மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா?

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

`தில்லை அம்பல நடராஜா... செழுமை நாதனே பரமேசா...' என்று பாடியபடியே உள்ளே நுழைந்த நாரதரை வரவேற்று அமரவைத்தோம்.

தில்லை ஆனித் திருமஞ்சன வைபோகத்தை தரிசித்துவந்த நாரதர், பிரசாதங்களைக் கொடுத்து நமக்கு ஆசியும் வழங்கினார். பதிலுக்கு, கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பாலைக் கொடுத்து உபசரித் தோம், நாரதரை.

அவர், பருகி முடித்ததும் கேட்டோம்:

``தில்லையில் சிறப்பான தரிசனமா ஸ்வாமி?''

நாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா?

``அபிஷேகம், ஆனித் திருமஞ்சனத் தேரோட்டம் என அகமகிழ தரிசித்தோம் அந்த ஆனந்தக் கூத்தனை. அப்படியே... சென்ற முறை வந்தபோது. ஓர் ஊரில் காணாமல்போன விக்கிரகங்கள் குறித்துப் பேசினோமே... அதுகுறித்து விசாரிக்க, கும்பகோணத்துக்குச் சென்று வந்தோம்’' என்றபடியே, விஷயத்தைப் பகிரத் தொடங்கினார்.

``கும்பகோணம் - நாச்சியார்கோவில் அருகிலுள்ள வடபக்க அக்ரகாரம் என்ற ஊரில் 2000-ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மாயமான விஷயம் குறித்து அந்த ஊர் மக்களிடம் விசாரித்தோம்.

`நடராஜர், சிவகாமியம்மை, மற்றும் ஓர் அம்மன் சிலை, இரண்டு நாயன்மார்கள் சிலை உள்ளிட்ட 14 பஞ்சலோகப் பொருள்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அவை என்னவாயின என்றே தெரியவில்லை. அறநிலையத்துறை, உள்ளூர் நிர்வாகம், காவல் துறை எனப் புகார் தெரிவித்தும் பலனில்லை' என்று இதுகுறித்து தகவல் தந்த நண்பர், நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களையே அவர்களும் கூறிப் புலம்புகிறார்கள்.

நாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா?

மட்டுமன்றி, உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சிலைகளை திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்த்தாராம். `நம்ம ஊர்ச் சிலைகள் போல இருக்கிறதே' என்று எண்ணிக்கொண்டாலும், அப்போது அதுகுறித்த முக்கியத்துவம் தெரியாமல், அதுபற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் விட்டுவிட்டாராம். இப்போது விவகாரம் முற்றி யதும், ஊர் மக்களிடம் விவரம் சொல்லியுள்ளார்.உடனே, ஊர் மக்களில் சிலர், திருவாரூர் அருங் காட்சியகத்துக்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்...''

``அருங்காட்சியகம் தரப்பில் என்ன சொல்லப் பட்டதாம்?''

`` `பல இடங்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை நாங்கள் இங்கு காட்சிப்படுத்தி வைத்திருந்தது உண்மைதான். ஆனால், ஒருமுறை இங்கு காட்சியகத்தை உடைத்து சிலைகளைத் திருட முயற்சி நடந்தது. தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி, சிறு சிறு அருங்காட்சியகங்களிலிருந்த சிலைகள் எல்லாம் உடனடியாக சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது, நீங்கள் குறிப்பிடும் உங்கள் ஊர் நடராஜர் சிலையும் போயிருக்கலாம்' என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள்'' என்ற நாரதர், மேலும் தொடர்ந்தார்.

நாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா?

``சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்ட சிலைகளில், இவர்கள் தேடிச் சென்ற சிலைகள் இல்லை. ஆனால், பல ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பலவும் ஒரு குடவுனில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை, அந்தத் தொகுப்பில் தங்கள் ஊரின் சிலைகள் இருக்கலாம் என்கிறார்கள், ஊர் மக்கள். அத்துடன், `தொல்லியல் துறையும், அருங் காட்சியகத் துறையும் அந்தச் சிலைகளைக் கண்டறிய உதவவேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

மேலும், இதுகுறித்து தொல்லியல் துறையிடம், தகவல் அறியும் சட்டத்தின் வழியே விளக்கம் கேட்கப்பட்டதாம். அதற்கு, `எங்களிடம் வரும் எல்லா சிலைகளையும் ஆய்வு செய்து... அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, அவற்றின் எடை, எந்த ஊரில் எடுக்கப்பட்டன எனப்போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு, அருங்காட்சியகத்துக்கு அனுப்பிவிடுவோம்' என்றும், `சிலைகளின் பட்டியலை அருங்காட்சியகமே வைத்திருக்கும்' என்றும் தகவல் அளிக்கப்பட்டதாம். ஆனால், அருங்காட்சியகம் இன்றுவரை அந்தச் சிலைகள் குறித்து எந்த பதிலும் தரவில்லை என்கிறார்கள், ஊர் மக்கள்.

