Published:Updated:

ராகு - கேது தோஷங்கள் தீர்க்கும் 'நாகசதுர்த்தி-கருடபஞ்சமி' விரதங்கள்!- வழிபடுவது எப்படி?

சி.வெற்றிவேல்

நாகசதுர்த்தி அன்று கோயில்களில் உள்ள நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பச்சரிசி மாவும் வெல்லமும் கலந்தும், எள்ளுப்பொடியும் வெல்லமும் கலந்தும் பிரசாதங்கள் செய்து எடுத்துச்சென்று அபிஷேகம் செய்தபின் நைவேத்தியமும் தீபாராதனையும் செய்ய வேண்டும்.

நாக சதுர்த்தி
நாக சதுர்த்தி

ஆடிமாதம் வரும் பண்டிகைகளுள் மிகவும் முக்கியமானவை நாகசதுர்த்தி - கருடபஞ்சமி என்னும் இரட்டை விரதங்கள். இந்த விரதங்கள் தமிழகம் மட்டுமல்லாது நாடுமுழுவதும் கடைப்பிடிக்கப்படும் விரதங்களாகத் திகழ்கின்றன. ஆடி அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி அன்று நாகசதுர்த்தி என்றும் அடுத்தநாள் கருடபஞ்சமி என்றும் சொல்லப்படுகிறது.

நாக சதுர்த்தி வழிபாடு
நாக சதுர்த்தி வழிபாடு

நாகசதுர்த்தி அன்று கோயில்களில் உள்ள நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பச்சரிசி மாவும் வெல்லமும் கலந்தும், எள்ளுப்பொடியும் வெல்லமும் கலந்தும் பிரசாதங்கள் செய்து எடுத்துச்சென்று அபிஷேகம் செய்தபின் நைவேத்தியமும் தீபாராதனையும் செய்ய வேண்டும். அங்கு இருக்கும் சுமங்கலிகளுக்கு வெற்றிலைபாக்கு கொடுப்பது அவசியம். வீட்டின் நிலையில் பாம்புகள் போல் வரைந்து அதற்கு தீபாராதனை காட்டி வழிபடும் வழக்கமும் உண்டு.

Vikatan

கருடபஞ்சமி அன்றும், ஆலயத்துக்குச் சென்று நாகர் சிலைக்கு அபிஷேகமும் நைவேத்தியமும் செய்ய வேண்டும். பின்பு நாகர் சந்நிதி மண் அல்லது புற்றுமண்ணை எடுத்துவரவேண்டும். வீட்டில் மஞ்சள் கயிற்றில் 7 அல்லது 9 முடிச்சுகளிட்டு அம்மன் படம் அல்லது விக்ரஹத்தில் அணிவிக்க வேண்டும்.

நாக சதுர்த்தி
நாக சதுர்த்தி

பின் வீட்டில் பெரியவர்கள் கருடபஞ்சமி கதையினைச் சொல்வார்கள். கதை முடிந்ததும் பெண்கள் அந்தத் தோரணத்தை கையில் கட்டிக்கொள்வர். எடுத்துவந்த புற்றுமண்ணை சகோதரர்களுக்கு இட்டு அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவர்.

நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி குறித்து முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் கேட்டோம்...

“வேத காலத்திலிருந்தே நாக வழிபாடும் கருட வழிபாடும் இருந்து வருகிறது. சிவபெருமான் நாகத்தைத் கழுத்திலும், திருமால் நாகத்தின் மேல் சயனம் மேற்கொண்டிருக்கிறார். விநாயகர் முப்பறி நூலாக நாகத்தை அணிந்திருக்கிறார். துர்கை நாகத்தைத் தன் கையில் ஆயுதமாக வைத்திருக்கிறாள், காளி வளையலாக அணிந்திருக்கிறாள். சூரிய பகவான் புரவிகளைப் பூட்டுவதற்கு நாகத்தைத்தான் பயன்படுத்துகிறார். சரஸ்வதி தேவி நாகத்தையே மாலையாக அணிந்திருக்கிறாள். வாராகி சேஷ நாகத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். இவற்றிலிருந்தே நாகத்தின் முக்கியத்துவத்தை அறியலாம்.

நாக சதுர்த்தி
நாக சதுர்த்தி

சர்ப்ப வழிபாடு அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். ஒருவரின் வாழ்வில் ஐஸ்வர்யங்கள் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவை கிடைக்கச் சர்ப்ப வழிபாடு அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் 5 - ம் இடத்தில் ராகு - கேது இருந்தால் புத்திரப் பேறு தடைப்படும். இவர்கள் நிச்சயம் சர்ப்ப வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ராகு - கேது தோஷங்களைப் போக்க உகந்த நாள் நாக சதுர்த்தி தினமாகும்.

நாக சதுர்த்தி தினத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் ஆகியவற்றை ஊற்றி வழிபடலாம். கோயிலுக்குச் சென்று நாக தெய்வத்துக்கு மஞ்சள் தூவி வழிபடலாம். இந்த நாக ஆராதனை செய்வதன் மூலம் அநேக சௌக்கியங்கள் ஏற்படும். ராகு - கேதுவின் பாதிப்பால் ஏற்படும் திருமணத்தடை விலகும், குழந்தைப்பேறு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கருட பஞ்சமி
கருட பஞ்சமி

தம்பதிகளுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் கருட பஞ்சமி. இன்று திருமால் கோயிலுக்குச் சென்று கருட பகவானை வழிபட்டாலே நாகத்தின் மூலம் ஏற்படும் தொந்தரவுகள் விலகும். விஷப்பூச்சிகள் நெருங்கவே நெருங்காது என்பது ஐதிகம்” என்றார்.