குப் பின்தான் ரெக்கார்டிங்.

திரை விலகியது; தரிசனம் கிடைத்தது!

கல்கி அலுவலகத்திலிருந்து விஷ்ணு சகஸ்ரநாம ஸ்லோகங்கள் முழுவதையும் பெரிய பெரிய எழுத்துகளில் அச்சிட்டு அதை அட்டைகளில் ஒட்டிப் பார்த்துப் பாடுவதற்கு வசதியாக அடுக்கி வைத்திருந்தனர். அம்மா ஸ்டூடியோ வந்தார்கள். ஒலிப்பதிவு செய்யத் தொடங் கினார்கள்.

ஆனால் சரியாக அது நடக்கவில்லை. ஏதோ தடங்கல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. அம்மா சோர்ந்துபோய் அமர்ந்து விட்டார்கள். உடனே அவரின் கணவர் சதாசிவம் அவர்களுக்கு போன் செய்து, ஏனோ தெரியவில்லை. ஒலிப்பதிவு தடங்கலாகிக் கொண்டேயிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் ஸ்டூடியோவரை வரமுடியுமா என்று கேட்டார். அவரும் வந்தார்.

ஸ்டூடியோவைச் சுற்றிப் பார்த்தார். பின்பு , “இரண்டு குத்துவிளக்குகள் கிடைக்குமா...” என்று மேனேஜரிடம் கேட்டார். அவரும் உடனே ஏற்பாடு செய்தார். தரையில் ஒரு பாயை விரிக்கச் சொன்னார். மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு இரு புறமும் குத்துவிளக்கை ஏற்றிவைக்கச் சொன்னார்.

நடுவே எம்.எஸ்ஸைப் பாயில் அமரச் சொன்னார். அதன்பின் ‘இப்போது பாடு’ என்று சொன்னார்.

குத்துவிளக்கொளியில் அமர்ந்ததும் அம்மாவுக்குள் என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை, கண்களை மூடிக்கொண்டார். ஒருகணம் மனதில் அந்த மகாவிஷ்ணுவை தியானித்தார். பின்பு மடை திறந்த வெள்ளம் போலப் பாட ஆரம்பித்தார். அச்சடித்து வைத்திருந்த ஸ்லோக அட்டைகளை ஒருமுறை கூடப் பார்க்கவில்லை.

அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் அந்தக் குத்துவிளக்கு வெளிச்சத்திலேயே பாடி முடித்தார். பாடி முடித்துக் கண்விழித்தபோது எதிரே இருந்த அட்டைகளைப் பார்த்து, “எதற்கு இதெல்லாம் இங்கே இருக்கிறது?” என்று கேட்டாரே பார்க்கலாம்.

திரை விலகியது; தரிசனம் கிடைத்தது!

“ம், எங்களுக்காக...” என்று ராதாக்கா நகைச்சுவையாக சொல்ல அனைவரும் சிரித்தோம். அந்த அளவுக்கு ஈடுபாட்டோடு அம்மா பாடுவார்கள். அவர்களோடு இணைந்து பாடும் பாக்கியம் ராதா அக்காவுக்குக் கிடைத்தது போலவே எனக்கும் சில நேரங்களில் கிடைத்துள்ளது. அவை எல்லாம் முன் ஜன்ம பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமத்தோடு இணைந்து வெளியானதுதான் பஜகோவிந்தம். அதில் இணைந்து பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

திருப்பதிக்கும் எம். எஸ் அம்மாவுக்குமான தொடர்பு மிகவும் ஆத்மார்த்தமானது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருமலையில் பல்வேறு புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டபோது கோயிலுக்குள் ஒரு ரகசிய துவாரம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதைத் திறந்து பார்த்தால் உள்ளே ஆயிரக்கணக்கான பாடல் சுவடிகள். அத்தனையும் தாளப்பாக்கம் அன்னமாசார்யரின் க்ருதிகள்.

சங்கீத பிதாமகரான புரந்தரதாசரின் காலத்துக்கு சற்று முன்பு வாழ்ந்தவர் அன்னமாசார்யா. திருப்பதி வேங்கடவன் மீதும் அலர்மேல் மங்கை மீதும் பக்தி கொண்டு பாடல்கள் பாடியவர். சுந்தரத் தெலுங்கில் வேங்கடவனுக்குக் கீர்த்தனைகள் வேண்டும் என்பதற்காக பெருமாளின் வாளே அன்னமாசார்யராக அவதரித்ததாகச் சொல்வார்கள். அப்பேர்பட்ட அன்னமைய்யாவின் கீர்த்தனைகளை நாடெங்கும் பரவலடையச் செய்ய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தனர். யாரைப் பாடச்செய்தால் அவை இனிமையாகவும், அதே வேளை புகழடையும் என்று எண்ணியவர்களின் நினைவில் முதலில் தோன்றியது எம். எஸ் அம்மாவின் பெயரே.

