Published:Updated:

சமயபுரம்: சமயபுரத்தாளுக்கு அபிஷேகம் கிடையாது ஏன் தெரியுமா? அறிய வேண்டிய அதிசயத் தகவல்கள்

சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் கோயிலின் அற்புதங்களைத் தெரிந்துகொள்வோம்!

சமயபுரம்: சமயபுரத்தாளுக்கு அபிஷேகம் கிடையாது ஏன் தெரியுமா? அறிய வேண்டிய அதிசயத் தகவல்கள்

சமயபுரம் கோயிலின் அற்புதங்களைத் தெரிந்துகொள்வோம்!

Published:Updated:
சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், ராஜகோபுரத் திருப்பணிகள் நிறைவுற்று நாளை (6.7.22) மகா கும்பாபிஷேகம் காண்கிறது. அற்புத மான இந்தத் தருணத்தில், சமயபுரத்தாளின் மகிமையை அறிவது அவசியம் அல்லவா? வாருங்கள்... மூலிகைத் திருமேனி, நட்சத்திர யந்திரங்கள், அம்மன் பாத வழிபாடு, அதிசய பிரார்த்தனைகள், இரவில் ஒலிக்கும் அம்மனின் கொலுசுச் சத்தம்... எனத் திகழும் சமயபுரம் கோயிலின் அற்புதங்களைத் தெரிந்துகொள்வோம்!

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் அற்புதத் தலம் சமயபுரம். திருச்சிக்கு வடக்கில் - சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்கால் கரையில் மகாசக்தி தலமாகத் திகழ்கிறது, சமயபுரத்தாளின் ஆலயம்.

சமயபுரம்
சமயபுரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாரியம்மனும் மூன்று கதைகளும்!

சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரைக் கதை. சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் உமையம்மையை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்றும் சொல்வார்கள்.

கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவர்-தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்- யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. அந்த மாயாதேவியே மாரியம்மன். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதிகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமயபுரத்தாள் என்ற திருப்பெயர் வந்தது எப்படி?

சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்தாளாம். உக்ர கோலத்தில் இந்த அம்பாள் திகழ்ந்தாள். அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

சமயபுரம்
சமயபுரம்

அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் எனப்படுகிறது!). அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட்டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்று அழைக்கப் பட்டாளாம். இந்த அம்பிகை, உரிய காலத்தில் தேவையான வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்று போற்றப்பட்டாள்.

உக்கிரம் தணித்த மூன்று பிள்ளையார்கள்!

சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்!’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரத்தில் ஒரு சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்பாளின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில், காஞ்சி பெரியவரின் ஆலோசனைப்படி, நுழைவாயிலின் வலப் புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனராம்.

சமயபுரம்
சமயபுரம்

அம்மனின் திருமேனியில் நட்சத்திர யந்திரங்கள்!

கருவறையில் சமயபுரத்தாள் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன.

சமயபுரத்தாளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். மட்டுமன்றி 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங் களாகத் திருமேனி பிரதிஷ்டையில் திகழ மகாமாரியாக இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்!

சமயபுரத்தாளுக்கு அபிஷேகம் கிடையாது ஏன் தெரியுமா?

சமயபுரம் மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். அம்பிகை எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், கருவறையைச் சுற்றிலும் எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும்படி செய்திருக்கிறார்கள். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

சமயபுரம்
சமயபுரம்

அம்மனின் சந்நிதியில் விபூதி பிரசாதம் காரணம் என்ன?

கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது என்கிறார்கள் பக்தர்கள். அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதிகம்.

உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே, தனக்கான பூஜை வழிபாடுகளை ஏற்றுக்கொள்கிறாள் சமயபுரத்தாள். இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருவரங்க சீர்வரிசை

தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்றைய தினம் ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.

அற்புதம் நிகழ்த்தும் பிரார்த்தனைகள்...

அம்மை நோய் பீடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்ப மானவை. நமது குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி விட்டுப் பிரார்த்தித்தால், குறைகள் தீரும் என்பது நம்பிக்கை.

கரும்பில் தூளி கட்டி...

இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் கரும்புத் தூளி எடுக்க வேண்டிக்கொள்கிறார்கள். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை- வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர்.

குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில், கரும்புத்துளி பிரார்த் தனையை நிறைவேற்றுவர். ஏற்கெனவே பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.