Published:Updated:

நாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...

அவிநாசி தாமரைக்குளம்
பிரீமியம் ஸ்டோரி
அவிநாசி தாமரைக்குளம்

‘மீண்டும் வேண்டும் சீரமைப்பு!’

நாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...

‘மீண்டும் வேண்டும் சீரமைப்பு!’

Published:Updated:
அவிநாசி தாமரைக்குளம்
பிரீமியம் ஸ்டோரி
அவிநாசி தாமரைக்குளம்

“காசேதான் கடவுளப்பா அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா...” என்ற பாடல் காற்றில் ஒலிக்க, நாரதர்தான் வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, பரபரப்பானோம்.

வந்ததும் வராததுமாய் நாரதரிடம் `‘திரிலோக சஞ்சாரி கொஞ்ச நாளாக இங்கே வரவேயில்லையே'’ என்று நாம் உரிமையோடு கடிந்துகொள்ள, நாரதர் சிறு புன்னகையோடு `‘அவிநாசி, காஞ்சிபுரம் என்று பல தலங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருகிறேன்... போதுமா’' என்றார், நம்மைச் சமாளிக்கும்விதமாக. அவருக்காகவே வைத்திருந்த திருப்பதி லட்டுப் பிரசாதத்தைக் கொடுத்ததும் பயபக்தியோடு வாங்கிச் சாப்பிட்டவர், கொண்டு வந்த விஷயங்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

நாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...

``அவிநாசி திருத்தலத்தின் தாமரைக்குளம் பற்றி பேசியிருந்தோம் அல்லவா. அதுகுறித்து நேரிலேயே சென்று பார்த்தும் விசாரித்தும் வந்தேன். புதர்மண்டிக் கிடக்கிறது தாமரைக் குளம். அதுமட்டுமா, அங்கு சமூக விரோதி களின் நடமாட்டமும் அதிகம் என்பதை, அந்தக் குளத்தின் சுற்றுச்சூழலை வைத்தே கணிக்கமுடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`2009 & 2010-ல் சுமார் 6 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட அந்தத் திருக்குளம், தற்போது சமூக விரோதிகள் மது அருந்தும் திறந்தவெளிக் கூடமாகத் திகழ்கிறது' என்று வருத்தப்படுகிறார்கள், அவிநாசியைச் சேர்ந்த பக்தர்கள். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடி பதிந்த அந்தத் தீர்த்தமும், அருகிலேயே உள்ள சுந்தரமூர்த்தி ஸ்வாமி ஆலயமும், திருமடமும் உரியமுறையில் பராமரிக்கப்படவேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது.

நாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...

இதுகுறித்து ஆலய நிர்வாகத் தரப்பில் பேசினோம். ‘வரலாற்றுப் புகழ்மிக்க இந்தத் தீர்த்தம் நீரின்றி பாழ்பட்டுக்கிடப்பது எங்களுக் கும் வருத்தத்தை அளிக்கிறது. மழையில்லாமல் புதர் மண்டிக்கிடக்கும் ஏரியை, எவரும் அசுத்தப்படுத்திவிடாமல் எங்களால் இயன்றை வரை பார்த்துக்கொள்கிறோம். அதேநேரம், அருகிலிருக்கும் சுந்தரமூர்த்தி ஸ்வாமி ஆலயமும் திருமடமும் நன்கு பராமரிக்கப்படுகின்றன.

