திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

முன்னூர் முருகனுக்கு வேல் பூஜை திருவிழா!

முன்னூர் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
முன்னூர் முருகன்

வேல் பூஜை

சிவபெருமான் தென் திசை நோக்கி தென்முகக் குருவாக அருள் வழங்கும் அபூர்வ திருத்தலம், முன்னூற்றுமங்கலம் எனப் புராணங்கள் போற்றும் முன்னூர் ஆகும். தீராத நோய்கள் - இன்னதென்று கண்டறிய முடியாத பிணிகளால் கஷ்டப்படும் அன்பர்களும், ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் இடம் சார்ந்த தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபட்டு நலன் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்

முன்னூர் முருகன்
முன்னூர் முருகன்


சனகாதி முனிவர்களுக்கு எம்பெருமான் ஞான குருவாக உபதேசம் அருளிய தலம் இது. இங்கே கோயில் கொண்டிருக்கும் ஆடவல்லீஸ்வரர் பெருமானின் லிங்கத் திருமேனி அம்பிகையே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிறப்புக்கு உரியது. அம்பாளின் திருப்பெயர் பிரஹன்நாயகி.

அதுமட்டுமா? பிரஹன்நாயகி, காமாட்சி, ஈஸ்வரி என `அம்பிகை மூவா்’ தனித் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிப்பது வேறெங்கும் காண்பதற்கரிய விசேஷ அம்சம் ஆகும்.

கர்வத்தால் வித்யைகளை மறந்து, கலங்கித் தவித்த குருபகவான் இங்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றாராம். அவருக்கு சாப விமோசனம் தந்த ஈசன் இங்கே தென் திசை நோக்கி அருள்வதால், இத்தலத்துக்கு வந்து வழிபடுவோருக்குப் பிணிகளின் பாதிப்புகள் நீங்கும்; ஆயுள் பலம் பெருகும். குருபலம் இன்மையால் திருமணத்தடை ஏற்பட்டுள்ள அன்பர்கள் வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட விரைவில் அவர்களது இல்லங்களில் மங்கல ஒலி கேட்க ஆசீர்வதிப்பார் ஆடல்வல்லீஸ்வரர்.

முன்னூர் ஆடல்வல்லீஸ்வரர்
முன்னூர் ஆடல்வல்லீஸ்வரர்
பிரஹன்நாயகி
பிரஹன்நாயகி


பெரும்பாலும் சிவத்தலங்களில் தெற்குநோக்கி அருளும் தட்சிணாமூர்த்தி இங்கே மேற்கு நோக்கி அருள்வதும் தனிச் சிறப்பாகும். முன்னூர் ஆடவல்லீஸ்வரர் ஆலயத்தில் வேறோர் அற்புதமும் உண்டு. அது, தாமரை மொட்டுக்களை தனி வேலாக்கிய முன்னூா் முருகனே ஆவார். தன் பக்தனுக்காக முன்னூர் முருகன் நிகழ்த்திய அற்புதமும், அந்தத் திருக்கதையின் அடிப்படையில் இன்றும் இங்கே நிகழும் வழிபாட்டு வைபவமும் சிலிர்க்க வைப்பவை!

சோழவள நாட்டின் வடக்குப் பகுதியின் எல்லையாக விளங்கியது ஒய்மாநாடு. இயற்கை வளம் மிகுந்த இந்த நாட்டை `கிடங்கல்’ கோட்டையில் இருந்தபடி ஆண்டுவந்தான் மன்னன் நல்லியக்கோடன். கணப்பொழுதும் மறவாமல் கந்தனைச் சிந்தையில் வைத்துப் போற்றும் பக்தன் இவன்.இடைக்கழிநாடு, எயிற்பட்டினம் (தற்போதைய மரக்காணம்), உப்பு வேலூா், மாவிலங்கை, ஆமூா், மூதூா்(தற்போதைய முன்னூா்) ஆகிய ஊா்கள் இம் மன்னனின் ஆட்சி எல்லைக்குள் அமைந்திருந்தன.

சங்க நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டில் - நல்லூா் நத்தத்தனாா் இயற்றிய சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் இவனே. ஓவியா் குடியில் பிறந்த உத்தமன். வள்ளல்தன்மை மிகுந்தவன். சிறந்த வெற்றி வீரனான மன்னன் நல்லியக்கோடனின் மங்காப் புகழ் கண்டு பொறாமை கொண்ட மன்னர்கள் பலரும் இவன் நாட்டின்மீது படை யெடுத்து வந்தனர்.

