Published:Updated:

அலமேலு பாட்டியும் வாழைப்பழ பெருமாளும்!

ஸ்ரீஅலமேலு மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீஅலமேலு மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில்

தென்திருப்பதி அல்லது சின்னத் திருப்பதி என்று போற்றப்படும் இத்தலத்துக்குச் சென்று வழிபட்டால், திருப்பதியை தரிசித்த புண்ணியம் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

அலமேலு பாட்டியும் வாழைப்பழ பெருமாளும்!

தென்திருப்பதி அல்லது சின்னத் திருப்பதி என்று போற்றப்படும் இத்தலத்துக்குச் சென்று வழிபட்டால், திருப்பதியை தரிசித்த புண்ணியம் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

Published:Updated:
ஸ்ரீஅலமேலு மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீஅலமேலு மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில்
திருக்கரம் ஒன்று பின்னமானதால் கோயில் வளாகத்தில் போடப்பட்ட பெருமாள் அவர். ஒரு நாள் அலமேலு எனும் மூதாட்டிக்குக் காட்சி தந்து தன் சாந்நித்தியத்தை உணர்த்தி, அவளிடம் பாலும் வாழைப் பழமும் கேட்டு வாங்கி உண்டு அற்புதம் நிகழ்த்தினாராம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையொட்டி ஒரு திருத்தலத்தில் இன்றும் வாழைப் பழப் பிரியராக அருள்கிறார் அந்தப் பெருமாள். அவர் கோயில் கொண்டிருப்பது எந்த ஊரில் தெரியுமா?

நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ளது அவர் குடியிருக்கும் கோயில். ஸ்ரீஅலமேலு மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வீற்றிருக்கும் இந்தக் கோயில், சுமார் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாம்.திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். கலியுகத்தில் உலகத்தைக் காக்க இவ்வூரில் வந்து பெருமாள் பிரசன்னமான தால், அவருக்கு ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசர் என்று திருநாமம்.

தென்திருப்பதி அல்லது சின்னத் திருப்பதி என்று போற்றப்படும் இத்தலத்துக்குச் சென்று வழிபட்டால், திருப்பதியை தரிசித்த புண்ணியம் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு அருள்மிகு வாழைப்பழபெருமாள் சந்நிதி கொண்ட வரலாறு சிலிர்ப்பானது.

1915 -ல் இவ்வூரில் பிறந்தவள் அலமேலு. அவளுக்கு ஏழு வயதாக இருந்தபோது, நாகூர் பெருமாள் கோயில் நந்தவனத்தில் தோழிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது சோர்வு தட்டவே, கோயில் வளாகத்தில் ஓர் ஓரமாய்ச் சாய்ந்துகிடந்த தூண் மீது உட்கார்ந்தாள். திடீரென யாரோ அவளைக் கூப்பிட்டதுபோல் இருந்தது. ஆனால், கண்ணெதிரில் எவரும் இல்லை.

அலமேலு பாட்டியும் வாழைப்பழ பெருமாளும்!

மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது!

`பசிக்குது பால் கொடு’ என்று கேட்டது. அலமேலு அச்சத்துடன் மெள்ள நகர்ந்து குரல் வந்த இடத்துக்குச் சென்று பார்த்தாள். அங்கே, சுமார் 4 அடி உயரத்தில் பெருமாள் சிலை ஒன்று கிடப்பதைக் கண்டாள். அருகில் என்று தொட்டுப் பார்த்தாள் அலமேலு, அசைக்கவும் முயற்சி செய்தாள். ஆனால் பலனில்லை.

வீட்டுக்கு வந்ததும் பெரியவர்களிடம் அந்தப் பெருமாள் குறித்த விவரத்தைக் கேட்டாள்.

``நந்தவனம் தோண்டும் போது கிடைத்த பழைய பெருமாள் அவர். அந்நிய படையெடுப்பு நிகழ்ந்தபோது, கருவறையிலிருந்து அவரை எடுத்து வந்து பாதுகாப்பா பூமியில் புதைத்து வைத்தார்கள். போர் அச்சம் நீங்கியதும் மீண்டும் அந்த இடத்தைத் தோண்டி சிலையை நிமிர்த்தும்போது, பெருமாளின் கை பின்னமாகி விட்டது. எனவே, வேறு சிலை ஒன்றைச் செய்து மூலஸ்தானத்தில் வைத்துவிட்டார்கள்'' என்று வீட்டுப் பெரியவர்கள் விவரம் சொன்னார்கள்.

