திருத்தலங்கள்
Published:Updated:

பெருமாள் கோயிலில் நந்தி தரிசனம்!

நந்திபுர விண்ணகரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்திபுர விண்ணகரம்

நந்தி வழிபட்ட திருநந்திபுர விண்ணகரம்

நாதன் கோவில்!

பெருமாள் கோயிலில் அதுவும் கருவறையிலேயே நந்திதேவர் தரிசனம் என்பது அபூர்வம் அல்லவா? கருவறையில் மட்டுமல்ல விமானத்திலும் நந்திதேவர் கொலுவிருக்கும் அற்புதத் தலம்தான் நாதன்கோவில் எனப்படும் திருநந்திபுரவிண்ணகரம்.

பெருமாள் கோயிலில் நந்தி தரிசனம்!


108 வைணவ திவ்ய தேசங்களில் 21-வதாகக் குறிக்கப்படும் இந்தத் தலத்துப் பெருமாளை 10 பாசுரங்களால் பாடிப் பரவியிருக்கிறார் திருமங்கையாழ்வார். பெருமாள் நிவாஸன் என்ற திருப்பெயரில் அருளும் ஆலயங்களில் எல்லாம் பெரும்பாலும் அவர் நின்ற கோலத்தில் சேவை சாதிப்பார். ஆனால் இங்கே அவர் அமர்ந்த கோலத்தில் அருள்வது சிறப்பம்சம்.

நந்தி அருள் பெற்ற திருக்கதை!

பெருமாள் சயனித்திருக்கும் ஆதிசேஷன் ஆதிசிவனின் தாண்டவ கோலம் காண பதஞ்சலியாய் பூமியில் பிறந்த திருக்கதை நமக்குத் தெரியும். அதேபோல், பரமனின் அணுக்கரான நந்திதேவர் பெருமாளின் அருள்வேண்டி பூலோகம் வந்த கதையைச் சொல்கிறது நந்திபுர விண்ணகரம் கோயிலின் தலபுராணம்.

திருநந்திபுர விண்ணகரம்
திருநந்திபுர விண்ணகரம்


ஒருமுறை பெருமாளை தரிசிக்க வைகுண்டம் வந்தார் நந்தி. வாயிலில் அவரைத் துவார பாலகர்களான ஜய-விஜயர்கள் தடுத்தனர். `பரமேஸ்வரனின் தொண்டனான தமக்கு எங்கும் எப்போதும் தடையின்றி செல்ல அனுமதி உண்டு. அப்படியிருக்க எம்மைத் தடுக்க இவர்கள் யார்?’ என்ற எண்ணம் நந்தியின் மனதில் தோன்றியது.

ஆகவே ஜய-விஜயரின் தடுப்புக்காவலை மீற முயன்றார். ஜய-விஜயர்கள் துணுக்குற்றனர். தேவகணங்களுக்கு அகங்காரம் கூடாது. அவர்கள் மனதில் கர்வம் தலைதூக்கினால் தங்களின் புனிதத்துவத்தை - தனித்தன்மையை இழப்பார்கள். நந்தியும் தன் நிலையை இழந்துவிட்டார் என்று கருதிய துவாரபாலகர்கள் அவரைப் பூமியில் மனிதராகப் பிறக்கும்படி சபித்துவிட்டனர்.

நந்திதேவர் தன் தவறை உணர்ந்தார். ஓடோடிச் சென்று பரமேஸ் வரரைச் சரணடைந்து, சாபத்துக்கு விமோசனம் வேண்டினார். பரமேஸ்வரரோ சாபம் கொடுத்தவர்களே விமோசனம் தரமுடியும் என்று கூறிவிட்டார்.

நந்திநாதர்
நந்திநாதர்


நந்தி மீண்டும் ஜய-விஜயரிடம் வந்தார். தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து, விமோசனத்துக்கு வழி கூற வேண்டினார். ஜய- விஜயர் மனம் இரங்கினர். பூமியில் புனிதம் மிகுந்த ஜம்பகாரண்யம் சென்று பெருமாளைக் குறித்து தவம் செய்யும். உரிய காலத்தில் பெருமாளில் திருக்காட்சி கிடைக்கும்; அப்போது உமது சாபமும் தீரும் என்றனர். அதன்படி நந்திதேவர் வந்து வழிபட்ட அற்புதத் தலம்தான் திருநந்திபுரவிண்ணகரம்.

