திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

நாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்!

சீர்பெறுமா திருக்கோயில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சீர்பெறுமா திருக்கோயில்கள்!

“உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்; ஊருக்குப் பகையாவான் ஞானத்தங்கமே...” என்று பாடியவாறே நுழைந்த நாரதரை வரவேற்று, சூடான தேநீர் கொடுத்து உபசரித்தோம்.

அத்துடன், `‘வடபழநி வேங்கீஸ்வரர் கோயில் விவகாரத்தைக் கேட்டுச் சொல்கிறேன் என்று கூறிச் சென்றீர்...'’ என்று நாம் ஆரம்பித்ததுமே, இடைமறித்த நாரதர், அவரே பேசத் தொடங்கினார்.

``பல வருடங்களாக அக்கோயில் தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. நிர்வாகச் சீர்கேடு கள், ஆக்கிரமிப்புப் புகார்கள், நிதி முறைகேடுகள்...

நாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்!

என அந்தக் கோயில் குறித்து பல குற்றச்சாட்டுகளை ஆதங்கத்தோடு பகிர்ந்து வந்தார்கள், பக்தர்கள். இந்த நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆறுதல்படுகிறார்கள் பக்தர்கள் தரப்பில். இன்னும் விரிவான தகவல்களுக்காகக் காத்திருக்கிறேன்.கிடைத்ததும் பகிர்ந்துகொள்கிறேன்'' என்ற நாரதர், ``தக்கோலம் என்ற ஊர் பற்றி தெரியுமா உமக்கு'' என்று கேட்கவே, ஆர்வத்துடன் பதில் சொன்னோம்.

``தமிழகத்தின் சரித்திரத்தையே புரட்டிப் போட்ட பெரும் போர் நிகழ்ந்த இடமாயிற்றே... தெரியாமல் இருக்குமா!''

``அடடே... நீர் சரித்திரத்துக்குள் போய்விட்டீரா? நான் புராணத்தைச் சொல்கிறேன்... கேளும்'' என்றபடியே விவரிக்கத் தொடங்கினார் நாரதர். தக்கோலம் எனும் அந்த ஊர் குறித்த ஏதோவொரு தகவலைச் சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. ஆகவே, நாமும் இடையில் குறுக்கிடாமல் செவிமடுத்தோம்.

``சிவபெருமானை மதிக்காமல் தட்சன் யாகம் நடத்தினான். தொடர்ந்து சிவனாரின் ஆணைப்படி தட்ச யாகத்தையே நிர்மூலப்படுத்தினார் வீரபத்திரர். கதறினான் தட்சன். அப்படி அவன் ஓலமிட்ட இடமாதலால் தக்கோலம் என்று பெயர் வந்ததாகப் புராணக்கதைகள் சொல்கின்றன.

நாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்!

ஞானநூல்கள் `திருவூறல்' எனப் புகழும் இந்த ஊரில் புகழ்பெற்ற ஏழு சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது கங்காதீஸ்வரர் திருக் கோயில். காசிக்கு நிகரான புண்ணியத்தை அருளும் ஆலயம் இது என்கிறார்கள் பக்தர்கள். அற்புதமான இந்த ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் நடந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன தெரியுமா...?''

``பத்துப் பதினைந்து வருடங்கள் கழிந்திருக்குமா?''

``இல்லை... `என் நினைவுக்குத் தெரிந்து... ஏறக் குறைய முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆகின்றன' என்று ஆதங்கப்படுகிறார் பக்தர் ஒருவர். மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக் கோயிலாம் இது. சில வருடங்களுக்குமுன் குறிப்பிட்ட அளவு நிதி இந்த ஆலயப் புனரமைப்புக் காக ஒதுக்கப்பட்டதாம். ஆனாலும் இதுவரை யிலும் முழுவீச்சில் திருப்பணிகள் தொடங்கப்பட வில்லை என்கிறார்கள், பக்தர்கள் தரப்பில்.

இந்தக் கோயில் மட்டுமல்ல, தக்கோலத்தில் உள்ள இன்னும் சில கோயில்களின் நிலைமையும் இப்படித்தானாம். நிலைமை இப்படியே நீடித்தால், நம் கலாசாரப் பொக்கிஷங்களாகத் திகழும் பல ஆலயங்களை இழக்க நேரிடும் என்று ஆதங்கப் படுகிறார்கள் அவர்கள்.''

``நீர் நேரில் சென்று வந்தீரா?''