இதை கேட்டதும் அலமேலுவுக்கு அந்தப் பெருமாளின்மீது இனம் புரியாத பற்றும் பாசமும் ஏற்பட்டது. மறுநாள் நந்தவனம் அருகே அவள் சென்றபோது மீண்டும் குரல் கேட்டது. `பசிக்குது பால் வேணும்' என்றது.

அலமேலு வீட்டுக்கு ஓடினாள். தனக்கென வைக்கப்பட்டிருந்த பாலை எடுத்துவந்து பெருமாள் சிலையின் வாயருகே வைத்தாள். எவரோ உறிஞ்சிக் குடிப்பதுபோல் பால் தீர்ந்து போனது. அன்று முதல் அந்த வழக்கத்தைத் தொடர்ந்தாள் அலமேலு.

தினமும் அவள் பெருமாளுக்குப் பாலூட்ட, ஊராரின் கேலிக்கு ஆளானாள். ஆனாலும் அவள் தனது வழக்கத்தை விடவில்லை. அவளுக்கு அவ்வூரிலேயே கல்யாணம் ஆகி நான்கு குழந்தைகளும் பிறந்தனர். அதன்பிறகும் அவள் தன் பணியைத் தொடர்ந்து வந்தாள்.

அலமேலு பாட்டியும் வாழைப்பழ பெருமாளும்!

நாட்கள் நகர்ந்தன. பெருமாள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் கிடப்பது அலமேலுவின் மனத்தை உறுத்தவே, அவரின் விக்கிரகத்தைத் தனிச் சந்நிதியில் வைத்து பூஜை செய்ய விரும்பினார். அதன்பொருட்டு ஆசியும் வழிகாட்டலும் வேண்டி, காஞ்சிக்குச் சென்று மகாபெரியவரை தரிசித்தார்.

வரிசையில் நின்ற அவரை ‘அலமேலு’ என்ற பெயர் சொல்லி அழைத்தார் மகாபெரியவர்.

அலமேலுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. தன் பெயர் மகாபெரியவருக்கு எப்படித் தெரியும் என்று வியந்தார். காஞ்சிமுனிவரை வணங்கி, ‘`பெருமாளை என்னசெய்வது'’ எனக்கேட்டார்.

பரமாசார்யர் ``உன் பிள்ளைக்குக் கை உடைந் தால் தூக்கி தோட்டத்துல வீசிடுவியா. உன்னி டம் பால் வாங்கிக் குடிச்ச பெருமாள், உன் பிள்ளை மாதிரி. தனியா சந்நிதியில் வை. ஸ்தபதி மூலமா கையை சரி செய்'’ன்னு உத்தரவு கொடுத்தார். மகிழ்ச்சியுடன் நாகூருக்குத் திரும்பினார் அலமேலு.

அலமேலு பாட்டியும் வாழைப்பழ பெருமாளும்!

எனினும் திருப்பணிக்கு அவரிடம் பணம் எதுவும் இல்லை. பெருமாளின் அனுக்கிரகம்... எவரோ செய்த உதவியால் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டு, திருக்கரம் சரிசெய்யப்பட்டு, பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனர்.

அன்று இரவு பெருமாள் அலமேலுவிடம் பேசினார். `தினம் பால் மட்டுமே தருகிறாயே... நான் வளர்ந்துவிட்டேனே... எனக்குப் பழமும் தரக் கூடாதா?' என்று கேட்டார். அலமேலு மறுநாள் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு பெருமாள் சந்நிதியில் சமர்ப்பித்தார். அப்போதும் அற்புதம் நிகழ்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப் பழம் குறைந்து மறைந்து போனது. இந்த அற்புதம் தொடர, ஊரார் வியந் தனர். பெருமாள் சாப்பிட்ட மீதிப் பழத்தை, எதிரில் நிற்கும் எவருக்காவது கொடுப்பார் அலமேலு அம்மாள்.

அலமேலு பாட்டியும் வாழைப்பழ பெருமாளும்!