முன்பு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் இந்த ஏரியை தூய்மைப்படுத்திக் கொடுத் ததைப் போல், மீண்டும் சரிசெய்தால் ஓர் அருமையான நீர் ஆதாரம் மீட்கப்படும். முதற்கட்டமாக இந்த ஏரிக்கு நீர் வரும் பாதைகளைச் சீர் செய்யவேண்டும். நீர்வரும் வழிகளில், பல இடங்களில் கற்களைப் போட்டு பலரும் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்தினாலே, இந்த ஏரி நீர் நிரம்பி வளமாகிவிடும். அதேபோல், இந்த ஏரிக்கு நீர் ஆதாரமாகத் திகழும் அருகிலுள்ள நல்லாறு பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம். நல்லாறு பெருகினால், அந்த நீர் இந்த ஏரிக்கு வரும். ஆனால், இப்போது அந்த ஆற்றுத் தடமே சுருங்கிப்போய்விட்டது. வசிஷ்டர், இங்குள்ள ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்து வணங்கியபோது, நல்லாற்றில் இருந்தே நீரெடுத்து ஸ்வாமியை அபிஷேகித்தார் என்கிறது தலபுராணம். அப்படியான ஆற்று தீரத்தைப் பாழ்பட விடலாமா.

தமிழகமெங்கும் நீர்நிலைகளைப் பாது காக்கும் அரசு, இந்த ஏரியையும் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து, எங்களுக்குத் துணை செய்யவேண்டும். தாமரைக்குளம் நீர் பெருகி, அதில் மீண்டும் தீர்த்தவாரி நடந்தால் இந்த ஊரும் ஆலயமும் மேலும் புகழ்பெறும்' என்று அவர்களும் ஆதங்கத்தோடு சொல்கிறார்கள்.'' எல்லாம்வல்ல அவிநாசியப்பர் அருளால், நல்ல நடவடிக்கைகள் தொடங்கட்டும்; விரைவில் தாமரைக் குளம் சீர்பெறட்டும்'' என்று நாரதர் சொல்லவும், அவரிடம் காஞ்சித் தகவல்கள் குறித்து நினைவூட்டினோம்.

நாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...

``ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சி அத்தி வரதரை தரிசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஏற்பாடுகளில் குளறுபடி, முன்னறிவிப்பு இல்லாத நடவடிக்கைகள், சிறப்பு தரிசன பாஸ் விநியோகம் குறித்த சர்ச்சைகள்... இப்படி பிரச்னைகளுக்கும் குறைவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். 47 நாள்கள் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணம் - சுமார் 10 கோடி ரூபாய், எண்ணப்பட்டு அறநிலையத்துறை கணக்கில் செலுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பேசும் பக்தர்களும் ஆன்மிக அமைப்பினரும், `தமிழகமெங்கும் எத்தனையோ ஆலயங்கள் பராமரிப்பின்றி திகழ்கின்றன. அறநிலையத்துறையால் பெரும்பாலும் பட்டியலில் சேர்க்கப்படாத அந்த ஆலயங்களைச் சீரமைக்க இந்த நிதியைப் பயன்படுத்தலாமே' என்று கோரிக்கை வைக்கிறார்கள். புனரமைக்கப் பட்ட ஆலயத்தில் ‘இந்த ஆலயம் அத்தி வரதர் வைபவத்தில் கிடைத்த நிதியால் புனரமைக்கப் பட்டது’ என்றுகூட கல்வெட்டு வைக்கலாமே' என்றும் பிரியப்படுகிறார்கள்'' என்றார் நாரதர்.

நாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...

``உரியவர்கள், கவனத்தில் கொள்ளவேண்டிய கோணம்தான்'' என்று நாம் கூற, அடுத்த விஷயத்துக்குத் தாவினார் நாரதர்.

``வடபழநி சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர் கோயில் திருக்குளம் - ஆக்கிரமிப்பு குறித்து முன்பொருமுறை விரிவாகவே அலசியிருந்தோம் நினைவிருக்கிறதா...?''

``ஆமாம்! இப்போது புதிய தகவல்கள் ஏதேனும் உண்டா?''

`` ஆலய நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள், வைப்புநிதி தொடர்பான முறைகேடுகள், திருக்குள ஆக்கிரமிப்பு என்று பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு, துண்டு பிரசுரமாக ஆன்மிக அமைப்புகள் பொதுமக்களிடம் விநியோகிக்கும் அளவுக்குப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நானும் விரிவாக விசாரிக்கவுள்ளேன். விரைவில் தகவல்களோடு வருகிறேன்'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார் நாரதர்.

- உலா தொடரும்...