Published:Updated:

நாரதர் உலா: 'மீண்டும் வேண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவை!'

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

வலுக்கும் கோரிக்கை

நாரதர் உலா: 'மீண்டும் வேண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவை!'

வலுக்கும் கோரிக்கை

Published:Updated:
நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா
முகக் கவசத்தைக் கவனமாக - உரிய முறைப்படி விலக்கிவிட்டுக்கொண்ட நாரதர், நாம் அளித்த சுக்கு காபியைப் பருகி முடித்தார்.

தொடர்ந்து சில விநாடிகள் நிதானித்து, தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டவர், கொண்டு வந்த தகவல்களைப் பகிரத் தொடங்கினார்.

“தமிழக அரசுக்கு ஆன்மிக ஆலோசனைகளைச் சொல்லும்விதம் மீண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது தெரியுமா?’’

“1960-களில் பல ஆதீன மடங்களின் பங்களிப்புடன் அந்தப் பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்படித்தானே...’’

``சரியாகச் சொன்னீர்...’’

``இப்போது அந்தப் பேரவை செயல்படவில்லையா. கோரிக்கை எழுப்புவது எந்தத் தரப்பில்... விரிவாகச் சொல்லும்.’’

``சொல்கிறேன் கேளும்...’’ என்றபடி முழு விவரத்தையும் கூறத் தொடங்கினார் நாரதர்.

“மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் சைவத் திருமடங்கள் சட்ட பாதுகாப்பு இயக்கம்தான் இப்படியொரு கோரிக்கையை எழுப்பியுள்ளது. அதன் தலைவரும் வழக்கறிஞருமான சேயோனிடம் இந்த விஷயம் குறித்துப் பேசினேன்.

நாரதர் உலா:  'மீண்டும் வேண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவை!'

`கடந்த 1966-ல் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மடாதிபதிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் வகையில், ‘தமிழ்நாடு தெய்விகப் பேரவை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக, 18 சைவ ஆதீன மடங்களில் முதன்மை மடமாகத் திகழும் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்தின் 25-வது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.

தமிழ்நாடு தெய்விகப் பேரவை, அந்தக் காலகட்டத்தில் அறநிலையத் துறை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் கலந்தாலோசிக்கும். ஆகம விதிகள்படி ஒத்தக் கருத்துடன் கும்பாபிஷேகங்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றை முறையுடன் நடத்துவதற்கு ஏதுவாக, சிறப்பான ஆலோசனைகளைத் தமிழக அரசுக்கு வழங்கிவந்தது.

1966-ல் நடைபெற்ற  ‘தமிழ்நாடு தெய்விகப் பேரவை’ கூட்டம்.
1966-ல் நடைபெற்ற ‘தமிழ்நாடு தெய்விகப் பேரவை’ கூட்டம்.

1969-ல் இந்தப் பேரவையின் தலைவர் பதவி திருவண்ணாமலை ஆதீனத்தின் குன்றக்குடி அடிகளார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு சில காலம் சிறப்பாக இயங்கிவந்த தமிழ்நாடு தெய்விகப் பேரவை, பின்னர் அரசின் ஒத்துழைப்பு சரிவர கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து இயங்கமுடியாமல் முடங்கிப்போனது.

வழக்கறிஞர் சேயோன்
வழக்கறிஞர் சேயோன்

தற்போது கொரோனோ பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திருக்கோயில்களில் பக்தர்கள் வழிபடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. பல கோயில்களில் முக்கியத்துவம் வாய்ந்த பெருந்திருவிழாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதியில் நடைபெறவேண்டிய கும்பாபிஷேக வைபவங்களும் நடைபெறாமல் உள்ளன. இதெல்லாம் ஆகமவிதிப்படி சரியா என்பது குறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தற்போது தமிழக அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் ஆன்மிகம், கோயில் வழிபாடுகள் சார்ந்து தக்க ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் அருகில் இல்லை. அண்மையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், திருக்கோயில்கள் திறப்பது தொடர்பாக அனைத்து மதத் தலைவர்களின் கருத்து கேட்புக கூட்டத்தைக் கூட்டினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல திருக்கோயில்களை நிர்வகித்துக்கொண்டிருக்கும் ஆதீனகர்த்தர்களுக்கு உரிய அழைப்பில்லை. மாறாக, கோயில் நிர்வாகங்களில் தொடர்பில்லாத மத அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளை அழைத்துக் கலந்தாலோசித்துவிட்டு, திருக்கோயில்களைத் திறப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது தமிழக அரசு.

அதேநேரம், மத்திய அரசு இந்தியாவெங்கும் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறந்து மக்கள் வழிபட உத்தரவிட்டது. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் மக்கள் வழிபட திறக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் திருக்கோயில்களைத் திறக்க அனுமதிக்கவில்லை.

