சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

அத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை

அத்திவரதர்
பிரீமியம் ஸ்டோரி
News
அத்திவரதர்

“அவன் அலகிலா விளையாட்டுடையவன். அவதாரங்கள் பல எடுத்தவன். அப்படி அவதாரமெடுத்து வந்தபோதே ஒரு கூட்டம் அவனை, `மாயாவி’ என்றது. `மாபாவி’ என்றும் சொன்னது."

கி.பி. 1310-ம் ஆண்டில் ஒருநாள்...

`அத்திகிரி’ என்று போற்றப்படும் காஞ்சியம்பதியெங்கும் கடும் மழைப்பொழிவு! மல்லைக் கடலோரமாகப் புயலானது மையம்கொண்டிருந்தபடியால் பல்லவ தேசமான தொண்டை மண்டலம் எங்கனுமே வெள்ளக்காடுதான்! இந்த மழைக்கு பயந்துகொண்டு ஊரே வீட்டுக்குள் அடங்கிக் கிடந்தநிலையில் ஒருவன் மட்டும் அதற்குத் தயாரில்லை. அள்ளி முடிந்த சிகை, மேனியெங்கும் பன்னிரு திருமண்காப்பு. அத்துடன் தாழங்குடையொன்றை அவன் தேடி எடுத்தபோது அதன் ஒரு சில பகுதிகளை எலி கடித்ததில் ஆங்காங்கே துவாரங்கள்!

அந்த எலிகளைக் கொல்ல பாஷாணம் வைக்கலாம்தான். பக்கத்து வீடுகளில் எலிகள் அப்படிச் செய்து அவர்களால் உயிரைவிட்ட எலிகள் எத்தனையோ... ஆனால், இவன் அவ்வாறு செய்யத் தயாரில்லை. தன் மனைவியான திருமங்கையிடம் “எந்த ஓர் உயிரையும் படைக்கும் ஆற்றலும் நமக்கில்லை. அதனால் கொல்லும் உரிமையும் நமக்கில்லை. எனவே, இந்த மனையில் ஈ எறும்புகளுக்குக்கூடத் தீங்கு நேரக் கூடாது” என்று கூறிவிட்டிருந்தான். இவன் மனைவி திருமங்கை என்பவளோ மணவாளன் சொல்லை அந்த மாலவன் சொல்லாகவே கருதுபவள். எனவே, அவன் விருப்பமே தன் விருப்பம் என்று வாழ்ந்துவருகிறாள். இப்போது தாழங்குடையில் துவாரங்களைப் பார்த்தபடி நின்றுவிட்ட தன் பதியைப் பார்த்தபடியே விரைந்து வந்தாள் அந்த சதி. வந்த வேகத்தில் தன் பதியான திருவேங்கடநாதனின் திருமுகத்தைப் பார்க்க வெட்கப்பட்டவள்போல் தலைகுனிந்தாள் அத்திருமங்கை.

“ஏன் தலைகுனிகிறாய் மங்கை... இதில் உன் பிழை ஏதுமில்லையே... எலிகளின் செயலுக்கு நீ என்ன செய்வாய்?” என்றான் திருவேங்கடநாதன்.

“வேறு குடையுமில்லை... வேண்டுமானால் பக்கத்து மனையில் வாங்கி வரவா?” - தயங்கியபடி கேட்டாள் திருமங்கை.

“வேண்டாம். அது நல்ல பழக்கமல்ல. அதனாலென்ன, இந்த மழையில் நனைந்தபடியே அந்த அத்திகிரிக்குச் சென்றால் நான் என்ன கரைந்தா போய்விடுவேன்... இதைக் கழிப்பில் போடு. நான் சென்று வருகிறேன்...” என்ற திருவேங்கடநாதன் சில அடிகள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான். திருமங்கை எதனால் அவன் திரும்பி வந்தான் என்பதுபோல் பார்த்தாள். அவன் முகத்தில் சிந்தனை.

“என்ன யோசனை?”

“இல்லை... மழையில் நனைந்தபடி செல்கையில் இந்தப் பன்னிரு திருமண்காப்பும் அழிந்து கரைந்துவிடுமே என்றுதான் யோசிக்கிறேன்...”

அத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை

“அப்படியானால் திருமண்கட்டியும் ஸ்ரீசூர்ணமும்கொண்ட நாமப் பெட்டியைக் கையோடு கொண்டு சென்று ஆலயத்தில் இட்டுக் கொள்ளலாமே?”

திருமங்கை எடுத்துக் கொடுத்தாள். அதே வேகத்தில் “கேட்கிறேன் என்று தவறாகக் கருதாதீர்கள். அப்படியாவது இந்த மழையில் நனைந்துகொண்டு தாங்கள் இப்போது அத்தி கிரிக்குச் செல்லத்தான் வேண்டுமா?” என்றும் கேட்டாள்.

“நீ என்ன சொல்கிறாய் திருமங்கை. இந்த மழைக்கு பயந்துகொண்டு இன்றைய என் கடமையை மறுக்கச் சொல்கிறாயா?”

“வேறுவழி... இப்படி விடாமல் பொழியும் மழையில் நனைந்தால் உடம்பு என்னாகும்? நாளையே காய்ச்சலும் தடுமனும் பிடித்தால் நீங்களல்லவா கஷ்டப்படுவீர்கள்?”

“மங்கை நீ ஒன்றை மறந்துவிட்டாய்... நாம் வணங்கும் அந்த அத்திகிரி வரதன் பலப்பல காலமாக ஆலயத்து அனந்த சரஸில் மூழ்கியே கிடக்கின்றானே..! அவனை எண்ணிப் பார்... அப்படியானால் அவன் எத்தனை அவஸ்தைப்பட வேண்டும்?”

- திருவேங்கடநாதன் அப்படிக் கேட்கவும் திருமங்கையிடம் விதிர்ப்பு.

“எனக்கு இது நினைவுக்கு வரவில்லை... தாங்கள் கூறிடவும்தான் நினைவுக்கு வருகிறது... ஆமல்லவா?” என்றாள்.

“கவலைப்படாதே... இந்தப் பஞ்சபூதங்களின் கருணை நமக்குத்தான் வேண்டும். நாம் சாமான்யப் பட்ட மானுடப் பிறவிகள். அவனோ அந்த பூதங்களையே படைத்த பெரும் படைப்பாளி. அவனுக்கு நீரும் ஒன்றே, நிலமும் ஒன்றே... வானும் ஒன்றே, வாயுவும் ஒன்றே...” என்றான்.

“நெருப்பை விட்டுவிட்டீர்களே...” என்றாள் திருமங்கை.

“காரணமாகத்தான் அதைச் சொல்லவில்லை. அத்திகிரி வரதன் வேள்வித்தீயில் தோன்றி, பிரம்மனுக்கு சிருஷ்டி தண்டத்தை அருளியவன். அப்படி அவன் அருளிய கோலமே அத்திகிரிமேல் வரதராஜனாகக் காட்சியும் தருகிறது. அப்படிப் பட்டவன் நெருப்புக்கு அஞ்சி நீருக்குள் புகவில்லை. சிலரின் வெறுப்புக்கு அஞ்சியே நீருக்குள் புகுந்தான்...”

“அப்படியா... அவனை வெறுக்கக்கூடிய மனிதர்களும் இம்மண்ணில் உள்ளனரா... இது என்ன விந்தை?” என்று அலமலந்தாள் திருநங்கை.

“அதுவும் அவன் செயல்தான் மங்கை” என்ற திருவேங்கடநாதனின் பதில் திருமங்கைக்கு மேலும் அதிர்வைத்தான் தந்தது.

“தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“அவன் அலகிலா விளையாட்டுடையவன். அவதாரங்கள் பல எடுத்தவன். அப்படி அவதாரமெடுத்து வந்தபோதே ஒரு கூட்டம் அவனை, `மாயாவி’ என்றது. `மாபாவி’ என்றும் சொன்னது. சிசுபாலன் என்பவன் நூறு அவச் சொற்களால் பாதகார்ச்சனையே புரிந்தான்.

“பாதகார்ச்சனையா... பாதுகார்ச்சனையா?”