``விரைவில் தக்கோலத்துக்குச் செல்கிறேன். கங்காதீஸ்வரர் கோயில் மட்டுமன்றி, அவ்வூரில் புனரமைப்புக்காகக் காத்திருக்கும் மற்ற கோயில் களின் நிலை குறித்தும் நேரில் அறிந்து வந்து விரிவாகப் பகிர்கிறேன்'' என்ற நாரதர், வேறொரு தலம் குறித்த தகவல்களைக் கூறத் தொடங்கினார்.

நாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்!

``சதுரகிரி குறித்து தகவல் சேகரிக்கச் சென்றிருந் தேன் அல்லவா. அப்போதே ஒரு கோயில் குறித்த தகவலை நண்பர் பகிர்ந்துகொண்டார். விருதுநகரிலிருந்து வத்தாயிருப்பு மார்க்கத்தில் எரிச்சநத்தம் செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, செங்குன்றாபுரம்...''

ஊரின் பெயரை அவர் சொன்னதும் நாம் இடைமறித்தோம்.

``இந்த இதழில் கண்டுகொண்டேன் கந்தனை தொடரில் இடம்பெற்றுள்ளதே...''

``அதே கோயில்தான். அருணகிரியாரின் திருப் புகழ் பாடல்பெற்ற தலம்.''

``அந்தக் கோயிலில் என்ன பிரச்னை?''

``திருப்பணிகள் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாம். திருப்புகழ் அன்பர்கள் பலரும் இந்த ஆலயத்தை தமது சொந்த செலவில் புனரமைக்க விரும்பியும், ஆலயத்தரப்பில் எந்த வித ஒத்துழைப்பும் இல்லை என்று ஆதங்கப் படுகிறார்கள், பக்தர்கள் தரப்பில். எவரேனும் திருப்பணி குறித்து பேச்சு எடுத்தால், `பிறகு பார்க் கலாம்' என்று தட்டிக் கழிக்கிறார்களாம்.நாமும் இதுகுறித்து கோயில் தரப்பில் விசாரித்தோம்.

`ஊரில் இப்போதுதான் ஒரு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அடுத்தது இந்தக் கோயிலுக்குதான். எப்படியும் இரண்டு ஆண்டுகளாகும்’ என்று பிடி கொடுக்காமல் பதில் சொல்கிறார்கள்.

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பார்கள். ஆனால், நூறாண்டுகளுக்கு மேலா கியும் இந்த ஆலயத்தைப் புனரமைக்க மனமில் லாமல் ஆலய நிர்வாகம் இருப்பது வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. விரைவில் அவர்கள் திருப் பணிகளை கையிலெடுக்க, அந்த முருகன் அருள் புரியட்டும்'' என்று முடித்தார் நாரதர்.

அவர் கூறியதை ஆமோதித்தபடியே நாம் `‘ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே... என்று பாடியபடியே வந்தீரே...'' என்று அடுத்த கேள்வியைக் கேட்க முனையவும், நாரதரே முந்திக்கொண்டு பதில்சொன்னார்.

`‘விஷயம் இதுதான். நண்பர் ஒருவரின் திருமணத்துக்குச் சென்று ஆசியளித்துவிட்டு வந்தேன். வழியில் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கும் சென்றிருந்தேன். அங்கே சில விஷயங்கள் கவனத்துக்கு வந்தன...''

நாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்!

``என்னென்ன விஷயங்கள் ஸ்வாமி...''

`‘இன்றையச் சூழலில் நம் வீடுகளிலும் தெருக் களிலுமே பாதுகாப்புக்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தவேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால், கலைப் பொக்கிஷங்களின் கருவூல மாகத் திகழும் இந்த ஆலயத்தில் கண்காணிப்புக் கேமராக்களே இல்லை. கோயிலின் உள்ளும் புறமும் கலைப்பொருள்கள் குவிந்துகிடக்கின்றன. கண்காணிப்புக் கேமராக்கள் இல்லாத நிலையில் அவற்றுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக உள்ளது. அதுமட்டுமா! குறிப்பாக மாலை வேளையில், இந்தப் பகுதியில் அடிக்கடி மின்தடைவேறு ஏற்படுகிறதாம். இந்த நிலையில் பக்தர்களின் உடமைகளுக்கும் கோயிலில் உள்ள பொருள்களுக்கும் அந்தச் சிவமே பாதுகாப்பு'' என்று ஆதங்கப்பட்டார் நாரதர்.

அத்துடன், ``இன்னும் பல குறைகளைப் பட்டிய லிடுகிறார்கள் பக்தர்கள். அவை எல்லாவற்றைப் பற்றியும் தீர விசாரித்துவிட்டு வந்து விரிவாகச் சொல்கிறேன்'' என்றபடியே விடைபெற்றார்.

- உலா தொடரும்...