இப்படி, கோயில்கள் அடைக்கப்பட்டிருப்பது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல என்றும் இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு இறையருளை - தரிசனத்தைப் பெறமுடியாமல் இருக்கும் நிலை நல்லதல்ல என்றும் ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். தமிழக அரசு இதையெல்லாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இப்படியான சூழலில், திருமடத் தலைவர்களைக் கொண்ட தமிழ்நாடு தெய்விகப் பேரவை அமைப்பு அவசியம் தேவை.

ஆகவேதான், தமிழக அரசு நன்கு ஆலோசித்து, திருவாவடுதுறை ஆதீன 24-வது குருமகாசந்நிதானத் தைக் கெளரவத் தலைவராக வும், தருமபுர ஆதீன 27-வது குருமகா சந்நிதானத்தைத் தலைவராகக் கொண்டு `தமிழ்நாடு தெய்விகப் பேரவை’ மீண்டும் செயல்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கிறோம்’ என்று கூறுகிறார் வழக்கறிஞர் சேயோன்.’’

ஒரே மூச்சில் விவரித்து முடித்த நாரதரிடம், “இதுபற்றி ஆதீன கர்த்தர்களின் கருத்தென்ன என்று விசாரித்தீரா?’’ எனக் கேட்டோம்.

நாரதர் உலா:  'மீண்டும் வேண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவை!'

“தருமபுர ஆதீனகர்த்தர் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சமீபத்தில் `கோயில்கள் திறக்கப்பட்டால்தான் மக்கள் தங்கள் தேவைகளுக்கு இறைவனை நாடுவர். மனநிம்மதி பெறுவர். ஊரடங்கு தளர்வு என்று அனைத்தையும் திறந்துவிட்டு மக்களின் வழிபாட்டுக்குரிய கோயில்களை மட்டும் திறக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது.இறைவழிபாடுதான் மக்களைப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

கோயில்களைத் திறக்க மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது சரியல்ல. எனவே, உடனடியாக தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் உடனடியாகத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

வேளாக்குறிச்சி ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளிப்படையாக தம் கருத்துகளைத் தெரிவித்தார்.’’

“அவர் என்ன சொல்கிறார் நாரதரே?”

தருமபுர ஆதீனம்
தருமபுர ஆதீனம்

“ `செம்மையாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு தெய்விகப் பேரவை அரசாலும் அற நிலையத்துறையாலும் வீரியம் இழந்து முடங்கிப்போனது வருத்தத்துக்குரியது.

ஆன்மிகம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க மீண்டும் இந்தப் பேரவைக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான கோயில்களை நிர்வகிக்கும் சைவ மடாதிபதிகள், வைணவ ஜீயர்கள் ஆகியோர் அடங்கிய ஆன்மிகப் பேரவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

வேளாக்குறிச்சி ஆதீனம் 
ஶ்ரீலஶ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
வேளாக்குறிச்சி ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் போன்ற இக்கட்டான சூழலில் தமிழக அரசுக்குச் சிறந்த ஆன்மிக ஆலோசனைகளைச் சொல்ல தமிழ்நாடு தெய்விகப் பேரவை அமைப்பு மிகவும் அவசியம். இதைக் காலம் தாமதிக்காமல் உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்கிறார் அவர்’’ எனக் கூறிய நாரதர், ``தற்போதைய சூழல் மட்டுமல்ல... ஆலய விழாக்கள், கும்பாபிஷேக வைபவங்கள் முதலான அனைத்து விஷயங்களுக்கும் தமிழக அரசுக்கு ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்க இப்படியோர் அமைப்பு இருப்பது அவசியம்தான். அப்போதுதான் வீண் சர்ச்சைகளும் பிரச்னைகளும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்பதே பக்தர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது’’ என்றார்.

தருமபுர ஆதீனகர்த்தர் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி 
தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
தருமபுர ஆதீனகர்த்தர் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்

``இறையருளால் விரைவில் நல்லது நடக்கட்டும்’’ என்று நாம் கூறவும், தலையசைத்து ஆமோதித்தபடி விடைபெற்றுக் கொண்டார் நாரதர்.

- உலா தொடரும்...

பிரமாண்ட ஆவுடையார்!

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தில், பழம்பதிநாதர் என்ற திருநாமம் கொண்டு ஈசன் அருள்பாலிக்கிறார். பிரம்மன் உருவாக்கி வணங்கிய சுவாமி இவர். வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை நடைபெறும். தஞ்சையை விட பெரிய ஆவுடை உள்ள சிவலிங்கத்திருமேனி இங்குதான் உள்ளது. இவ்வளவு பெரிய ஆவுடையை வேறு எந்த கோயிலிலும் காண்பதரிது.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டும் வேண்டுதலைச் செய்து வழிபடுகிறார்கள். செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். கேட்டதை கொடுக்கும் சிவபெருமானுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள்.

-ஏ.எஸ்.கோவிந்தராஜன்