``அழகாகக் கேட்கிறாயே... இது பாதுகார்ச்சனை அல்ல; பாதகார்ச்சனை... அதாவது பாதகமான அர்ச்சனை.”

“இப்படியெல்லாம்கூட நடக்குமா?”

“நடந்ததைத்தானே சொல்கிறேன்..!”

“அவன் எப்படி அதைச் சகித்தான்?”

“உனக்கு `நாராயண தத்துவம்’ என்றால் என்னவென்று தெரியுமா?”

“நான் ஒன்று கேட்டால், நீங்கள் ஒன்று சொல்கிறீர்களே ஸ்வாமி...”

“உன் கேள்வியைவிட்டு நான் விலகவில்லை. உனக்குப் பதில் கூறவே இப்படிக் கேட்டேன்...”

“மன்னிக்கவேண்டும். உங்களைப்போல் ஐந்து வயதில் அட்சராப்யாசம், ஆறுவயதில் குருகுலம், ஏழுவயதில் காலட்சேபம் என்று நெடிய கல்விச் சம்பந்தம் எதுவும் எனக்கு இல்லை. `கிரக லட்சுமியாக மட்டும் நான் இருந்தால் போதும்’ என்று அட்சராப்யாசத்தோடு நிறுத்திவிட்டார் தந்தை. எனவே, எனக்கு ஏடு தெரியாது எழுத்தும் தெரியாது... இது தெரிந்தாலல்லவா வேதம், புராணம், இதிகாசங்களின் பக்கம் நான் செல்ல?”

“மங்கை நீ நன்றாகப் பேசுகிறாய். ஆணாகப் பிறந்திருந்தால் வாதம், பிரதிவாதம், சண்டம், பிரசண்டம் என்று மின்னியிருப்பாய்...”

“என் கேள்விக்கு பதிலைச் சொல்லுங்கள். எம்பெருமான்மேல் கூட வெறுப்பு கொண்டவர்கள் உண்டா... அவர்களுக்கு அஞ்சியா எம்பெருமானும் அனந்த சரஸினுள் மறைந்து கிடக்கிறான்?”

“அதற்குத்தான் நாராயண தத்துவம் தெரியுமா என்று கேட்டேன்... அதற்கு நானே விளக்கமளித்து விடுகிறேன். ‘நான் இருக்கிறேன்; அதனால் இல்லாமலும் இருக்கிறேன்’ என்பதே நாராயண தத்துவம்.”

“இது என்ன விந்தை... குழப்பமாக இருக்கிறதே...”

“இது ஒரு தெளிவான தத்துவம்... இது புரியா விட்டால் எப்படி மங்கை?”

“தெளிவான தத்துவமா... எப்படி? நீங்கள்தான் புரியும்படி சொல்லுங்களேன்.”

“சொல்கிறேன்... என் சிற்றறிவுக்கு எட்டியவரை யில் சொல்கிறேன். எப்போதும் இருக்கின்ற ஒன்றையே நாம் அறிய முடியும். இதோ இந்த ஓட்டை விழுந்த எலி கடித்த தாழங்குடை... அதோ அந்த நாற்காலி... இதோ உன் சடையின் முடிவில் தொங்கும் குஞ்சரம்... இவையெல்லாமே இருப்பவை. இதுபோல் இந்த உலகில் கோடானு கோடி வஸ்துகள் உள்ளன... அல்லவா?

“ஆமாம்.”

“அவையெல்லாவற்றையும் நாம் பார்க்கையில் அது இருப்பதை அறிந்துகொள்கிறோமல்லவா?”

“ஆமாம்.”

“இந்த உலகில் இல்லாத ஒன்றை நாம் காண முடியுமா?”

“அது எப்படி முடியும்?”

“முடியாதல்லவா?”

“நிச்சயமாக முடியாது. அந்த இல்லாத ஒன்று எது என்றுகூடக் கூற முடியாது.’’

“சரியாகச் சொன்னாய்... அப்படியானால் இருக்கின்ற ஒன்றுதான் இல்லாமலும் போக முடியும். சரிதானே?”

“சரிதான்...”

“இப்போது நீ இங்கிருக்கிறாய்... இந்த இடம் நீங்கலாக இந்த உலகில் உன்னை எங்கே தேடி னாலும் இருக்க மாட்டாயல்லவா?”

“ஆமாம்.”

“அப்படித்தான் நாராயணனும். உண்டென்பார்க்கு அவன் உண்டு; இல்லை என்பார்க்கு அவன் இல்லை!”

“சரி... இது என் கேள்விக்கு எப்படி பதிலாகும்?”

அத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை

“உன் கேள்வி என்ன... `அவனை வெறுப்ப வர்களும் இருக்கின்றனரா?’ என்பதுதானே?''

“ஆம்...”

“அதற்கே இந்த பதில். அதற்கே சிசுபாலனையும் உதாரணம் கூறினேன். என்போல் உன்போல் அவனை `எல்லாம்’ என்று நினைப்பவர்களால் மட்டும் இந்த உலகம் சுழலவில்லை. `இல்லை’ என்பவர்களாலும்தான் சுழல்கிறது.”

“ஏன் அப்படி?”

“ஒன்று இரண்டாக இருந்தால்தான் அந்த ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். இந்த பூமியை எடுத்துக்கொள். இது இரவென்றும் பகலென்றும் உள்ளது. அப்படி இருந்தாலே உலகைப் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களும், `ஆண்’ என்றும், `பெண்’ என்றும் இருமையாக உள்ளனர். சுவைகூட இனிப்பென்றும் கசப்பென்றும் உள்ளது. உணர்விலும் இன்பம் துன்பம்... இப்படி உள்ள இருமைகளே ஒன்றை விளங்கத் துணை செய்கின்றன.”

“அப்படியானால் அவனை வெறுப்பவர்களும் அவன் படைப்பென்றாகிறதே?”

“அதிலென்ன சந்தேகம்... இந்த உலகமே அவன் படைப்புதான்... இதில்தானே பூசிப்பவர், தூஷிப்பவர் எல்லாரும் உள்ளனர்?”

“அப்படி வெறுப்பவர்களுக்கு பயந்து அவன் அனந்த சரஸில் மூழ்கிக்கிடக்கிறான் என்கிறீர் களே... அவனுக்குக் கூடவா விருப்பு, வெறுப்பு?”

“அருமையாகக் கேட்டாய். இப்படிக் கேட்டால் தான் நல்ல, சரியான விடையும் கிடைக்கும்.”

“எது அந்தச் சரியான விடை?”

“சொல்கிறேன் கேள்... நம் மண்ணிலும்கூட தன் சமயம் ஒன்றே சமயம்; மற்றவை பொய் என்று கருதி, அவற்றை அழித்தொழிக்க முற்படவில்லையா. அவ்வேளை, நான் என் ஆத்ம குருவாகக் கருதிடும் ராமாநுஜ மகாத்மாவும் பாடாய்ப்பட்டாரே...!

அதேபோல், மிலேச்சர்களின் படையெடுப்பு குறித்தும் அறிந்திருப்பாய். அவர்களின் இறை மார்க்கம் என்பது வேறு. அதில் உருவ வழிபாட்டுக் கெல்லாம் இடமில்லை. ஆகையால் உருவ வழிபாடு செய்பவர்களை அவர்கள் மூடர்களாகக் கருதுகிறார்கள்.

விளைவு எத்தனை எத்தனை புண்ணிய க்ஷேத்திரங்கள் அழிவைச் சந்தித்தன தெரியுமா... நம் திருவரங்கத்தின் கதி நீ அறியாததா... இங்கே நம் அத்திகிரியும்அத்திகிரி அருளாளனும் அதே நிலையில்தான். ஆக, இப்படியானோரின் வெறுப்புக்கு அஞ்சியே நீருக்குள் புகுந்தான் வரதன் என்றும் கூறலாம்.''

``ஐயோ... கேட்கவே எனக்கு நெஞ்சம் பதறு கிறதே... அவதாரங்கள் பல கண்ட எம்பெருமான் இந்த மிலேச்சர்களை வதம் செய்ய ஏன் வரவில்லை... அவர் வரக்கூட வேண்டாமே... தன் தாமச உறக்கத்தில் நினைத்தால்கூடப் போதுமே.”

