Published:Updated:

அன்பால் விளக்கேற்றுவோம்!

அன்பால் விளக்கேற்றுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பால் விளக்கேற்றுவோம்!

ஆன்மிகம்

அன்பால் விளக்கேற்றுவோம்!

ஆன்மிகம்

Published:Updated:
அன்பால் விளக்கேற்றுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பால் விளக்கேற்றுவோம்!

எந்தவொரு சுப நிகழ்ச்சியையும் விழாவையும் விளக்கேற்றித் தொடங்குவது நம் வழக்கம். வைணவ அடியார்கள் போற்றிக் கொண்டா டும் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களின் தொடக்கமும் அவ்வாறே அமைந்தது.

முதலாழ்வார்கள் அற்புதப் பாக்களால் அழகாய் விளக்கேற்றி பரந்தாமக் கடவுளை தரிசித்து அருள் பெற்றனர். பாக்களால் விளக்குகளா..?

ஆம்! திருமாலின் திருக்கரத்தில் துலங்கும் திருச் சங்கின் அம்சமாக ஐப்பசி திருவோணத்தில், காஞ்சி - திருவெஃகா தலத்தில் பொய்கையில் பொற்றாமரை யில் அவதரித்தவர் பொய்கையாழ்வார்.

மறுநாள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக மாமல்லை திருக்குளத்தில் நீலோற்பல மலரில் அவதரித்தவர் பூதத்தாழ்வார்.

அதற்கும் அடுத்த நாளான சதயத்தில், பெருமாளின் வாளின் அம்சமாக மயிலைக் கேணியில் செவ்வல்லி மலரில் அவதரித்தவர் பேயாழ்வார்.

இம்மூன்று ஆழ்வார் பெருமக்களும் எம்பெருமா னின் கருணையால் திருக்கோவிலூர் எனும் திருத்தலத்தில் சந்தித்தார்கள். அங்கே, மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தில் உள்ள மிகச் சிறிய அறையில் (இடைக்கழி) தங்கினார்கள்.

கடுமையான இருள்; வெளியே கொட்டும் மழை; மூவரும் நெருங்கி நிற்க வேண்டிய அளவுக்கு நெருக்கடி. எவ்வளவு நேரம்தான் சும்மா இருப்பது. மனம் பெருமாளைச் சிந்திக்கத் தொடங்கியது.

அன்பால் விளக்கேற்றுவோம்!

பொய்கையாழ்வார் அகத்திலும் புறத்திலும் வெளிச்சம் உண்டாகும்படி மிக அற்புதமாய் ஒரு தீபத்தை ஏற்றுகிறார்.

`வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே' என்று!

பரந்து விரிந்த பாற்கடலில் உறையும் பெருமா ளுக்கு அகல் விளக்கு போதாதே! அதனால் உலகையே அகலாகவும், கடல் நீரையே நெய்யாகவும் வார்த்தார். அந்த விளக்கின் திரியிலே சுடராக சூரியனை ஏற்றி - விளக்கேற்றி வழிபட்டார்.

தமிழ்ச் சுடரால் பொலிந்த பாசுரத்துக்கு மயங்கி பெருமாளும் நான்காம் நபராக உள் நுழைந்து அவர்கள் பாடலுக்கு 'உம்' கொட்டவும் ஆரம்பித்து விட்டார்!

அடுத்து பூதத்தாழ்வார் எங்ஙனம் விளக்கு ஏற்றுகிறார் பாருங்கள்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்!

அன்பையே அகலாகக் கொண்டு, நாரணனைக் காண விரும்பும் ஆர்வத்தையே நெய்யாக வார்த்து, அந்த விளக்கில் இன்பமிகு எண்ணத்தைத் திரியாக இட்டு ஓர் ஞானச் சுடர்விளக்கை ஏற்றினார்.

இரு விளக்குகளும் இங்ஙனம் பிரகாசிக்க, பேயாழ்வார் 'திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன்...' எனப் பாடிப் பரவினார்.

மூவருமே இப்படிப் பாடத் தொடங்கி முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று வளர, வைணவம் அற்புதப் பொக்கிஷமான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை அடைந்தது என்று நீங்கள் அறிவீர்கள்.

இப்படி அன்பாலும் பக்தியாலும் விளக்கேற்றி அருள் பெற்ற ஆழ்வார்களின் வழியில் நாமும் நம் இல்லம்தோறும் அன்பால் விளக்கேற்றுவோம்; மாலவனைக் கொண்டாடுவோம்.

நம்மிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து, துன்ப இருளைக் களைந்து, எங்கெங்கும் இன்பம் பொங்கிட, அனந்தனை வேண்டி ஆனந்தம் பெறுவோம்.!