கட்டுரைகள்
Published:Updated:

கயிலையே மயிலை!

கயிலையே மயிலை!
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலையே மயிலை!

ஒரு தலம் 10

கயிலைக்கு நிகரான பெருமை கொண்ட தலம் மயிலை. மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர் = மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். ‘பிரம்மாண்ட புராணம்’ இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.

சக்தி அன்னை மயிலாக வந்து, இங்கு ஈசனை வழிபட்டதால்-மயிலை, சோமுகன் களவாடிச் சென்ற வேதங்களை மகாவிஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால்- வேதபுரி, சுக்ராச்சார்யார் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் - சுக்ரபுரி, இங்கு வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனைப் போற்றி வழிபட்டதால்- கபாலீச்சரம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது திருமயிலை. மூவேந்தர் காலத்தில், புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்ததாக விளங்கிய மயிலை, வடமொழியில் ‘கேகயபுரி’ எனப்பட்டது.

‘மயிலாப்பு’ என்றும் இந்தத் தலம் அழைக்கப்பட்டதை அப்பர் பெருமான், ‘மயிலாப்பிலுள்ளார்...’ என்று திருத்தாண்டகத்தில் குறிக்கிறார். கி.பி. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வார் ‘மாமயிலை’ என்றும், கி.பி. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் ‘மயிலை’ மற்றும் ‘மாமயிலை’ ஆகிய பெயர்களாலும், சுந்தரர் ‘தொன்மயிலை’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

புவியியல் அறிஞர் தாலமி (காலம்: கி.பி.119-161), தனது புவியியல் நூலில், ‘மலியார்பா’ என்று குறிப்பிடுவது மயிலையைத்தான் என்பர். வரலாற்றின் வழியெங்கும் மயிலை குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோரால் பாடப் பெற்றது. வைத்தீஸ்வரன் கோவில்-விளக்கழகு; மாயூரம்-கோபுர அழகு; திருவாரூர்-தேர் அழகு; திருமுதுகுன்றம்-மதிலழகு என்பர். அந்த வரிசையில், திருமயிலையில் அதன் மாட வீதிகள் அழகு! ‘மங்குல்மதி தவழும் மாட வீதி மயிலாப்பூரில்...’ என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.

பேயாழ்வார், திருவள்ளுவர் மற்றும் வாயிலார் நாயனார் ஆகியோர் அவதரித்த தலம் இது. ஏழு சிவன் கோயில்கள் (கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்த பாலீஸ்வரர்). ஏழு பெருமாள் கோயில்கள், ஏழு குளங்கள் (கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்) என்று ஏழு ஏழாக இங்கு பல சிறப்புகள் உண்டு.

ஏழு சிவாலயங்கள் தவிர வீரபத்திரருக்கெனத் தனிக் கோயிலும் அப்பர் சாமி கோயிலும் இங்கு உண்டு. முண்டகக்கண்ணி அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், கோலவிழி அம்மன் கோயில், தர்மராஜா கோயில் என மயிலை கோயில் நகரமாகவே திகழ்கிறது.

சிக்கலில் சக்திவேல் பெற்ற முருகன், மயிலைக்கு வந்து சிங்காரவேல் ஒன்றைப் பெற்றாராம். எனவே, இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்று பெயர். இங்குள்ள கணபதியையும் வணங்கி வழிபட்டார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.

கயிலையே மயிலை!

அரக்கர் பலரைக் கொன்றதால், ஸ்ரீராமனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இந்த தோஷம் நீங்க ஸ்ரீராமன், மயிலைக்கு வந்து கபாலீஸ்வரரை வழிபட்டு திருவிழா எடுத்தார்.

ஆணவத்தால் தனது ஐந்தாவது தலையை இழந்த பிரம்மன், திருமயிலைக்கு வந்து, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தான். இதனால் மகிழ்ந்த சிவனார், அவனுக்குப் படைப்பாற்றலை அருளியதுடன், அவன் வேண்டுகோளுக்கு இணங்கி கபாலீஸ்வரர் எனும் திருநாமத்துடன் இங்கேயே கோயில் கொண்டார்.

பாம்பு தீண்டி இறந்த பூம்பாவையை திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எழுப்பிய தலம் இது.

புராதனமான கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘கடலக் கரை திரையருகே சூழ் மயிலைப்பதிதனில் உறைவோனே’ என்று குறிப்பிடுகிறார். எனவே அவர் காலத்திலும் (கி.பி.1540) கோயில் கடற்கரை அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம்.