பஞ்ச க்ஷேத்திரம்

ஆதியில் இந்தப் பகுதி முழுக்கவும் செண்பக மரங்களால் நிறைந்து திகழ்ந்ததாம். ஆகவே இப்பகுதியை செண்பகவனம் என்றும் ஜம்ப காரணயம் என்று அழைத்தனர். இங்கு வந்து தவம் செய்த நந்தி தேவர், தமக்குக் காட்சி கொடுத்த பெருமாளிடம் ``எமக்குத் தங்களின் அருள் கிடைத்த இந்தத் தலம் பஞ்சக்ஷேத்திரம் என்று பெருமை பெற வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டார். பெருமாளும் அப்படியே அருள்பாலித்தார்.

நந்திதேவரால் வழிபடப்பட்டதால் பெருமாள் நந்திநாதர் எனும் திருப்பெயரை ஏற்றார். இந்தத் தலம் திருநந்திபுரவிண்ணகரம் என்றானது. இப்பகுதியின் செண்பக வனம் `நந்தி வனம்’ ஆனது. இந்தத் திருக்கோயிலின் விமானத்தில் நந்திதேவருக்கு இடம் கிடைக்க, அதுவும் நந்தி விமானம் ஆனது. இத்தலத்தின் தீர்த்தமும் நந்தி புஷ்கரணி என்று பெயர் பெற்றது. இங்ஙனம் ஐந்து சிறப்புகளோடு பஞ்சக்ஷேத்திரமாகத் திகழ்கிறது இவ்வூர்.

தாயாரும் பெருமாளும்!

திருநந்திபுர விண்ணகரம் பெருமாள் திருக்கோயில் மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்டது என்று வரலாற்றுத் தகவல் சொல்கிறது. மிகப் பழைமையான இந்த ஆலயம் அழகுறத் திகழ்கிறது. உள்ளே கருவறையில் தேவி-பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார் மூலவர் நிவாஸர்.

உற்ஸவர் நந்திநாதர் என்றும் ஜெகந்நாதன் என்றும் ரக்ஷக ஜெகந்நாதன் என்றும் அழைக்கப் படுகிறார். சாப தோஷங்களிலிருந்து நம்மைக் காப்பவர் என்பதால், இப்படியான திருப்பெயர் இந்தப் பெருமாளுக்கு. இங்கே கருவறையில் பெருமாளை வணங்கும் நிலையில் நந்திபகவான் காட்சி தருவது சிறப்பு.

செண்பகவல்லித் தாயாரின் சந்நிதி தனிக்கோயிலாக அமைந் துள்ளது. இந்தத் தாயாரை தரிசித்து வழிபட்டால், தடைகள் நீங்கி திருமணப் பாக்கியம் கைகூடும், குழந்தை இல்லாத அன்பர்களுக்குப் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சந்திர தோஷம் நீங்கும்!

பெளர்ணமி தினத்திலோ உத்திர நட்சத்திரத்தன்றோ இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றால், ஜாதகத்தில் சந்திர தோஷ குறைபாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்; மனச் சஞ்சலம் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த தினங்களி வர இயலாதவர்கள், திங்கள் கிழமைகளில் வந்து வழிபட்டுச் செல்லலாம்.

எப்படிச் செல்வது?: கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருநந்திபுரவிண்ணகரம். கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.

குழந்தைப் பேறுக்காக வேண்டிக்கொள்ளும் முறை!

குழந்தைப் பேறுக்காக வேண்டிக்கொள்ளும் அன்பர்கள் 9 வாரங்கள் சனி அல்லது திங்கள் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து தாயாரையும் பெருமாளையும் சேவிக்கவேண்டும். முதல் வாரமும் நிறைவு வாரமும் பெருமாள் - தாயார் இருவரையும் அர்ச்சனை செய்து வழிபடலாம். மற்ற வாரங்களில், ஆலய வலம் வந்து வழிபட்டுச் செல்லலாம். வழிபாட்டின்போது மஞ்சள் கிழங்கை தாயார் மற்றும் பெருமாள் பாதத்தில் சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். இந்த மஞ்சளைப் பெண்கள் தேய்த்துக் குளித்தால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கல்யாணப் பரிகார வழிபாடு

திருமணத்துக்காக வேண்டிக்கொள்ளும் அன்பர்கள் 9 வாரங்கள் சனி அல்லது திங்கள் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து தாயாரையும் பெருமாளையும் சேவிக்கவேண்டும். முதல் வாரமும் 9-வது வாரமும் பெருமாளுக்கும் தாயாருக்கும் அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். 2 மற்றும் 3-வது வாரம் தாயாருக்கு அர்ச்சனை செய்யவேண்டும். மற்ற வாரங்களில் இருவரையும் தரிசித்து வலம் வந்து வழிபடலாம். அர்ச்சனையின்போது பயத்தம்பருப்பு பாயசம் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.