“அதுசரி... அவன் படைத்த மனிதர்களை அவனே அழிப்பானா?”

“இது என்ன கேள்வி... இவர்கள் அசுரர் களல்லவா?”

“அசுரர்களைக்கூட அவன் எங்கே கோபப்பட்டு அழித்தான்... தேவர்கள் போய்க் கெஞ்சுவார்கள், கதறுவார்கள். அவனும் அசுரர்களுக்குச் சந்தர்ப்ப மெல்லாம் அளிப்பான். இறுதியில்தான் சம்ஹாரம்! ஆனால் இது கலியுகம்... இந்த யுக தர்மம் வேறு திருமங்கை.”

“அப்படியானால் கலியுகத்தில் பக்தர்களைவிட எதிர்ப்பவர்களுக்குத்தான் அதிக சக்தியா?”

“அப்படி இல்லை... இது ஒரு யுக நிலை! உறுதி மிகுந்தவரே இறுதியில் வெல்வர்.”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“நன்றாகக் கேட்டுக்கொள். உன் பக்திக்கும் நம்பிக்கைக்கும் நிறையவே சோதனைகள் வரும். அப்போது நீ உறுதியாக இருந்தால் இறுதி வெற்றி உனக்கு. அல்லாவிடில் வெற்றி எதிர்ப்பவனுக்கு.’’

“அதுசரி... எம்பெருமான் கருணையை உணரா மல் எதிர்த்துச் செயல்படுபவர்கள் தங்கள் பாவத்துக்கு அனுபவிக்கமாட்டார்களா?”

“நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடையும் செய்வோம். பக்தியை விதைத்தால், பதிலுக்கு முக்தி. மாறாக அரக்கத்தை விதைத்தால், இரக்கமற்ற பிறப்பே பிறக்க நேரும்...”

“இரக்கமற்ற பிறப்பென்றால்?”

“பாம்பாய், தேளாய், மானாய், பன்றியாய் என்று பிறந்து, இயற்கையான மரணமின்றி, கொல்லப்படும் பிறப்பைச் சொன்னேன்...’’

“அதுசரி... இவர்களைப் போன்றவர்களால் நாமும் அல்லவா வேதனைக்கு ஆட்படுகிறோம்...”

“அந்த வேதனை ஒரு பாடம் தேவி. `உனக்காக மட்டும் வாழ்ந்திடாதே... உலகுக்காகவும் வாழ்ந்திடு’ என்பதை உணர்த்தவே அந்த வேதனை நமக்கு அளிக்கப்படுகிறது.”

“புரியவில்லை எனக்கு.”

“உலகம் என்பது அறவோரால் மட்டுமே ஆனதல்ல. அறமற்றோரும் இருப்பர். அவர்களை அறவோராக்க நாம் பாடுபட வேண்டும். தவறாக ஒருவரைக் கண்டால் அவரைத் திருத்தும் கடமை நமக்கிருப்பதை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.”

“அப்படியும் அவர் திருந்தவில்லை என்றால்?”

“நமக்கு வலிமை போதவில்லை என்று பொருள்.”

- திருவேங்கடநாதனின் மணிமணியான கருத்துகளைக் கேட்ட திருமங்கை “இன்றைய மழையை நான் மனதார வாழ்த்துகிறேன்” என்றாள்.

“ஏன் அப்படி?”

“இல்லாவிட்டால் நீங்கள் இத்தனை தூரம் என்னோடு பேசியிருப்பீர்களா... இதில்தான் எவ்வளவு ஆழ்ந்த கருத்துகள்.”

“உண்மைதான். உன் கேள்விகளும் சரியான கேள்விகளே. அதனால்தான் என்னாலும் தெளிவுற பதில் கூற முடிந்தது.”

“இருப்பினும் ஒரு கேள்வியை நான் இன்னமும் கேட்கவில்லை. கேட்டுவிடட்டுமா?”

“தாராளமாகக் கேள்.”

