திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமணரின் அருள் பெற்ற முருகனார்

முருகனார்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகனார்

தன்னை பிரம்மம் என்று உணர்ந்த ஞானியர் கூடும் புண்ணிய பூமி. மனித குலத்தை வழிநடத்தத் தோன்றிய மகான்கள் வாழ்ந்த இடம்.

திருவண்ணாமலை... கயிலையைப் போலவே ஈசன் அசலமாகி நின்ற தலம். அடிமுடி காண முடியாத ஈசன் பேருருக் கொண்ட தலம். நினைத்தாலே முக்தி தரும் க்ஷேத்திரம். இரும்புத் துகள்களைக் கவரும் காந்தம் என அடியவர்களை ஈர்க்கும் பேருரு. சித்தர்களும் முனிவர்களும் கூடி நின்று அருளும் தலம்.

தன்னை பிரம்மம் என்று உணர்ந்த ஞானியர் கூடும் புண்ணிய பூமி. மனித குலத்தை வழிநடத்தத் தோன்றிய மகான்கள் வாழ்ந்த இடம். வானத்து நட்சத்திரங்களையும்விட அதிகமான சித்தபுருஷர்கள் சூட்சுமமாய் அருளும் பூமி. கடந்த நூறாண்டுகளில் இங்கு வாழ்ந்த மகான்களின் பட்டியலே மிகவும் பெரியதும் புகழ்மிக்கதுமாகும். அவர்களில் ஸ்ரீரமண மகரிஷி குறிப்பிடத்தக்கவர். அண்ணாமலை என்றதும் நினைவுக்கு வரும் கருணை முகம். ஆன்மிக சாரத்தை அழகுத் தமிழில் அள்ளிவழங்கிய அருளாளர்.

ஸ்ரீரமணரின் அருள் பெற்ற முருகனார்

ரமணரின் ஆத்ம விசார நூலான ‘நான் யார்...’ என்னும் நூல் தமிழகத்தின் தென்கோடியில் இருந்த ஓர் இளைஞனின் கையில் கிடைத்தது. கல்லூரிப் படிப்பு, தமிழ்ப்பற்று, கவிப்புலமை, தேசிய விடுதலை வேட்கை என இருந்த அந்த இளைஞன் ரமணரின் அருள் மொழிகளை வாசித்ததும் உள்ளூர ஒரு விழிப்பு உணர்வு கொண்டார். அந்த நூல் அதை எழுதியவரை தரிசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

தன் மாமனான தண்டபாணி என்பவரின் வழிகாட்டுதலோடு திருவண்ணாமலையை நோக்கிக் கிளம்பினார். அந்தப் பயணத்துக் குள்ளாகவே, ஸ்ரீரமணரின் திருவுரு பேருருக்கொண்டு அவர் மனத்தை நிறைத்துவிட்டது.

ஸ்ரீரமணரின் அருள் பெற்ற முருகனார்

திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தார். பின்பு கொடிமரம் அருகே வந்து நின்றார். கண்ணுக்கு நேரே ஈசன் மலையாய் நிற்கும் திருக்காட்சி. கூடவே அதற்கு இணையாக மனத்தில் ஸ்ரீரமண மகரிஷியின் திருக்காட்சி. உடனடியாக அவரைச் சென்று தரிசனம் செய்யும் உணர்வு எழுகிறது.

மற்றவர் என்றால் உணர்வைச் சொல்லிப் புலம்பி வீணாக்கி விடுவார்கள். ஆனால் கவியுள்ளமோ அதைக் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பேறுபெற்றதாகி வைத்துவிடும். அந்த இளைஞரின் கவியுள்ளம் அதைக் கவிதை செய்தது.

பார்வளர் கயிலைப் பருப்பத நீங்கி

பண்ணவர் சூழலை விட்டு

வாரொளி மணிபோல் வாசகர் வாக்கை

வளர் செவி மடுத்திட விரும்பி

ஏர்வளர் பெருந்தண் துறை அடைந்தாற் போல்

இழிசினேன் புன்சொல்லும் வேட்டுச்

சீர்வளர் அருணைச் செழும்பதி சேர்ந்தாய்

தேசிகரமண மா தேவே!

பூமாலை தொடுத்துக்கொண்டு மகான்களைப் பார்க்க பக்தர்கள் செல்வார்கள் என்றால், இவரோ பாமாலையை எடுத்துக்கொண்டு ரமணாஸ்ரமம் சென்றார். அங்கே ரமண தரிசனம் வாய்த்தது.