திரை விலகியது; தரிசனம் கிடைத்தது!

1978- ம் ஆண்டு அன்னமாசார்யா பிராஜக்ட் தொடங்கப்பட்டது. திருமலை தேவ ஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சி மகானைச் சந்தித்து எம். எஸ் அம்மா மூலம் அன்னமாசார்யரின் கீர்த்தனைகளைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்ற தங்களின் விருப்பத்தைச் சொன்னார்கள். உடனே மகாபெரியவா அம்மாவை அழைத்து, அன்னமாசார்யா கீர்த்தனைகளோடு பெருமாள் மீது பாடப்பட்ட பல மகானுபாவர்களின் பாடல்களையும் தொகுத்து ஐந்து ஒலிப்பதிவுகளைச் செய்துதரச் சொன்னார்.

அன்னமைய்யாவின் பாடல்களில், ‘பிரம்ம கடிகின பாதமு...’ முதலிய ஒரு சில பாடல்கள் வழக்கின் இருந்தனவே தவிர மற்றவை எப்படிப் பாடவேண்டும் என்னும் இசைக் கோவை இல்லாமல் இருந்தன. அப்போது அன்னமாசார்யரின் அத்தனை பாடல்களுக்கும் இசை அமைத்துக்கொடுத்தவர் கடையநல்லூர் வெங்கட்ராம பாகவதர். மகாமேதையான அவர் தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். அவரின் இசைக் கோவையும் எம். எஸ் அம்மாவின் குரலும் மீண்டும் அந்தக் கீர்த்தனைகளை உயிர்கொண்டு பக்தர்களிடையே பரவச் செய்தன.

அந்தக் காலகட்டத்தில் மொத்தம் ஆறு இசைத்தட்டுகள் வெளியாயின. அவற்றில் மூன்று இசைத்தட்டுகள் அன்னமாசார்யாரின் பாடல்களும் மற்ற மூன்று இசைத்தட்டுகள் மகாபெரியவா தேர்ந்தெடுத்துக்கொடுத்த ஸ்லோகங்கள் மற்றும் பிற மகான்களின் பாடல்களும் அடங்கியன.

இந்த ஆறு இசைத்தட்டுகளுக்காக எம். எஸ் அம்மா தயாரான விதத்தை வெறும் பயிற்சி என்று சொல்லமுடியாது. அது ஒரு யக்ஞம். அதிலும் அன்னமைய்யாவின் சுந்தரத் தெலுங்கு எளிதானதல்ல. அதை சிரத்தையாகக் கற்று கடைய

நல்லூர் சொல்லிக்கொடுத்த இசையமைப்பைப் பின்பற்றி தெலுங்கு உச்சரிப்புகளைக் கற்றுக் கொண்டு பாடினார். அந்த அர்ப்பணிப்புதான் திருமலை அன்னமாசார்யாவின் பாடல்களைப் பிரபலப்படுத்தும் தேவஸ்தானத்தின் குறிக்கோளை நிறைவேற்றிக்கொடுத்தது எனலாம்.

இன்று கோடிக்கணக்கானவர்கள்அந்தப் பாடல்களைப் பாடுகிறார்கள். பல நூறு பேர் பாடி இசைத்தட்டுகள் வெளியிடுகிறார்கள் என்றால் அது அன்னமாசார்யா பிராஜக்டின் வெற்றி என்றே சொல்லலாம்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுடன் கௌரி ராம்நாராயணன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுடன் கௌரி ராம்நாராயணன்

தெலுங்கு என்று இல்லை, அம்மா பாடிய அனைத்து மொழிகளையும் சரியாக உச்சரிக்கக் கற்றே பாடுவது வழக்கம்.