“வெறுப்பாளர்களின் வெறுப்பைச் சகிக்காமல் நீருக்குள் புகுந்துவிட்டார் அத்திவரதர் என்று யதார்த்தமான கருத்தைச் சொல்கிறீர்கள். சரி, அவர் நீருறைந்து கிடப்பதற்குப் புராணப் பின்புலமும் இருக்கும் எனக் கருதுகிறேன். அதை நான் அறியலாமா?''

“தாராளமாக... பிரம்மன் சிருஷ்டி தண்டம் பெற்றபோது, தான் கண்ட கோலத்தை எல்லோரும், எப்போதும் காண விரும்பினான். அவன் விருப்பத்துக்கேற்ப ஓர் அர்ச்சாரூபம்கொள்ள எம்பெருமானும் உடன்பட்டான்.

இந்திரன் பொருட்டு தேவராஜனாய் அத்தி கிரியில் கற்சிலையாகக் கோயில் கொண்டிருப்பதால், வரதராஜனாக தாதுவில் கோயில்கொள்ள முன்வந்தான். அதன் பொருட்டு அத்திவனத்து அத்தி விருட்சம்கொண்டு விஸ்வகர்மாவும் மயனும் அத்திவரதனைச் சமைத்தனர். அத்தி, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அணுவளவு சேதமின்றி இருந்திடும் தன்மை உடையது.

அப்படிப்பட்ட இந்த தூலத்தைத்தான் எங்கே மிலேச்சர்கள் தீயிட்டுக் கொளுத்திவிடுவார்களோ என்று அனந்த சரஸில் மூழ்கச்செய்து, காவலும் இருந்தனர். மிலேச்சப் படையெடுப்பு முடிந்து, நன்னிலை திரும்பவும் எம்பெருமானை வெளியே எடுத்து பக்திபுரிய முயன்றனர். ஆனால், அதன்பொருட்டு முயன்றவர் கனவில் அவன் அதற்கு உடன்படவில்லை.

`நான் வெளிப்படும் தருணத்தை நானே உணர்த்துவேன். அப்போதும் நிலையாக வெளியில் கோயில்கொள்ளேன். ஒரு மண்டல காலம் வெளிவாசம் புரிந்து, பின் ஜலவாசியாவேன்!’ என்று கூறிவிட்டான்...”

“ஜலவாசத்தில் எம்பெருமானுக்கு ஏன் இத்தனை விருப்பம்?”

“ `நாரமாகிய நீரை அணைந்தவன்’ என்பதால் தானே அவனை, `நாரணன்’ என்கிறோம்... நீரின் பிரிதொருவடிவம்தானே பாற்கடல்... அதில்தானே அவனும் பள்ளி கொண்டிருக்கிறான்... எனவே, தலங்களில் அரிதான இந்த அத்திகிரியில் ஜலவாசம்புரிய அவன் விரும்பியதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. அதே சமயம் மறைமுகமாக அவன் நீரின் பெருமையையும் அருமையையும் உணர்த்தவும்கூட இப்படிக் கோயில்கொண்டிருக்கிறான் எனலாம்.”

“என்றால் பஞ்சபூதங்களில் நீர் முதன்மை யானதா?”

“அதிலென்ன சந்தேகம்... அன்னை வயிற்றில் பனிக்குட நீரில்தான் நாமே உருத்திரள்கிறோம். வாழ்வின் முடிவிலும் அஸ்திச் சாம்பலாகி நீரில்தானே முடிந்தும் போகிறோம்... இடைக்காலத்திலும் உணவின்றிக்கூட நாள்களைக் கடத்திவிடலாம். நீரின்றி இயலாதே! இதுவே பிரதானம் என்பதால்தானே இந்தப் பூதலமேகூட மூன்று பங்கு நீரோடும் ஒரு பங்கு நிலத்தோடும் உள்ளது.”

“ஸ்வாமி... எத்தனை அரிய விளக்கங்கள். இதனால்தான் அத்திகிரி செல்லும்போதெல்லாம் அனந்த சரஸில் தாங்கள் கால்களைக்கூடக் கழுவுவதில்லையா?”