அப்படிப் பழம் பெற்றவர்கள், பலனும் பெற் றார்கள். அவர்கள் குறைகள் யாவும் விரைவில் நீங்கின. இந்த விவரம் அறிந்து வெளியூர் களிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்களின் பிரச்னைகள், தடைகள் அனைத் தும் வாழைப்பழப் பிரசாதத் தால் நீங்கின. அனைவரின் மனத்திலும் நீங்கா இடம்பிடித்தார் அலமேலு பாட்டி!

1977-ம் ஆண்டு கடும் மழையால் ராஜகோபுரம் சிதிலமானது. அதனைச் சீர்ப்படுத்த எவரும் இல்லை. அலமேலு அம்மாள் பெருமாளிடமே உத்தரவு கேட்டார். பெருமாளின் அருளால் தகுந்த அன்பர்கள் அடையாளம் காட்டப்பட, அவர்கள் மூலம் திருப்பணி நிறைவேறி, கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2004 - ம் ஆண்டு ஒருநாள் காலை யில் அலமேலு பாட்டி பெருமாளின் திருவடி யைச் சேர்ந்தார்.

இந்தத் திருக்கதையைப் பற்றி அறிந்ததும் அலமேலுவின் மகன் சுந்தர்ராஜனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவரும் அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தினார். இன்றைக்கும், திரளான பக்தர்கள் அனுதினமும் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமளை தரிசித்து, வாழைப் பழங்களைச் சமர்ப்பித்து, எல்லோருக் கும் விநியோகித்த பிறகு, மீதியை வீட்டுக்குப் பிரசாதமாக எடுத்துச் சென்று பலன் பெறு கிறார்கள்.

அற்புதங்கள் நிறைந்த இந்தக் கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. கருடாழ்வார், மகாலட்சுமி ஆகியோரும் சந்நிதி கொண்டுள்ளனர். வாழைப்பழப் பெருமாளின் சந்நிதியின் மேற்புறம் வணங்கிய நிலையில் திகழும் அலமேலு அம்மாவின் சுதை உருவையும் காணலாம்.

அலமேலு பாட்டியும் வாழைப்பழ பெருமாளும்!

மூலவர் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன், கிழக்கு நோக்கியபடி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் ஸ்ரீசுதர்சனரும், தனி சந்நிதியில் அலர்மேல்மங்கைத் தாயாரும் அருள்கின்றனர். மேலும் ஆண்டாள், ஆஞ்சநேயர் சந்நிதிகளையும் தரிசிக்கலாம். திருக்கோயிலின் வலப்புறத்தில் திருக்குளம் அமைந்துள்ளது. அதன் கரையில் தேங்காய் கட்டி ஆஞ்சநேயர் எனும் பெயரில் வீர ஆஞ்சநேயர் அருள்கிறார். இவரின் சந்நிதியில் தேங்காய் கட்டிப் பிரார்த்தனை செய்தால், ஒரு மண்டல காலத்துக்குள் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் பூஜைகளைச் செய்து வரும் ரவி பட்டாசார்யரிடம் பேசினோம்: “எல்லா நாள்களிலும் வாழைப்பழப் பெருமாளையும், சனிக்கிழமைகளில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாளையும், அமாவாசையில் ஆஞ்சநேயரை யும், பிரதோஷ நாள்களில் சுதர்சன யோக நரசிம்மரையும், புதன்கிழமை களில் சுதர்சனரை யும், பெளர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அலமேலுமங்கை தாயாரையும் வழிபடுவது விசேஷம். வாழைப்பழப் பெருமாளுக்கு அஸ்தம், பெருமாளுக்கு திருவோணம், அனுமாருக்கு மூலம், தாயாருக்கு உத்திரம் ஆகிய நாள்களில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதம் மிகவும் விசேஷம். மேலும், வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.” என்றார்.

நீங்களும் ஒருமுறை வாழைப்பழப் பெரு மாளை தரிசிக்க நாகூருக்குச் சென்று வாருங்கள்; உங்கள் வாழ்வில் தடைகள் நீங்கும் நன்மைகள் கைகூடும்!

எப்படிச் செல்வது?: நாகப்பட்டினம் அருகே 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந் துள்ளது. நாகையிலிருந்து ரயில், பேருந்து, கார், ஆட்டோ என அனைத்து வசதிகளும் உண்டு.