எம். எஸ் அம்மா பாடிய ஸ்தோத்திர மாலைகளில் காசி சுப்ரபாதம், ராமேஸ்வரம் சுப்ரபாதம் ஆகியனவும் பாடியிருக்கிறார். இதில் குறிப்பிட் டுச் சொல்லவேண்டியது ஒன்று

உண்டு. காசியில் வாழும் சம்ஸ்கிருத பண்டிதர்கள் காசி சுப்ரபாதத்தைக் கேட்டுவிட்டு, ‘காசியிலேயே வாழும் எங்களுக்குக்கூட சில சம்ஸ்கிருத சொற்களின் உச்சரிப்பு சரியாக வராமல் போய்விடும். ஆனால், அட்சர சுத்தமான ஒலியோடு காசி சுப்ரபாதம் பாடியிருக்கிறார்கள் என்றால் அது அந்த ஈஸ்வர கடாட்சம் இல்லாமல் சாத்தியமே இல்லை’ என்று பாராட்டினார்கள். இந்தப் பாராட்டும் அந்த இணையற்ற அர்ப்பணிப்பிற்குக் கிடைத்த பரிசுதான்.

என் வாழ்வில் பாக்கியமாகக் கருதும் ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். திருப்பதியில் ஒருமுறை அன்னமாசார்யரின் கீர்த்தனை களை இசைக்க நானும் எம்.எஸ் அம்மாவுடன் போயிருந்தேன். இசைக்கச்சேரி முடிந்து சுவாமி தரிசனம் செய்யப்போனோம். சந்நிதியில் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான், அம்மா, உடன் வந்தவர்கள் எனச் சில பேர் மட்டுமே இருந்தோம்.

கோயிலுக்குள் செல்கிறோம். சுவாமிக்குச் சூட்டியிருந்த மலர்களின் வாசனை அங்கு நிறைந்திருந்தது. இதுவரை வாழ்வில் அப்படியொரு சுகந்த நறுமணத்தை நான் அனுபவித்ததேயில்லை.

சுவாமிக்கு முன்பாகத் திரை போடப்பட்டிருந்தது. திரையை விலக்க மாட்டாயா என்னும் பொருள்படும் ‘திரெ தீயகராதா...’ என்ற தியாகராஜரின் கீர்த்தனையை அம்மா பாடுகிறார். அதைப் பாடும்போதே ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது.

சில நொடிகள் அந்த ஆனந்தப் பெருக்கில் எம். எஸ் அம்மா நெகிழ்ந்து பாடுவதை நிறுத்து கிறார். உடன் பாடும் நான் அந்த இடைவெளியை நிரப்பத் திண்டாடிக் கொண்டே பாடுகிறேன். மீண்டும் அம்மா சுதாரித்துக்கொண்டு பாடுகிறார். அப்போது திரையை மெள்ள விலக்குகிறார்கள். பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைக்கிறது.

திரை விலகியது; தரிசனம் கிடைத்தது!

அங்கு இருந்த அனைவரும் அப்படியே சிலிர்க்கிறார்கள். பெருமாளுக்கு இருபுறமும் தொங்கிக்கொண்டிருந்த விளக்குகளிலிருந்து பொறிகள் படபடத்துப் பறந்தன. ஒருகணம் வைகுண்டத்தில் இருக்கிறோமோ என்கிற உணர்வுப் பெருக்கு. இதைச் சொல்லுகிறபோதே அந்த தரிசனம் நினைவுக்கு வந்து என் உடல் சிலிர்க்கிறது. அந்த அற்புத தரிசனம் எம். எஸ் அம்மாவுக்காக அந்த வேங்கடவன் வழங்கியது. உடன் நின்ற பாக்கியத்தால் எங்களுக்கும் அந்த தரிசனம் கிடைத்தது என்றுதான் சொல்வேன். என் வாழ்நாள் முழுமையும் திருப்பதி என்றால் அந்த தரிசனம்தான் மனத்தில் தோன்றும்.

எம்.எஸ் அம்மாவுக்கு அனைத்துமே பக்திதான். திருப்பதி பெருமாளிடம் என்ன பக்தியும் நெகிழ்ச்சியும் காட்டுகிறாரோ அதே நெகிழ்ச்சியையும் பக்தியையும் கிராமத்துக் கோயில் களில் இருக்கும் தெய்வத்தைக் கண்டாலும் காட்டி உருகி விடுவார் . மேலும் மகான்கள், துறவிகள் என்றால் கேட்கவே வேண்டாம். உடனே நமஸ்காரம் செய்துவிடுவார். இத்தகைய இணையற்ற பக்தியும் அர்ப்பணிப்பும்தான் அவர்களை இந்த அற்புத நிலைக்கு உயர்த்தியது என்றால் மிகையில்லை” என்று சொல்லி முடிக்கும்போது கௌரி ராம்நாராயணின் கண்கள் நினைவுகளால் பனித்திருந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism