Published:Updated:

''நந்தனார் குரு பூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும்" - இந்து மக்கள் கட்சி வேண்டுகோள்!

நந்தனார் குரு பூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நந்தனார் குரு பூஜையை அரசே ஏற்று நடத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறது. இந்த ஆண்டும் இக்கோரிக்கையினை வலியுறுத்தி அறநிலையத்துறை அமைச்சருக்கு மனு  அனுப்பப்பட்டுள்ளது.

நந்தனார்
நந்தனார்

63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் நாயனார் என்கிற நந்தனார் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, வைத்தீஸ்வரன்கோயிலை அடுத்த ஆதனூரில் பிறந்தவர். திருக்குலத்தில் பிறந்தவர் ஆயினும் சிவபெருமான் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். தொழிலின் மூலம் தனக்கு கிடைக்கும் தோல் மற்றும் நரம்புகளை ஆலயத்தில் வாசிக்கப்படும் இசைக் கருவிகள் செய்ய வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். எப்போதும் சிவ நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தவர்.

ஒரு நாள்  ஆதனூரை அடுத்த திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். ஆனால் அந்த காலத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளால் அவரால் கோயிலுக்குள் சென்று தரிசிக்க முடியாத நிலை. வெளியிலிருந்து வணங்கி விடலாம் என்று பார்த்தால் நந்தி மறைத்தது. சிவபெருமானை தரிசிக்க முடியாத சூழலில் மிகுந்த ஏக்கத்துடன் அழுது புலம்புகிறார். அப்போது தன் மீது உண்மையான பக்தி கொண்டிருந்த நந்தனார் தன்னை தரிசிக்க வேண்டி, குறுக்கே நின்ற நந்தியெம்பெருமானை "சற்றே விலகி இரும் பிள்ளாய்" என்று சிவனார்  உத்தரவிட்டார்.

உடனே நந்தி சிறிது வடப்புறமாக நகர்ந்து கொள்ள கருவறையில் ஆனந்தச் சுடராய், அருள் வடிவாய் வீற்றிருந்த இறைவனை கண்டு வணங்கியதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கும் அத்திருக்கோயிலில் நந்தி சற்று விலகியே இருக்கிறது

மேலும் சைவ சமயத்தில் மேன்மையான திருக்கோயிலான சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது அவரது பேராவலாக இருந்தது. ஆனால் சாதிக் கட்டுப்பாடுகளை எண்ணி வருந்தி "நாளைக்குப் போவேன் -நாளைக்குப் போவேன்" என்று ஒவ்வொரு நாளும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு நடராஜரை மனதிலேயே வணங்கி வந்திருக்கிறார். அதனாலேயே அவர் 'திருநாளைப்போவார் நாயனார்' என அழைக்கப்பட்டார்.

தில்லையில் நடனம் புரியும் நடராஜரை தரிசிக்க சென்றவர் எல்லையிலே சுற்றிக் கொண்டிருந்திந்தார். தன்னுடைய தரிசனம் கிடைக்கச் செய்வதற்காக நடராஜர் தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் தோன்றி நந்தனாரை அழைத்து வரச்சொல்லி ஆணையிடுகிறார். சிவபெருமானின் கட்டளையை உளப்பூர்வமாக, மகிழ்வுடன் ஏற்று தீட்சிதர்களும் நந்தனாரை மிகவும் சிறப்பாக மரியாதை செய்து அழைத்து வர கனக சபையில் ஆடும் அம்பலத்தரசனை தரிசனம் செய்து இறைவனோடு கலந்து விடுகிறார். இறைவன் முன் அனைவரும் சமம், இறைவன் மீது உண்மையான பக்தி கொண்டிருந்தால் இறைவனை அடையலாம் என்பதை வரலாறு ஆக்கியவர் நந்தனார்.

கொள்ளிடம் சுவாமிநாதன்
கொள்ளிடம் சுவாமிநாதன்

இதுபற்றி இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதனிடம் பேசினோம்.

"நந்தி விலகி வழிபட்ட தலமான திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி திருக்கோயிலில் நந்தனாரின் அவதார தினமான புரட்டாசி மாத ரோகிணி அன்று குரு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு வருகிற (புரட்டாசி- 11 ) செப்டம்பர் 27-ஆம் தேதி திங்கட்கிழமை அவரது அவதார தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை மூலம் அரசே இந்த விழாவினை சிறப்பாக நடத்த வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு