Published:Updated:

வாராஹி சித்தர் வழிபடும் மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரமர்த்தினி
பிரீமியம் ஸ்டோரி
மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரமர்த்தினி

வாராஹி சித்தர் வழிபடும் மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரமர்த்தினி

Published:Updated:
மகிஷாசுரமர்த்தினி
பிரீமியம் ஸ்டோரி
மகிஷாசுரமர்த்தினி

நாகர்கோவிலிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வாள்வச்ச கோஷ்டம் மஹிஷாசுரமர்த்தினி திருக்கோயில். பரசுராமர் பாபவிமோசனம் பெற்ற தலம், கலைமானின் கொம்பில் அம்மன் பிரதிஷ்டை ஆகியிருக்கும் ஆலயம், பரிவார தெய்வங்களும் சந்நிதி களும் இல்லாத க்ஷேத்திரம், வராஹி சித்தர் சூட்சுமமாய் வந்து பூஜிக்கும் கோயில் என்று பல்வேறு சிறப்புகளோடு திகழ்கிறது இந்த ஆலயம்.

மஹிஷாசுரமர்த்தினி திருக்கோயில்
மஹிஷாசுரமர்த்தினி திருக்கோயில்


வாள்வச்ச கோஷ்டம் எனும் இந்த ஊர் சிறிய கிராமமாகத் திகழ்கிறது. முன்னும் பின்னுமாய் கிராமத்துச் சாலைகள் சுற்றி வளைத்துச் செல்ல, மையமாய்த் திகழ்கிறது ஆலயம். ஆலயமுகப்பு சற்று உயரத்தில் அமைந்துள்ளது. படிக்கட்டுகளில் ஏறி வாசலை அடையலாம்.

கொடிமரம், சிற்பங்கள் நிறைந்த பலிக்கல் மண்டபம், இடஞாழி பகுதி, நமஸ்கார மண்டபம், ஒற்றைக்கல் மண்டபம் என மிக அற்புதமாக கேரளப்பாணியில் திருக்கோயில் திகழ்கிறது. கருவறையை சுற்றி நாலம்பலமும் அடுத்ததாக சுற்றம்பலமும் திகழ்கின்றன. கருவறையின் மேற்கூரையில் செப்புத்தகடுகள் வேயப்பட்டுள்ளன. விமானக்கலசமும் ஒரு தாமரையைப் போன்று இதழ்களோடு விசேஷமாய் அமைந்திருக்கிறது.

கோயிலின் ஒற்றைக்கல் மண்டபத்தின் தளம், தூண்கள், படிகள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாம். இந்த ஆலயம் முழுக்கவும் அழகுச் சிற்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பாற்கடலில் தோன்றிய ஆவஹந்தியாகிய மகாலட்சுமி, நாய் வாகனத்துக்கு அன்னம் இடும் பைரவர், கார்த்தவீரியன், வாலி-சுக்ரீவ யுத்தம், ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் காட்சி, மகா விஷ்ணு, கஜலட்சுமி, மன்மதன் - ரதி, நர்த்தன காளி, சூரியனைப் பிடிக்கத் தாவும் அனுமன், பிரம்மன் தாளம்போட விஷ்ணு மேளம் இசைக்க நடராஜரின் தாண்டவக் கோலம்... ஆகிய ஒவ்வொன்றும் சிற்ப அற்புதமே! குறிப்பாக பாவை விளக்குகள். பெண்ணின் ஒவ்வொரு பருவத்தைச் சுட்டும் விதமான உருவில் பாவை விளக்குகள் திகழ்கின்றன.

இங்கே அசுரனை அழிக்கும்பொருட்டு அனைத்துத் தெய்வங்களின் சக்தியையும் தன்னகத்தே கொண்டு விஸ்வரூப அம்சத்தில் அம்பிகை திகழ்வதால், பரிவார தெய்வங்களுக்குச் சந்நிதிகள் கிடையாது. ஆகவே, தூண்சிற்பமாய் இருக்கும் கணபதியை வணங்கிவிட்டு வழிபாட்டைத் தொடங்குகிறார்கள் பக்தர்கள்.