அவர்களை கந்தனின் அருளால் வென்றான் நல்லியக்கோடன். விளைவு... எப்படியும் நல்லியக்கோடனை வீழ்த்தியே தீருவது என்று தீர்மானித்து, சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தா்களும் கூட்டணி அமைத்து ஒய்மா நாட்டின் மீது போா் தொடுத்தனா். இந்த நிலையில், நயவஞ்சகம் படைத்த ஒய்மா நாட்டின் அமைச்சன் ஒருவன் பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்கி, எதிரிகளுடன் சேர்ந்த தகவலும் நல்லியக்கோடனை வந்தடைந்தது.

நல்லியகோடன் அப்போது வேலூரில் முகாமிட்டிருந்தான். மூவேந்தா்களின் படைகளை ஒரேநேரத்தில் எதிர்கொள்ளும் ஆற்றலோ படைத்திறனோ தன்னிடம் இல்லை என்பதை உணா்ந்தான். இனி முருகப்பெருமானே தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவுக்கு வந்து, மூதூா் (முன்னூா்) தலத்தில் அருள்பாலிக்கும் முருகன் ஆலய சந்நிதியில் நின்று மனமுருகி வேண்டினான்.

`தன்னுடைய துயரைத் தீர்க்காவிடில் உயிரை மாய்த்துக் கொள்வேன்’ என்று கதறினான். 4-வது ஜாமம் நெருங்கியது. களைப்பின் காரணமாக தன்னையுமறியாமல் கண்ணயர்ந்தான் நல்லியக்கோடன். கனவில் முருகன் தோன்றினார். “அன்பனே! அஞ்சற்க. பகைவர் சூழ்ந்துள்ள இடத்தின் அருகில் உள்ள ஏரியில் பூத்திருக்கும் தாமரை மலா்களைத் தண்டுடன் பறித்து எதிரிகளின் மீது எறிவாயாக! அவை வேற்படையாக மாறி உனக்கு வெற்றியை நல்கும்” என்று அருள்பாலித்தார்.

கண் விழித்த மன்னன் முருகனின் தண்ணருளை எண்ணி நெகிழ்ந்தான். துடிப்புடன் எழுந்து நீராடி, முருகனை வணங்கிப் போருக்குப் புறப்பட்டான். கந்தன் அருளியபடியே, ஏரியில் உள்ள தாமரை மொட்டுகளைத் தன் சேனைகளின் உதவியுடன் பறித்து வேற்படையாக எதிரிகளின் மீது ஏவச் செய்தான்.

வேகத்துடன் வீசப்பட்ட தாமரை மொட்டுக்கள் பகைவரின் யானைப் படை அருகே சென்று விழுந்தன. அரைத்தூக்கத்தில் இருந்த யானைகள் தங்கள் மேல் விழுந்த தாமரை மொட்டுகளை தும்பிக்கையால் எடுத்து இதழ்களைப் பிரித்தன. அப்போது மூடிய தாமரை மொட்டுகளிருந்து வெளிப்பட்ட தேனீக்களும் வண்டுகளும் யானையின் துதிக்கையினுள் சென்று கொட்டின; சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டு யானைகளைத் துன்புறுத்தின.

வலியைத் தாங்க இயலாத யானைகள் படை வீரா்களை மிதித்து துவம்சம் செய்தன. செய்வதறியாது திகைத்த பகைவர்ப் படையின் வீரா்கள் புறமுதுகிட்டு ஓடினா். துரோகி அமைச்சனும் யானையின் காலடியில் மிதிபட்டு உயிரிழந்தான். தாமரை மொட்டுகள் தனி வேலாகி பகைவரை வதம் செய்ததால், போா் நடந்த இப்பகுதி `ஒப்பிலா வேலூா்’ என வணங்கப்பட்டு தற்போது `உப்பு வேலூா்’ என வணங்கப்படுகிறது. போர் படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடிக்கும்படி தனக்கு அருள்பாலித்த மூதூர் (முன்னூா்) முருகவேளுக்கு நித்திய நைமித்திக வழிபாடு செய்து, வெற்றிவேல் பரமனை மறவாது வாழ்ந்து மென்மேலும் புகழ்பெற்றான் நல்லியக்கோடன். இந்தச் சம்பவத்தை பாம்பன் சுவாமிகள் தமது மத் குமார சுவாமியம் நூலில் `பெருவேண்டுகோள்’ பகுதியில் பாடியுள்ளார். (வெறிவண்டிசை பாடும் பொழில் வேலூரினையாளும்...).

காத்திருக்கும் திருப்பணி
காத்திருக்கும் திருப்பணி
காத்திருக்கும் திருப்பணி
காத்திருக்கும் திருப்பணி
முன்னூர் ஆடவல்லீஸ்வரர் ஆலயம்
முன்னூர் ஆடவல்லீஸ்வரர் ஆலயம்
முன்னூர் முருகனுக்கு வேல் பூஜை திருவிழா!
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி


சங்க காலத்தில் `மூதூா்’ என்று வணங்கப்பட்ட தலம் தற்போதைய முன்னூரே ஆகும். மன்னர் நல்லியக்கோடன் வழிபட்ட முருகன் இத்தலத்தின் ஆடவல்லீஸ்வரர் ஆலயத்தில், சிவ சுப்ரமண்ய பெருமானாக அருள்பாலிக்கிறார். இவர் நல்லியக் கோடனுக்கு அருள் செய்ததைப் போற்றும் விதம், ஆண்டுதோறும் இத்தலத்தில் `வேல் பூஜைத் திருவிழா’ சிறப்புடன் நடைபெறுகிறது.

இந்த விழா சங்க காலத்திலேயே கொண்டாடப்பட்டதாகச் சொல்வர். சித்திரை மாதம் அக்னி நட்சத்திரத்தின்போது வரும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று இந்த விழா கொண்டாடப்படும். பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு, சக்தி வேல் தாங்கி புஷ்பரதங்கள் இழுத்தும் காவடிகள் சமா்ப்பித்தும் முருகனை வழிபடுவார்கள். இந்த வருடம் வரும் சித்திரை 25, 26 தேதிகளில் (மே - 8 மற்றும் 9-ம் தேதிகளில்) வேல்பூஜைத் திருவிழா நடைபெறவுள்ளது. பக்த அன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு முன்னூர் முருகனை வழிபட்டு வாழ்வில் ஏற்றம் பெறுவோம்!

காத்திருக்கும் திருப்பணி!

அற்புதமான இந்தக் கோயிலில் காஞ்சி மகா பெரியவரின் ஆசியுடனும் ஆதரவுடனும் 1978-ல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு சுமாா் 45 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மீண்டும் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட, முன்னூர் கிராம மக்களும், திருப்பணி குழுவினரும் உரிய பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஆதரவோடு, முன்னூா் பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரா் திருக்கோயில் ஆன்மிக சங்கம் இந்தக் கோயிலில் திருப்பணிகளை முன்னின்று நடத்தி வருகிறது. கோயில் மதில்சுவர்ப் பணிகள் நிறைவுற்றுள்ளன. கிழக்கு, மேற்குக் கோபுரப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.

மேலும் 4.10 கோடி ரூபாய் மதிப்பில் திருக்கோயிலின் பிரதான தெற்கு ராஜகோபுரத் திருப்பணிகள், நன்கொடையாளர்களின் உதவியுடன் நடந்து வருகின்றன. சுமார் 25 அடி உயரம் வரை கருங்கல் பணி; அதற்குமேல் 70 அடி உயரம் வரை சுதை வேலைகள் என 7 நிலை கோபுரமாக இது அமையவுள்ளது. சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி விமானங்களை நன்கொடையாளா்களின் உதவியுடன் புனரமைக்கவும் இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

பெரியளவிலான இந்தப் பணிகளுக்கு போதுமான நிதி உதவிகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார்கள் திருப்பணிக் குழுவினர். பக்தி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இப்பகுதி மக்களால் தொடங்கப்பட்ட இத்திருப்பணி தொய்வின்றி நடைபெற்று, விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்த னையாக உள்ளது.

நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம், இந்த மாபெரும் திருப்பணி குறித்து நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் எடுத்துச்சொல்வோம். ஆலயத் திருப்பணிக்கு நாம் செய்யும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் நம்மையும் நம் சந்ததியும் வாழ்வாங்கு வாழவைக்கும். (திருக்கோயில் - திருப்பணி விவரங்களுக்கு: 89254 82080).