சூரியன் தன் கதிர்க்கண்களாலேயே தீண்டித் தாமரையை மலர்விப்பதுப் போல் ரமணர் தன் அருட்கள்களாலேயே அவரைத் தீண்டினார். மாணிக்க வாசகருக்கு வாதவூர் அரசன் குருவடிவாகத் திருப்பதம் காட்டியருளி தீட்சை வழங்கியதுபோல், ரமணர் அந்த இளைஞருக்கு அருள் வடிவாகி பார்வையாலேயே தீட்சை வழங்கினார்.

இளைஞர் தன் நிலை மறந்தார். தெய்வத் துக்குப் படைக்கக் கொண்டுவந்த படையலைச் சமர்ப்பிக்காமல் மயங்கி நிற்பது குறித்து உள்ளூர ஓர் உணர்வு. அந்த உணர்வில் இயற்றிய பாடலை வாசிக்க முயல்கிறார். ஆனால் தரிசனத்தால் விளைந்த ஆனந்தக் கண்ணீர் வரிகளை மறைக்கின்றன. தெய்வம் புரிந்துகொண்டது.

‘தா, நானே வாசிக்கிறேன்’ என்று வாங்கித் தனக்குத் தானே சூட்டிக் கொண்டது. அந்த இளைஞரின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. அன்று முதல் தன் வாழ்க்கையை அந்த மகானின் திருவடியோடு பிணைத்துக்கொண்டார் அந்த இளைஞர். அவர் பெயர் ஸ்ரீமுருகனார்.

ஸ்ரீரமணரின் அருள் பெற்ற முருகனார்

முருகனார், ஆஸ்ரம வாழ்வை மேற்கொள்ளத் தொடங்கிய பின்பு, அவர் தினப்படி ரமண மகரிஷியை உற்று நோக்கத்தொடங்கினார். அவரின் செயல்களே முருகனாருக்கு உபதேச மாயின. வேதாந்தம் அறியாத முருகனார், ரமணரின் போதனைகளைக் கேட்டுக்கேட்டுத் தேர்ச்சி அடைந்தார். மனம் ஒருநிலைப்பட்டது. ரமண சந்நிதானமே நித்திய கதி என்று வாழத்தொடங்கிய சில ஆண்டுகளிலேயே (1926) முருகனாரின் தாய் காலமானார்.

அன்னையும் பகவானும்

தாய்க்குத் தன் மகவின் குணம் சொல்லா மலேயே தெரிந்திருப்பது போல், முருகனாரின் தாய்ப்பாசத்தை அவர் சொல்லாமலேயே ரமணர் அறிந்திருந்தார். சங்கரரும், பட்டினத்தாரும் காட்டிய வழியில் சென்று தாய்க்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்துபின் திரும்பிவரப் பணித்தார். முருகனார் பக்தியிலும் பாசத்திலும் கலந்து உருகினார்.

சங்கரர் எழுதிய மாத்ருகா பஞ்சகமும், பட்டினத்தார் தாயின் மறைவின்போது எழுதிய `முன்னையிட்ட தீ...’ என்று தொடங்கும் பத்துப் பாடல்களும் இந்த உலகில் ஈன்ற தாயின் பெருமைகளைச் சொல்லிப் போற்றுபவை.

அவற்றைக் கேட்பவர் மனம் உருகும். முருகனார் அருந்தமிழ்ப் புலவர் என்பதால் தன் பாசத்தையும் அவர் பாடல்களாகவே ஆக்கினார்.

‘ஈன்றாள் தனக்கு இவ் எளியேனால் இறுதிக் கடனை இறுப்பித்தாய்’ என்றும் ‘அன்னையின் பிணியை அகற்றிட வேண்டல்’ ‘அன்னைக்கு அருள்செய்தாட் கொள் வேண்டல்’, ‘அன்னை திருவடியுற அவள்நிலை வினாதல்’ எனப் பல பதிகங்கள் எழுதினார். இருந்த ஓர் உன்னத உறவையும் துறந்தபின்பு இனி வாழ்ந்தல் என்பது குருவின் திருவடி நிழலிலேயே என்ற சங்கல்பத்தோடு திருவண்ணாமலை திரும்பினார்.

அதற்குப் பிறகு, ஸ்ரீரமணர் தரிசனமே பிரதானமென ஆசிரமத்தில் வலம் வந்தார். உஞ்சவிருத்தியெடுக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், ஸ்ரீரமணரின் நினைவிலேயே தியான மண்டபத்தில் அமைதி காத்தபடியே இருப்பார். அவ்வப்போது அவர்மேல் வீசும் குருவின் அருட்பார்வை அவரை மென்மேலும் மெருகேற்றத் தொடங்கியது.

ஸ்ரீரமணரின் அருள் பெற்ற முருகனார்

அற்புத அனுபவம்!

ஸ்ரீரமணரின் அணுக்கம் முருகனாரை சித்தபுருஷராக மாற்றத் தொடங்கியது எனலாம். பல தருணங்களில் அது பரிபூரணமாக வெளிப்பட்டது. முருகனார் 48 நாள்கள் கிரி பிரதட்சிண சங்கல்பம் செய்துகொண்டு தொடங்கினார். சில நாள்களிலேயே அவருக்கு ஓர் அற்புத அனுபவம் ஏற்பட்டது. நிருதி லிங்கத்திலிருந்து அடி அண்ணாமலையைத் தாண்டும்வரை, அவருக்குத் தமது தேக உணர்வே நீங்கியது போன்ற மகானுபவம் ஏற்பட்டது.

ஒரு நாள் ஓர் அடியார் ஸ்ரீரமண பகவானை தரிசனம் செய்ய வந்தார். பகவானை வணங்கி விட்டு, நான் பத்து வருடங்களாக ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமிகள் மூலமந்திரத்தை ஜபித்துக் கொண்டிருப்பதாகவும், தனக்கு அந்தத் தெய்வம் காட்சியளிக்கவில்லை என்றும் வேதனையுடன் தன் குறையைச் சமர்ப்பித்தார். இதைக் கேட்டதும் ஸ்ரீபகவானும் ஆச்சர்யப்படுபவர்போல் ‘அப்படியா’ என்றார்.

ஆனால், அங்கு அந்தச் சந்நதியில் அமர்ந்திருந்த முருகனார் மனம் துள்ளியது. உடனே அவர் அந்த அடியவரை நோக்கி, ‘இதோ உங்கள் வேண்டுகோள் பலித்துவிட்டது. உங்கள் எதிரில் நிற்பவரைப் பாரும்’ என்றார்.

இதைக் கேட்ட அந்த அடியவர் மீண்டும் ரமணரை நோக்க, ரமணர் சுப்பிரமண்யராகவே காட்சி கொடுத்தார். இந்தக் காட்சியைக் கண்டதும் அவர் உடல் சிலிர்த்தது. ‘எனக்குத் தெய்வம் பிரத்யட்சமாகி விட்டார்... கண்டேன்... கண்டேன்’ என்று பூரித்து நின்றார்.

பகவான் முருகனாரை நோக்கிப் புன்னகைத் தார். முருகனாரோ, கண்ட நாள் முதலே நீரே பரப்பிரம்மம் என்பதைக் கண்டுகொண்டேனே என்பதுபோல் கண்ணீர் மல்க நின்றார்.

திருவண்ணாமலை மலைமீதுள்ள குகை நமச்சிவாயர் மடத்தில் நடனானந்தர் என்ற சாது தங்கியிருந்தார். அடிக்கடி மேற்கு கோபுரம் வரும் முருகனாரை சந்திப்பார். இருவரும் பேசிக்கொண்டே ஆசிரமம் வருவார்கள்.

ஒருநாள் முருகனார் ஒரு பாடல் எழுத முயன்றார். ஆனால் சொற்கள் அவர் மனத்தில் தோன்றவேயில்லை. உடன்வந்த சாது நடனானந்தர், மீதி வரிகளைச் சொல்லி அந்தப் பாடலை முடித்தார். இரண்டுபேரும் பேசிக்கொண்டே ஆசிரமம் வந்து சேர்ந்தனர்.

பகவானிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டி நடந்ததைச் சொன்னார்கள். பகவானும் அதை ரசித்ததுடன், மறுநாள்... சாது முதல் நான்கு வரிகளைச் சொல்ல, அதை முருகனார் முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அவ்வண்ணமே இருவரும் ஒரு பாடலை எழுதிப் பாடிக்காட்டினர்.

‘அடடே, இரட்டைப் புலவர்களா... முதல் பாடலுக்கு முருக நடனர் என்றும் இரண்டாம் பாடலுக்கு நடனமுருகர் என்று பெயர் வைத்துவிட வேண்டியதுதான்’ என்று புன்னகை பூத்தபடி கூறி ஆசி வழங்கினார்!

ஸ்ரீமுருகனாரின் படைப்புகள்...

ஸ்ரீரமணரை தரிசிக்க நாள்தோறும் பக்தர்கள் வருவார்கள். அவர்களில் பலர் தங்கள் ஆத்ம விசாரம் தொடர்பான கேள்வி களைக் கேட்பார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் முருகனார் அவற்றை உள்வாங்கி செந்தமிழ் பாக்களாக மாற்றுவார்.

பின் அவற்றை ரமணரிடம் காட்டிக் கருத்துக் கேட்பார். அதில் மகரிஷி அருளும் திருத்தங் களையும் செய்வார். இவ்வாறு பகவானின் திருப்பார்வையில் மலர்ந்தவையே முருகனாரின் படைப்புகள்.

மொத்தம் 1282 நாலடி வெண்பாக்களால் கோக்கப்பட்ட நூல், ‘குருவாசகக் கோவை.’ இந்த நூலில் இருக்கும் 28 வெண்பாக்கள் ஸ்ரீபகவானால் இயற்றப்பட்டவை. மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகம் போலவே சிறப்பு வாய்ந்தது முருகனாரின் குருவாசகம்.

தமிழ்ச் சுவையும், இலக்கிய ரசமும் நிறைந்த இந்த நூல் பரவலாக அறிந்து கொள்ளப்பட வேண்டியது. காரணம் இவற்றின் தன்மையை அறிந்து ரமணரே, ‘மாணிக்க வாசகர் போல் எழுதுவீரோ’ என்று போற்றியதுண்டு. அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது இந்நூல் முருகனார் இயற்றிய நூல்களில் முக்கியமானது ஸ்ரீரமண சந்நிதி முறை. இந்நூல் ‘திருவாசகம் நிகரே’ என்று ஸ்ரீரமணரால் போற்றப்பட்டது. சந்நதி முறை என்றால் ஆண்டவன் சந்நதியில் நம் மனத்திலுள்ள குறைகளையும் சங்கடங்களையும் நிவர்த்திக்கும் பொருட்டு, ஆண்டவனிடம் முறையிட்டுக் கொள்வது எனப் பொருள்.

ஆண்டவனை எப்படித் துதிப்பது என்பதை எல்லாம் வரிசைப்படுத்திக் காட்டும் முறை நூல் என்றும் அழைக்கலாம்.

ஸ்ரீரமண சந்நிதி முறையின் பன்னிரண்டாம் திருமுறை பல மெய்யடியார்களால் பாடப் பெற்று தொகுக்கப்பட்டது. மற்ற பதினோரு திருமுறைகளும் முருகனாரால் இயற்றப்பட்டது. இந்த நூலுக்குத் தமிழ்த்தாத்தா ஸ்ரீஉ.வே. சா சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூல்கள் தவிர, நிறைய தோத்திர நூல்களை முருகனார் இயற்றியுள்ளார். ஸ்ரீரமண தேவமாலை, ஸ்ரீரமண சரணப் பல்லாண்டு, ஸ்ரீரமண அனுபூதி, உபதேச உந்தியார், ஸ்ரீரமண புராணம், ஸ்ரீரமண ஞானபோதம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

உ.வே. சா, ராவ் பகதூர், வ.சு. செங்கல்வராயப் பிள்ளை, எஸ்.சச்சிதானந்தம் பிள்ளை, இராமநாதபுரம் ஆஸ்தானப்புலவர் ரா. ராகவைய்யங்கார் போன்ற தமிழறிஞர்கள் முருகனாரின் தமிழ்ப் புலமையைப் போற்றியுள்ளனர்.

முருகனார் இயற்றிய பல்வேறு நூல்கள் வரும் காலச் சந்ததிக்குப் பெரும் செல்வமாய் விளங்கும் என்பது அவர்களின் கருத்து.

ஸ்ரீரமணர் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டுகள் வாழ்ந்த முருகனார் தன்னை நாடி வந்த ரமண பக்தர்களுக்கு வழிகாட்டியும் அவர்கள் கேட்கும் ஆன்மிக விளக்கள் அளித்தும் உதவினார். இவரது ஆன்மிகப் பயணத்தில் ஆயிரமாயிரம் அனுபவங்கள். மகரிஷியோடு வாழ்ந்ததன் மூலம் பெற்ற பெரும் ஞானம் அனைத்தையும் அவர் பக்தர்களுக்கு இலகுவாக எடுத்துரைத்தார்.

1973- ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி ஸ்ரீமுருகனார் தன் பூவுடலை நீத்து, பகவான் திருவடிகளில் கலந்தார். ஸ்ரீமுருகனாரின் சமாதி ரமணாசிரமத்திற்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஸ்ரீமுருகனாரின் தமிழ்ச் சேவையும், அவரு டைய பாக்களும் ஸ்ரீரமண பக்தர்களிடையே என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்!