நாகர் சந்நிதியை மட்டும் இங்கே தரிசிக்கலாம். அதுவும் முற்காலத் தில் மதிலையொட்டி வெளிப்புறத்தில்தான் இருந்ததாம். பின்னர், பிரச்ன வாக்குப்படி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டதாம்.

கலைமான் கொம்பில் ஆவாஹனம்

முன்பு சங்கரவாரியார், இடத்தர போற்றி ஆகியோர் இந்தப் பகுதியை நிர்வகித்தார்களாம். ஒருமுறை அவர்களின் கண்களில் சிறுமி ஒருத்தி தென்பட்டாள். அது சாதாரணக் குழந்தை இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட இருவரும், கோயிலுக்கு அருகில் ஒரு கல்மண்டபத்தில் அவளை அமர்த்திவிட்டு, மன்னனுக்குத் தகவல் அனுப்பினார்கள். மன்னவனும் பிரச்னம் மூலம் சிறுமியாய் வந்திருப்பது அம்மனே என்றும், அவள் அந்த இடத்தில் கோயில் கொள்ள விரும்புகிறாள் என்பதையும் அறிந்தான்.

அம்மன் கோயில்
அம்மன் கோயில்
மஹிஷாசுரமர்த்தினி கோயில்
மஹிஷாசுரமர்த்தினி கோயில்
பரசுராமர்  குளம்
பரசுராமர் குளம்

அதன்படியே இந்த இடத்தில் கோயில் அமைக்கப்பட்டதாகவும் ஒரு திருக்கார்த்திகை தினத்தில் கலைமான் கொம்பில் அம்மனை ஆவாஹனம் செய்து எடுத்துவந்து இந்தக் கோயிலில் பிரதிஷ்டை பண்ணியதாகவும் சொல்கிறார்கள். ஆக, இந்தக் கோயிலுக்கு அந்தக் கல்மண்டபமே மூலஸ்தானம் என்பது ஐதீகம். இன்றைக்கும் வருடம் தோறும் திருக்கார்த்திகை தினத்தன்று அந்தக் கல்மண்டபத்திலிருந்து விளக்கு எடுத்து வந்து கோயிலில் அம்மனை குடி அமர்த்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் தங்கம் வழங்கிய அம்மன் கோயில் இதுதானாம். மன்னர் வந்து வழிபட சுரங்கப்பாதையும் பாதாள அறையும் இந்தக் கோயிலில் உண்டு என்கிறார்கள். பிற்காலத்தில் பாதாள அறை அம்மனின் நகைகளை வைக்கும் பாதுகாப்பு அறையாக இருந்ததாம். இப்போது அம்மனின் நகைகள், பத்மநாபபுரம் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆராட்டு தருணத்தில் மட்டும் அம்மனுக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

இரண்டு திருக்குளங்களைக் கொண்ட தலம் இது. ஆம்! அம்மன் பாலிக ருபத்தில் திகழ்பவள். ஆகவே எந்த விசேஷம் நடந்தாலும் கோயிலுக்குள்ளேயே நடக்கவேண்டும் எனும் நோக்கத்துடன், கோயிலுக்குள் திருக்குளம் ஒன்று அமைத்தார்களாம். பக்தர்கள் நீராடுவதற்கான குளம் கோயிலின் முன்புறம் தனியே அமைந்துள்ளது.

