திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

நந்தி தரிசனம்!

நந்தி தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தி தரிசனம்

ஒரு காலத்தில் இந்தக் கோயிலை ஒட்டியுள்ள வயல்களில் இரவு நேரத்தில் நெற்கதிர்கள் தொடர்ந்து களவு போயின

கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு அருகில் உள்ள கண்ணனூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது தளிப்பறம்பு ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில். இங்கு, நந்திக்கென்று தனியே சந்நிதி உள்ளது.

ஒரு காலத்தில் இந்தக் கோயிலை ஒட்டியுள்ள வயல்களில் இரவு நேரத்தில் நெற்கதிர்கள் தொடர்ந்து களவு போயின. இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் ஊர் மக்கள் எப்படியும் அந்தத் திருடனை கண்டுபிடித்து விடுவது என்று தீர்மானித்து இரவு முழுவதும் கண் விழித்துக் காவல் இருந்தனர்.

நட்ட நடுநிசியில் வெள்ளை நிறக் காளை ஒன்று வந்து நெற்பயிரை மேய்வதைக் கண்டனர். அந்தக் காளையைப் பிடிக்க முயன்றபோது, அது பாய்ந்து சென்று கோயிலுக்குள் மறைந்து விட்டதாம்.

‘பிரச்னம்’ பார்த்தபோது, ‘சிவபிரானுக்குப் படைக்கும் நைவேத்தியத் திலிருந்து எனக்கு ஒரு பிடிகூட கிடைப்பதில்லை. ஆகவே, எனக்காகக் கொஞ்சம் நிலம் ஒதுக்க வேண்டும். அதில் விளையும் நெல்லில் இருந்து சிவனுக்கு நைவேத்தியம் செய்து படைத்த பின் எனக்கும் கொடுக்க வேண்டும். எனக்கென்று தனியே சந்நிதி ஒதுக்க வேண்டும்’ என்றெல்லாம் அந்த சமத்கார நந்தி கேட்டுக்கொண்டது.

நந்தி தரிசனம்
நந்தி தரிசனம்

அதன்படி, ஒதுக்கப்பட்ட அந்த நிலத்தில் விளையும் நெல்லை சிவனுக்கு நைவேத்தியம் செய்தபின் நந்திக்கும் படைக்கிறார்கள்!

தமிழகத்தில் காஞ்சிபுரம், விருத்தாசலம், திருவிடைமருதூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களின் சிவாலயங்களில் ‘பஞ்ச நந்திகள்’ உள்ளன. அந்த பஞ்ச நந்திகள் எவை தெரியுமா?

போக நந்தி அல்லது இந்திர நந்தி: கோயிலின் வாயிற்புறம் உள்ளது.

வேத நந்தி அல்லது பிரம்ம நந்தி: சுதையினால் அமைக்கப்பட்டது.

ஆத்ம நந்தி: பிரதோஷ காலத்தில் அபிஷேகம் செய்யப் பெறுவது.

மகா நந்தி அல்லது மால்விடை நந்தி: மகா மண்டபத்தில் உள்ளது.

தரும நந்தி: மூல ஸ்தானத்துக்கு அருகில் இருப்பது.

- கே.லோகநாதன், திருச்சி-2