திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

பிரம்பால் அடித்த மயிலை பரமன்!

ஶ்ரீகபாலீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீகபாலீஸ்வரர்

படங்கள்: காவல்கேணி வேங்கடகிருஷ்ணன்

ஈசன்... திருவிளையாடல் பிரியன். தன்னை வழிபடும் பக்தர்களோடு விளையாடல் புரிந்து நல்வழிப்படுத்துபவன். நரிதனைப் பரியாக்கி பரிதனை நரியாக்கி, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்பால் அடிபட்டு அவன் ஆடிய லீலைகளை நாம் அறிவோம். அதேபோன்று அவரே வேதியர் உருவில் வந்து பிரம்பால் இருவரை அடித்த திருவிளையாடல் தெரியுமா?

அந்த விளையாடலுக்கும் கந்தக்கோட்ட முருகன் கோயிலுக்கும் தொடர்பு உண்டு. இந்த இரண்டும் நிகழக் காரணமாக இருந்த தலம் மயிலை. அந்த அற்புதத் திருவிளையாடலை இங்கு காண்போம்.

ஶ்ரீ கபாலீஸ்வரர்
ஶ்ரீ கபாலீஸ்வரர்

`கயிலையே மயிலை' - இதை அடியார்கள் பொருளுணர்ந்துதான் சொல்லியிருக்கிறார்கள். இங்குதான் பிரம்மனும் சுக்கிரனும் தேடிவந்து ஈசனைப் பூசை செய்து தங்களின் சாப விமோசனம் பெற்றார்கள். வேதங்கள் நான்கும் இங்கு அனுதினமும் ஈசனை வணங்கித் துதிப்பதாக ஐதிகம். இங்கு கோயில்கொண்ட அம்பிகையை மகாலட்சுமி தேவி பூஜித்தார் என்பது புராண வாக்கு.

இத்தகைய சீர் மிக்க தலத்தில் முன்னொரு காலத்தில் மாரிச்செட்டியார், கணபதி பண்டாரம் என்னும் இருவர் வாழ்ந்துவந்தனர். இருவருக்கும் திருப்போரூர் முருகன் மீது பெரும்பக்தி. மாதம் ஒருமுறை நடைப்பயணமாகச் சென்று அந்த கந்தக் கடவுளை கண்ணார தரிசித்து வருவார்கள். அது, அந்நியர் ஆட்சி நிகழ்ந்த காலம். ஆங்காங்கே மூலவர் சிலைகளைச் சேதப்படுத்த முனைந்தனர் அந்நியர். அதனால் பெரும்பாலான கோயில்களில் கல்திரை இட்டு இறைவனை மறைத்துவைத்தார்கள். அப்படித் திருப்போரூர் முருகன் சந்நிதியிலும் கல்திரை இட்டு மறைத்து விட்டனர்.

அப்பனுக்கு இளைத்தவனா சுப்பன். ஒரு திருவிளையாடல் செய்யத் திருவுளம் கொண்டார். திருப்போரூர் மூர்த்தி அங்கிருந்து மறைந்து பனங்காட்டில் ஒரு புற்றில் எழுந்தருளியது.

காலங்கள் கழிந்தன. அந்நியர் பயம் நீங்கியது. திருப்போரூர் சந்நிதியில் சுவாமியைக் காணோம் என்று தேடிப் பார்த்தனர். பின்பு இறையருளால் அங்கு மற்றுமோர் மூர்த்தம் பிரதிஷ்டை ஆகியது.

புற்றில் இருக்கும் முருகப்பெருமானோ வேறு இடத்தில் கோயில்கொள்ளத் தீர்மானித்தார். அப்போதுதான் மாரிச் செட்டியாரும் கணபதிப் பண்டாரமும் திருப்போரூர் பயணத்தின் போது புற்று இருந்த பனங்காட்டு வழியில் பயணித்தனர். நீண்ட பயணத்தின் களைப்பால் சிறிது ஓய்வெடுக்கலாம் என்று முடிவெடுத்து அங்கேயே படுத்துக்கொண்டனர்

இருவரும் படுத்திருந்தனர். அப்போது ஒரு சர்ப்பம் மெள்ள நகர்ந்து வந்து மாரிச்செட்டியாரின் மார்பு மீது ஏறியது. பாம்பு ஏறினால் உடல் பதற வேண்டுமே மாரிச்செட்டியாருக்கோ மாறாக சிலிர்த்தது. பாம்பு அவர் மேல் படம் எடுத்து நின்றது. அடியவர்க்கோ ஒரு கணம் கூட அச்சம் ஏற்படவில்லை. மாறாக ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம் பாம்பு தன் நாவை நீட்டிப் பேசத்தொடங்கியது.