வாள் வைத்து வழிபட்ட திருத்தலம்

கோயிலின் சாந்தி சங்கர நாராயணன்
கோயிலின் சாந்தி சங்கர நாராயணன்

இங்கே அருள்பாலிக்கும் அம்பிகையை மஹிஷாசுரமர்த்தினி பகவதி அம்மன் என்றே அழைக்கிறார்கள் பக்தர்கள். கோயிலின் சாந்தி சங்கர நாராயணனிடம் பேசினோம். “தாயைக் கொன்ற பாவம் தீர பரசுராமர் இங்கு வந்து குளம் அமைத்து, மஹிஷாசுரமர்த்தினியைப் பிரதிஷ்டை செய்தாராம். பின்னர் குளத்தில் தனது மழு ஆயுதத்தைக் கழுவி, அம்மனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றாராம். அதன்பிறகே, திருவல்லம் சென்று திலஹோமம் செய்து தாய்க்கு மோட்சப் பிராப்தி கொடுத்ததாகவும் சொல்வார்கள். பாண்டவர்கள் அஞ்ஞான வாசத் தின்போது, தங்களின் ஆயுதங்களை இங்கே மறைத்து வைத்ததாகவும் தகவல் உண்டு.

திருவிதாங்கூர் மன்னர் யுத்தத்துக்குமுன் தன் வாளினை இங்கு வைத்து பூஜை செய்வாராம். அதனால் போரில் வெற்றி கிடைக்கும் என்பது அவரின் நம்பிக்கையாம். வேறொரு தகவலும் சொல்வார்கள். போரில் உயிர்ப்பலி நிறைய ஏற்படுவதால், இங்கு வந்து வாளைச் சமர்ப்பித்து `இனி போர் வேண்டாம்’ என அவர் சங்கல்பம் செய்த தாகவும் சொல்வார்கள். இங்ஙனம் மன்னர் தமது வாளை வைத்து வழிபட்ட தலம் என்பதால், இந்தத் தலத்துக்கு வாள்வச்ச கோஷ்டம் என்று பெயர் வந்தது.

இங்கே அம்மன் அம்மன் சுமார் 7 அடி உயர திருமேனியள். சகல தெய்வங்களின் சக்தியையும் தன்னில் கொண்டு, விஸ்வரூபம் எடுத்து அசுரனை அழித்தவள். மிக விசேஷமாக அவள் யோக நிலையில் காட்சி தருகிறாள். மகிஷனின் தலையையே பீடமாகக் கொண்டு நின்றருளும் அன்னை, மேற் கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் வலக்கரத்தால் யோக முத்திரை காட்டிய படியும் அருள்பாலிக்கிறாள்.

இங்கே சக்ராயுதம், அசுரனை அழித்துவிட்டு அம்மனின் கரத்தில் வந்து அமர்வதுபோன்ற நிலையில் உள்ளது சிறப்பம்சம் ஆகும். இங்கே அன்னை யோகநிலையில் அருள்வதால், ஆலயத்தில் சாந்நித்தியம் மிக அதிகமாக இருப்பதை உணரலாம்’’ என்றார் சங்கர நாராயணன். அவரே தொடர்ந்து கோயிலின் பூஜை முறை களையும் விளக்கினார்.

கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள்

வாராஹி சித்தரின் பூஜை...

“பன்றியை வாகனமாகக் கொண்ட வாராஹி சித்தர் என்பவரின் சிற்பம் இக்கோயிலில் உள்ளது. இந்தக் கோயிலுக்கான உண்மையான, நிரந்தர பூஜாரி வாராகி சித்தர்தான். இன்றும் இவர் சூட்சுமமாக இங்கே அம்மனைப் பூஜித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

அம்மனுக்கு மகா நைவேத்தியம் எனப்படும் வெள்ளை சாதம்தான் பிரதானம். தினமும் மூன்று கட்டி வெள்ளை சாதம் அம்மனுக்குப் படைப்போம். அதேபோல் அன்னைக்கு இஷ்டமான நைவேத்தியம் கடும்பாயசம். ஒரு கிலோ அரிசிக்கு மூன்று கிலோ சர்க்கரை சேர்த்துச் செய்யப்படும் பாயசம் இது. இங்கே சத்ரு சம்ஹார பூஜை, அமாவாசை பூஜை, பெளர்ணமி பூஜை முதலான சிறப்பு வழிபாடுகள் பிரார்த்தனையின் பொருட்டு நடைபெறுகின்றன’’ என்கிறார் சங்கர நாராயணன்.