தற்போதுள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதைக் கட்டியவர், வள்ளல் நயினியப்ப முதலியாரின் மகன் முத்தியப்ப முதலியார். கபாலீச்சரம் சுமார் 80 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலத்துடன் 2,080 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.

கலிங்க தேச அரசன் தருமனின் மகன் சாம்பவன் என்பவன், தனது பெரும் பாவங்

கள் தீர இங்கு வந்து, பங்குனி உத்திரத்தன்று கபாலி தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீகபாலீஸ்வரரைத் தொழுது, முக்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.

ஆலயத்தில் நர்த்தன கணபதிக்கு அடுத்து ஸ்ரீஉண்ணாமுலையாள் சமேத ஸ்ரீஅண்ணாமலையார் சந்நிதி. தெற்குப் பிராகாரத்தில் ஸ்ரீசிங்காரவேலர் சந்நிதி உள்ளது. உள்ளே ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார் ஸ்ரீசிங்காரவேலர். இவருக்கு இரு புறமும் யானையின் மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி-தெய்வானை தேவியர் உள்ளனர்.

கயிலையே மயிலை!

தெற்குப் பிராகாரத்தில் வடக்கு நோக்கி ஸ்ரீபழநியாண்டவர் மற்றும் வாயிலார் நாயனார் சந்நிதிகள் உள்ளன. மேற்கு பிராகாரத்தில் அருணகிரிநாதருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் உள்ள முக்கியமான சந்நிதி ஸ்ரீபுன்னைவனநாதர் சந்நிதி. அருகில் ஸ்தல விருட்சமான புன்னை மரம். இந்தச் சந்நிதியில் உள்ள சிவ லிங்கத்தை, அம்பாள் மயில் உருக்கொண்டு பூஜிப்பதை தரிசிக்கலாம்.

ஈசன் ஐந்தெழுத்தின் உட்பொருளை உபதேசித்தபோது அம்பிகை மயிலைக் கண்டு ரசித்ததால் கோபம் கொண்ட ஈசன் சக்தியை மயிலாகப் போகும்படி சாபம் இட்டார். அதன்படி மயிலாக இங்கு வந்து வழிபட்டு மீண்டும் ஈசனை அடைந்தாள் கற்பகாம்பிகை எனும் சக்தி.

ஈசான மூலையில் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி. கிழக்குச் சுற்றில் ஸ்ரீசுந்தரேஸ்வரர் சந்நிதி, நவகிரகங்கள், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் ஜெகதீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

மதுரையைப் போலவே இங்கும் கற்பகாம்

பாளை வணங்கிய பிறகே ஸ்ரீகபாலீஸ்வரரை தரிசிக்கச் செல்வது இங்குள்ள மரபு. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று வரம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம். நின்ற திருக்கோலத்தில் அபய-வரத ஹஸ்தத்துடன் அழகே உருவாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள்.

கயிலையே மயிலை!

அம்பாள் சந்நிதியை அடுத்து மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது ஸ்ரீகபாலீஸ்வரர் சந்நிதி. கருவறையில் மேற்கு நோக்கிய லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீகபாலீஸ்வரர். பிரம்மனின் ஒரு தலையைக் கொய்த சிவனார், பிரம்ம கபாலத்தைத் தன் கையில் ஏந்தி தரிசனம் தர, அவரை முப்பத்து முக்கோடி தேவர்களும் ‘கபாலீஸ்வரர்’ என அழைத்து வழிபட்டனராம். மேற்கு நோக்கிய சிவலிங்கம், கிழக்கு நோக்கிய ஆயிரம் சிவலிங்கத் திருமேனிக்கு இணையானது என்பர். கபாலியை தரிசித்தால் ஆயிரம் சிவமூர்த்தங்களை தரிசித்த பலன் கிடைக்குமாம்.

கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் தரிசித்தால் பிள்ளை இல்லாதவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டாகும். திருமணம் நடைபெறும். இங்கு வந்து விளக்கிட்டால் குடும்ப சிக்கல்கள் தீரும். சிங்காரவேலனிடம் மனமுருகி விண்ணப்பம் வைத்தால் உடல் குறைகள் நீங்கும். மோட்சமும் நிம்மதியும் அளிக்கும் வள்ளல்பெருமான் கபாலீஸ்வரர் என்று வாரியார் சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவார்.

ஆண்டின் அத்தனை நாள்களும் திருமயிலையில் விழாக்கள்தான் என்றாலும் பங்குனி உத்திர விழாவும் அதில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல் தைப்பூசத் தெப்போற்சவமும் இங்கு விசேஷம்.