பாம்பு பேசுமா..? பேசியது!

ஶ்ரீகற்பகாம்பாள்
ஶ்ரீகற்பகாம்பாள்

“இதோ இந்தப் புற்றில்தான் நான் உறைகிறேன். என்னைக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பு” என்று சொன்னது. பின்பு மெள்ள இறங்கி அருகிலிருந்த புற்றினை நோக்கி நகர்ந்து சென்று மறைந்தது.

யாரோ முகத்தில் நீரைவாரித் தெளித்ததுபோல விழிப்பு தட்டியது மாரிச் செட்டியாருக்கு. கூடவே கணபதிப் பண்டாரமும் விழித்தெழுந்தார்.

“ஐயா, தங்கள் மார்பில்...” என்று கணபதி சொல்லவும் மாரி வியந்துபோனார்.

“ஆமாம், என் மார்பில்தான்... உயரிய சந்தனம் போன்ற குளுமையை உடைய சர்ப்பம் என் மேல் ஏறிப் படம் எடுத்து நின்றது.”

“ஆனால், நான் உறக்கத்தில்தான் இருந்தேன்... எனக்கு எப்படி அந்தக் காட்சி தோன்றியது...”

“நான் ஒன்று சொல்லவா... நானும் உறக்கத்தில்தான் இருந்தேன். எனக்கும் அந்தக் காட்சி தோன்றியது. ஆனால் அது சொப்பனம் அல்ல. இறைவன் நமக்குச் சொல்லியிருக்கும் ஓர் அறிகுறி.”

ஆம், இருவருக்கும் ஒரே கனவுக் காட்சி!

கணபதி சொன்னார்: “ஆமாம், அருகில் இருக்கும் இந்தப் புற்றில்தான் ஐயன் இருக்க வேண்டும். வாருங்கள் புற்றை மலர்த்திப் பார்ப்போம்.”

இருவரும் சேர்ந்து அந்தப் புற்றை மலர்த்தினர்.

மலர்த்த மலர்த்த அதிகாலைச் சூரியன் சமுத்திரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றிக் காட்சி கொடுப்பதுபோல, அற்புத அழகு விக்கிரகம் அவர்களுக்குக் காட்சி கொடுத்தது. அனுதினமும் அவர்கள் போற்றித் துதிக்கும் அந்தத் திருப்போரூரானின் திருவடிவம் அது என்பதை அறிந்துகொள்ள அதிகநேரம் தேவைப்படவில்லை.

பிரம்பால் அடித்த மயிலை பரமன்!

இருவரும் கனவில் வந்த கூற்றை நினைவுப்படுத்திப் பார்த்தனர்.

`என்னை எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்யுங்கள்' என்பது அல்லவா இறைவன் கட்டளை!

இறைவனின் திருமேனி இவர்களை விட உயரமும் எடையும் கொண்டதாக இருந்தது. இருவர் சுமந்து செல்வது எளிதல்ல.

மாரிச் செட்டியார் அப்போது சுவாமியின் திருமுன்பு ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.அப்படி ஒரு விண்ணப்பத்தை இதற்கு முன் வேறு எவரேனும் சுவாமியிடம் வைத்திருப்பார்களா... தெரியாது!

“சுவாமி, இவ்வளவு பெரிய திருமேனியை எப்படிச் சுமந்து செல்வது? சுமந்து செல்ல ஏதுவாக, தாங்கள் பத்து நாள் குழந்தை போல பாலக ரூபம் கொண்டு வாரும்” என்று வேண்டினார்.

அடியவர்கள் கோரிக்கையை அந்த ஆறுமுகனும் ஏற்றார். சிறு பாலக ரூபத்தோடு அங்கே மூர்த்தமாக மாறினார். நடப்பவை எல்லாம் தங்களின் புத்திக்கு மீறிய அற்புதங்கள் என்பதை இருவரும் அறிந்துகொண்டார்கள். இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே அருகில் இருந்த ஆற்றின் கால்வாயை அடைந்தனர்.