“ஆம் திருமங்கை. அங்கே அந்த ஜல சேர்க்கை அவ்வளவையுமே நான் எம்பெருமானாகத்தான் காண்கிறேன். நாம் அவ்வளவு பேரும் காண வேண்டும் என்பதற்காகக்கூட அவன் ஜலத்தில் பள்ளிகொண்டிருக்கலாம்.”

“அற்புதம்... இதனால்தான் `தாயைப் பழித் தாலும் தண்ணீரைப் பழிக்காதே!’ என்றனரோ?”

“இருக்கக்கூடும். ஒன்று மட்டும் உண்மை. எம்பெருமான் இந்த ஜலவாசத்தில் இருக்கும்வரை இன்னோர் ஊழி ஏற்படாது. அதன் காரணமாகவும்கூட அவன் ஜலவாசியாகி இருக்கலாம். அவன் திருவுள்ளத்தை நம் சிற்றறிவால் சிறிதே அறிய முடியும்.”

- திருவேங்கடநாதன் சிலிர்ப்போடு சொன்ன நொடி, அதுவரை சிலிர்த்தபடி இருந்த மழையும் நின்றது.

“தாங்கள் இனி பன்னிரு திருமண் காப்புடன் தடையின்றிச் செல்லலாம்” என்றாள் திருமங்கை. திருவேங்கடநாதனும் அத்திகிரி வரதன் ஆலயம் நோக்கி நடக்கலானான்.

இந்தத் திருவேங்கடநாதனே பின்னாளில் `வேதாந்த தேசிகர்’ என்றானார். குறிப்பாக, இவருக்கு இவர் மாமனாரே, தான் இறக்கும் தறுவாயில் கருட மந்திரத்தை உபதேசித்தார். அப்படியே ராமாநுஜரின் பாதுகைகளையும் அளித்து, அதைச் சிக்கெனப் பற்றிக்கொள்ளச் சொன்னார். இவரும் அதைப் பிரதானமாக எடுத்துக்கொண்டு, திருவஹீந்திரபுரம் சென்று, அங்குள்ள கருடநதியில் நீராடி, செங்கமலநாச்சியாருடன்கூடிய தேவநாதப் பெருமாளைச் சேவித்து, பின் ஒரு விருட்சம் கீழ் அமர்ந்து கருடஜபம் புரிந்தார்.

ஆயிரம், லட்சம் என்று விரிந்த அந்த ஜபம் கோடியைத் தொட்டு, ஒன்பது கோடி என்கிற இலக்கைக் கடக்கவும் கருடன் பிரத்யட்சமானான்! பிரத்யட்சமான நிலையில், எம்பெருமானின் ஞானப் பேரருளுக்கு இலக்கான ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தான்.

நித்ய ஆராதனத்தின் பொருட்டு ஹயக்ரீவ மூர்த்தியையும் தந்தான் கருடன். இதனால் காலத்தால் ஹயக்ரீவர் தரிசனமும் இவருக்கு வாய்த்தது. அவ்வேளையில் வாக்கு நோக்கு போக்கு எனும் மும்மைக்குமான வரசித்தியையும் அருளினார்.

அந்த நொடிமுதல் அதுவரை திருவேங்கட நாதனாக இருந்தவர், `ஸ்ரீவேதாந்த தேசிகர்’ என்றானார். வாக்கினால் கவிதை, நோக்கினால் தீட்சை, போக்கினால் காரிய ஸித்தி என்று ஓர் அருள் சாம்ராஜ்யத்தைத் தொடங்கினார். சம்ஸ்கிருதம், தமிழ் என்று கண்ணான இரு தெய்வ பாஷையிலும் காவியங்கள் படைத்தார்.

இவரது காலத்தில் அனந்த சரஸில் கிடந்த அத்திவரதர் வெளிப்பட்டதற்கான குறிப்புகள் காணப்படவில்லை.

கி.பி. 1369-ம் வருடம், தன் 101-வது வயதில் வைகுண்ட முக்திபெற்ற இவர் காலத்துக்குப் பிறகே, எம்பெருமான் 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிவாசம் புரியும் ஒரு நெறிப்பாடு, எம்பெருமான் திருவுள்ளப்படி உருவாகியிருக்க வேண்டும்!