மேலும் அம்பாள் சந்நிதியில் முகக் காப்பு, முழுக்காப்பு, ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் உண்டு என்கிறார்கள். மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளில் காலையில் கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் நடைபெறுகின்றன. குங்கும அபிஷேகம் மாலையில் மட்டுமே நடக்கும்.

இங்கே இரண்டு விழாக்கள் பிரசித்திபெற்றவை. திருகார்த்திகை தினத்தில் அம்மன் இங்கு குடியமர்ந்ததாக ஐதீகம். எனவே, கார்த் திகை மாதம் திருகார்த்திகை தினத்தில் நிறைவுபெறும் வகையில் 5 நாள் திருவிழா நடைபெறும். வைகாசியில் விசாகத்தன்று ஆராட்டுடன் நிறைவுபெறும் வகையில் 10 நாள் விழா நடைபெறுமாம். மொத்தத்தில் நாஞ்சில் பகுதிக்குப் பயணிக்கும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத க்ஷேத்திரம் இது!

எப்படிச் செல்வது?: நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கி.மீ. பயணித்தால் காட்டாத்துறை ஜங்ஷன் வரும். அங்கிருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் 3 கி.மீ. பயணித்தால், அன்னையின் ஆலயத்தை அடைய லாம். பள்ளியாடி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு.

காலை 6 முதல் 10 மணி வரையும்; மாலை 5 முதல் 7 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

அம்மனிடம் பிரார்த்தனையைச் சேர்க்கும் ஸ்ரீசக்கரம்

கருவறைக்கு பின் பக்கம் - மேற்கு வாசலுக்கு நேர் மேலே உள்ள விதானப் பகுதியில் சக்கரம் ஒன்று அமைந்துள்ளது. இதன் கீழ் நின்று பிரார்த்தனை செய்தால், சக்கரம் வழியாக நம் பிரார்த்தனைகள் தேவியைச் சென்றடையும் என்பது நம்பிக்கை. கோயில் கோபுரங்களில் பெரும்பாலும் தெய்வச் சிற்பங்கள் இருக்கும். ஆனால் இங்கே கோபுரத்தில் சித்தர்கள், முனிவர்களின் சிற்பங்களும் அதிகம் உள்ளன. இது சித்தர்கள் பூமி என்பதால், சித்தர்கள் சிற்பம் அதிகமாக உள்ளதாகச் சொல்கிறார்கள்!

சிறப்பு வழிபாடுகள்...

வாள்வச்ச கோஷ்டம் மஹிஷாசுரமர்த்தினி திருக்கோயிலில் குறிப்பிட்ட சில வழிபாடுகள் சிறப்புடன் நடைபெறுகின்றன. அவை ஒவ்வொன்றும் அற்புத பலன்களைத் தரவல்லவை என்கிறார்கள் பக்தர்கள்.

சத்ருசம்ஹார பூஜை: எதிரிகளின் தொல்லைகள் - பகைவர் பயம் நீங்கும்.

கார்த்திகை பூஜை: காரியம் ஸித்தி ஏற்படும், நோய் பாதிப்புகள் விலகும்.

பெளர்ணமி பூஜை: ஐஸ்வர்யங்கள் பெருகும்.

நாகதோஷ பரிகார பூஜை: தடைகள் யாவும் நீங்கி தொழில் வளம் பெருகும்; குழந்தைச் செல்வம் கிட்டும்; சர்ப்ப தோஷங்கள் விலகும்.

அமாவாசை பூஜை: துன்பங்கள் மற்றும் தோஷங்கள் விலகும்.

குங்கும அபிஷேகம்: தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.

சுயம்வர பூஜை: திருமணத் தடை நீங்கும்.

இவை தவிர, இறையருள் பெறுவதற்காக பக்தர்கள் எட்டு வகை யான திரவியங்களைக் கொண்டு அஷ்டாபிஷேகமும் நடத்தி வழிபடுகின்றனர்.