நந்தி என்றால் ஆனந்தமாக இருப்பவர் என்று பொருள். இவர் பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு விதமான கோலங்களில் வீற்றிருப்பார். இவர் அமர்ந்திருக்கும் அருள் கோலத்தை உற்று நோக்கி அதற்கேற்ப வேண்டிக் கொள்ள வேண்டும் என புனித நூல்கள் கூறுகின்றன. காதருகே சென்று வேண்ட வேண்டாம் என்றே பெரும்பாலும் கூறப்படுகின்றது.
வலது காலைச் சற்று தூக்கி அமர்ந்திருக்கும் நந்தி 'காயத்ரி மந்திர தவக்கோல நந்தி' என்பர். இவர் அருகே சென்று வேண்டுதல்களைக் கூறுவது இவரது தவத்தைக் கலைத்துவிடும் என்பதால் அதை செய்யக்கூடாது. ஈசனுக்கு எதிர்ப்புறமாக நம்மை நோக்கியபடி இருக்கும் நந்தியின் திருக்காதுகளில் வேண்டுதல்களைக் கூறலாம். இது புறப்பாடு நந்தி எனப்படுகிறது.

வலப்புறம் தலையை சற்றே தூக்கி இருக்கும் நந்தியிடம் சற்றே தள்ளி நின்று மனதால் கோரிக்கைகள் வைக்கலாம். இவர் குடும்ப கஷ்டங்களை நீக்கக் கூடியவர். இடது புறம் தலையைத் திருப்பி உள்ளவரிடம் வேண்டுதல் கூற திருமண வரம் கிட்டும். ஈசனை நேராகப் பார்த்தபடி இரு கால்களும் மடித்து அமர்ந்து இருக்கும் நந்தியிடம் வேண்ட சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள். சுருட்டப்பள்ளியில் நஞ்சுண்ட நாயகனை நோக்கி கவலையோடு இருக்கும் நந்தியை வேண்ட நோய்கள் அகலும்.
நாக்கை இடது புறம் மூக்கருகே வைத்து இருக்கும் நந்தி அருகே மூக்கின் இடது புறமாக மூச்சை விட்டபடி தியானம் இருக்க மனம் ஒருமைப்படும், யோகக் கலையில் சிறந்து விளங்கி நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியமும் பெறலாம். அதேபோல் வலது புறம் நாக்கை நீட்டி இருக்கும் நந்தி அருகே வலது பக்க மூச்சு விட்டு தியானம் இருக்கலாம். இதை சூட்சுமாகச் சொல்லவே நந்தி இவ்வாறு வடிக்கப்பட்டுள்ளது.
கே. அமுதா, சென்னை - 41