கண்ணனை வசுதேவர் சுமந்து சென்றபோது பெருமழை வெள்ளம் சூழ்ந்ததுபோல, முருகப்பெருமானை மாரிச் செட்டியார் சுமந்து சென்றபோதும் வெள்ளம் சூழ்ந்தது. மாரிச்செட்டியார் முதுகில் முருகனின் மூர்த்தத்தைக் கட்டிக்கொண்டார். வெள்ளம் வழிவிடும் என்று எண்ணி ஓடும் தண்ணீரில் கால் பதித்தார். அடுத்த கணம் ஒரு பேரலை எழுந்து இருவரையும் விழுங்கி மறுகரையில் கொண்டு சேர்த்தது. அந்தக் கரை மயிலையாக இருந்தது. அப்போது நள்ளிரவு. களைப்பு மேலிட கபாலீச்சரத்தின் குளக்கரையிலேயே அயர்ந்து உறங்கினர். அப்போது பிரம்ம முகூர்த்தத்துக்கு முன் அது நிகழ்ந்தது.

இருவரையும் யாரோ பிரம்பால் அடித்தார். அலறி எழுந்தால், எதிரே ஓர் வேதியர். இரவு விடியுமுன்னேயே அவர் விழித்துக்கொண்டவராக மட்டுமல்லாமல் நீராடி நீறுபூசிச் சிவக்கொழுந்தாகக் காட்சி தந்தார். அவர் கையிலே பிரம்பிருந்தது. அதுவும் பொற்பிரம்பு. மானும் மழுவும் ஏந்திய அந்த மகாதேவரைப் போன்ற பொலிவு அவர் முகத்தில். அந்தப் பொலிவில் மனம் லயித்து தரிசித்த மறுகணம் மற்றுமோர் அடி!

“விடிவதற்குள்ளாக அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ய வேண்டாமா... ஓடுங்கள். எங்கேனும் ஒரு தலத்தில் பிரதிஷ்டை செய்யுங்கள்” என்று அதட்டினார் அந்த வேதியர். இருவரும் திகைத்து ஒருவரையொருவர் கண்டு பின் அந்த வேதியரை நோக்கினால், அவர் மாயமாகியிருந்தார். வந்தவர் யாரென்று கண்டுகொண்டார்கள் இருவரும்.

இப்போது அந்த அற்புதக் காட்சியை நினைத்துச் சிலிர்க்கக்கூட நேரமில்லை. ஐயன் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டிய அவசரம். சுவாமியைச் சுமந்துகொண்டு ஓடினார்கள். இருவரும் சென்று நின்ற ஓர் இடத்தில் சுவாமியை வைத்துப் பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள்.

அந்த இடம்தான் இன்றும் சென்னையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் கந்தகோட்டம். இந்தத் தலத்தில் முருகன் சிறு பாலக ரூபத்தோடே காட்சி தருகிறார்.

இந்த விளையாடலை நிகழ்த்தியது யார் கபாலீஸ்வரரா... இல்லை கந்தகோட்ட முருகனா... அல்லது இரண்டுமாக இருக்கும் அந்த பரப்பிரம்மமா...

கயிலையே மயிலை... இங்கு அற்புதமும் அதிசயமும் புதிதல்லவே!

கற்பகம் எனும் அற்புதம்!

கற்பகாம்பாளை வணங்கிய பிறகே ஶ்ரீகபாலீஸ்வரரை தரிசிக்கச் செல்வது இங்குள்ள மரபு. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக கற்பகத் தருவைப் போன்று பூலோகவாசிகளுக்கு வேண்டிய வரம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஶ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம்.

வெள்ளிக் கிழமைகள் மற்றும் சில விசேஷ தினங் களில் மலர்களால் ஆன பூப்பாவாடைகளை அணிந்து காட்சித் தருகிறாள்ஶ்ரீகற்பகாம்பாள். மேலும் வெள்ளிக் கிழமைதோறும் மாலை வேளையில் அன்னை கற்பகாம்பாளுக்கு தங்கக் காசு மாலையும், வைரக் கிளி தாடங்கமும் அணிவிக்கப்படுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.

திருமயிலை கபாலீச்சரம்

யிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர் = மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள்.

பிரமாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. உமையவள், மயிலாக வந்து, இங்கு ஈசனை வழிபட்டதால்- மயிலை.

சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகா விஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால்- வேதபுரி. சுக்ராசார்யர் இங்குள்ள ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால்- சுக்ரபுரி, மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனை போற்றி வழிபட்டதால்- கபாலீச்சரம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது திருமயிலை.

கி.பி 7-ஆம் நூற்றாண்டில் இந்தத் தலம், ‘மயிலாப்பில்’ ‘மயிலாப்பு’ ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டது.

மயிலைக்கு அழகு எது தெரியுமா?

வைத்தீஸ்வரன் கோவில் - விளக்கழகு; மாயூரம் - கோபுர அழகு; திருவாரூர் - தேர் அழகு...’ என்பர். அந்த வரிசையில், திருமயிலையின் அழகு அதன் மாட வீதிகள்! ‘மங்குல்மதி தவழும் மாட வீதி மயிலாப்பூரில்...’ என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார். திருமயிலை உலா எனும் நூல், ‘நீரும் மணி மாட வீதிகள்’, என்றும் ‘வானளக்கும் பொன் மாட வீதி’ என்றும் சிறப்பிக்கிறது.

அறுபத்து மூவர் விழா!

ஶ்ரீ
கபாலீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்களில் குறிப்பிடத் தக்கது அறுபத்து மூவர் விழா - அதிகார நந்தி சேவை மற்றும் தேரோட்டம் ஆகியன.

பங்குனித் திருவிழாவில் எட்டாம் நாளன்று அறுபத்து மூவர் விழா நடைபெறுகிறது. அன்று சூலம் ஏந்தியவராக சிவபெருமான் பவனி வர அவருக்கு வலப் புறம் கற்பகாம்பாள், இடப் புறம் வள்ளி- தெய்வானை சமேத ஶ்ரீசிங்காரவேலர் உடன் வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து பல்லக்குகளில் ஒருவர் பின் ஒருவராக ஶ்ரீவிநாயகர், ஶ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் (பல்லக்கு ஒன்றுக்கு நான்கு நாயன்மார் வீதம்) பவனி வருவது கண் கொள்ளாக் காட்சி.மயிலை- திருவள்ளுவர் கோயிலில் இருந்து ஊர்வல மாக எடுத்து வரப்படும் திருவள்ளுவர் உற்சவரும் இதில் கலந்துகொள்வது சிறப்பு.

விழாவின்போது மயிலையின் பல பகுதிகளிலும் அன்ன தானம் நடைபெறும். இந்த விழாவைச் சிறப்பித்து இயற்றப் பட்ட, ‘திருமயிலை அறுபத்துமூவர் வழிநடைச் சிந்து’ (1888-ம் ஆண்டு) எனும் நூல் ஒன்றும் உள்ளது.

முருகன் சிங்காரவேல் பெற்ற தலம்!

சிக்கல் தலத்தில் சக்தி வேல் பெற்ற முருகப் பெருமான், மயிலைக்கும் வந்து வழிபட்டு சிங்கார வேல் ஒன்றைப் பெற்றாராம். எனவே, இங்குள்ள முருகனுக்கு சிங்கார வேலன் என்று பெயர். இவ்வாறு தன்னை வணங்கிய முருகப் பெருமானிடம், ‘அண்ணன் விநாயகனையும் வணங்கு!’ என்று பணித்தார் ஈசன். அதன்படியே இங்குள்ள கணபதியையும் வணங்கி வழிபட்டார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த விநாயகர் ஆனந்தக் கூத்தாடினார். இவரே இங்கு நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.

மயிலையில் 7-ன் சிறப்பு!

ழு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட விஷயங்கள் மயிலையின் தனிச் சிறப்பு. இங்கு ஏழு ஆலயங்களில் குடியிருக் கிறார் சிவனார். அந்த விவரம்: கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர்.

ஏழு குளங்கள்: கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடவுள் தீர்த்தம் (கடல்), ராம தீர்த்தம்.

இங்குள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் முறையாக தரிசித்தால் எல்லா பேறுகளும் கிடைக்குமாம். அதனால் ‘கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று பெயர் பெற்றது, இந்தப் புண்ணியத் தலம்!