`அந்தச் சிலைகளை ஊர் மக்களிடம் ஒப்படைக்கலாம்' என்று அறநிலையத்துறை பரிந்துரைத்தும், ஊர் மக்கள் பல இடங்களில் முறையிட்டும் உரிய பலன் கிடைக்கவில்லை என்பது வேதனையான விஷயம் என்று அங்கலாய்க்கிறார்கள், அவ்வூர் மக்கள்'' என்று கூறி முடித்த நாரதர், எழுந்து சென்று தண்ணீர் பருகிவிட்டு வந்து, மேலும் தொடர்ந்தார்.

``இந்த ஊரில் மட்டுமல்ல, கும்ப கோணம் வட்டாரத்தில் பல இடங்களில் இப்படிப் பல சிலைகள் மாயமாகியுள்ளன. ஆலயங்களில் உள்ள சிலைகளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் அதேநேரம், இப்படி ஆங்காங்கே பூமியில் கண்டெடுக்கப்படும் சிலைகள் குறித்தும் அரசுத் தரப்பினர் அக்கறைகொள்ள வேண்டும். அவை பாதுகாக்கப்பட்டு உரிய கோயில்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் கூடுதல் கவனம் எடுத்துச் செயல்படவேண்டும்'' என்ற நாரதர், கும்பகோணம் விழா தொடர்பாக வேறொரு சர்ச்சையைக் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

``கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கந்தகூபத் திருக்குளத்தில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடை பெறுவது வழக்கமாம். ஆனால், கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் கடந்த எட்டு ஆண்டுகளாக அந்தத் திருவிழா நடைபெறவில்லை என்று வருத்தப் படுகிறார்கள் பக்தர்கள்.

கடுமையான வறட்சி நிலவிய 2009-ம் ஆண்டில்கூட மின்சார மோட்டார் மூலம் திருக்குளத்தில் நீர் நிரப்பி, தெப்பத் திருவிழாவை நடத்தினார்களாம். ஆனால் அதன்பிறகு எட்டு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறவே இல்லையாம்'' என்ற நாரதர், ``இதுகுறித்து விரிவாக விசாரித்துச் சொல்கிறேன்'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...

குழந்தைகள் சரியாகப் படிக்க...

டிப்பில் கவனமின்றி, உங்கள் பிள்ளைகள் சற்று மந்தமாக இருக்கிறார்களா? கவலை வேண்டாம்... மகாகவி காளிதாசன் எழுதிய `ஷ்யாமளா தண்டகம்' படித்து அம்பிகையை வழிபட்டால், கல்விஞானம் சிறக்கும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

படிப்பறிவு இல்லாத பாமரனாக இருந்த காளிதாசனை மகாகாளி ஆட்கொண்டு, அவரைச் சகல கலைகளிலும் சிறப்புறச் செய்தாள். அன்னை யின் அந்தக் கருணையை எண்ணி நன்றிபாராட்டும் விதமாக காளிதாசன் இயற்றியதே, ஷ்யாமளா தண்டகம்.

நாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா?

மதங்கமாமுனியின் தவச்செல்வியான அன்னை ராஜமாதங்கியான ஷ்யாமளா தேவியை துதித்துப் பாடப்பெற்ற பாடல்கள் அவை. `மாணிக்ய வீணா முபலாலயந்தீம்...' எனத் தொடங்கும் அந்தப் பாடல்களைத் தகுந்த குருவின் வழியே பொருளுணர்ந்து படித்து, மெய்யுருகிப் பாடி வழிபட் டால், வெகு நிச்சயமாக கல்வி வரம் கிடைக்கும்.

மட்டுமன்றி, ஷ்யாமளாவை வணங்குவதன் மூலம் கலைகளில் தேர்ச்சி பெறலாம், குடும்ப சர்ச்சைகள் நீங்கும், சோகம், சோம்பல், பயம் ஆகியவை விலகும்.

அரசபோகங்களை வேண்டுவோர், வில்வ தளங்களாலும் தாமரை மலர்களாலும் ஷ்யாமளா தேவியை அர்ச்சித்து வழிபடலாம். செம்பருத்திப் பூக்களால் இந்த தேவியை ஆராதனை செய்தால், பதவி யோகம் கிடைக்கும். கருங்குவளை மலர்களால் அர்ச்சித்தால் தோஷங்கள் நீங்கும்.

- மீனாட்சி கந்தப்பன், கடலூர்