சிம்ம முகம் இருப்பதால் மட்டும் நரசிம்ம மூர்த்திக்கு அப்பெயர் உண்டாகவில்லை என்கின்றன ஞானநூல்கள். ஹிம்ஸம் (துன்பம் தருபவர்) என்பதற்கு எதிராக இருப்பவர் என்பதால், கருணையே வடிவான திருமால் `ஸிம்ஹம்' என்றானார். அதாவது துன்பத்துக்கு எதிரானவர் இந்த மூர்த்தி.

நரசிம்மரின் உபாசகராக இருந்தவர் பராசரர். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே சிறந்தது என நம்புபவர். இதை சுவையான ஒரு சம்பவத்தால் எடுத்தும் காட்டினார்.
ஒருமுறை இவர், தன்னை நாடிவந்த ஒரு அன்பருக்குச் சர்க்கரைப் போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார். `இந்தப் பாலில் இனிப்பு இல்லையே... சர்க்கரை போடவில்லையா” என்று கேட்டார் அந்த அன்பர். உடனே அவருக்குச் சர்க்கரையை மட்டும் கொடுத்துவிட்டு பாலை வாங்கிக் கொண்டார் பராசரர்.
``இது இனிப்பாகவே உள்ளது. ஆனால், சர்க்கரையை மட்டும் எப்படி இவ்வளவு உண்பது?'' என்று கேட்டார் வந்தவர். பின்னர், பாலையும் சர்க்கரை யும் கலந்து ஒன்றாகக் கொடுத்தார் பராசரர். ``வெறும் பாலைவிடவும், வெறும் சர்க்கரையைவிடவும், சர்க்கரை கலந்த பால்தான் இனிப்பாக உள்ளது'' என்றார் வந்தவர்.
அப்போது பராசரர், ``விஷ்ணு பகவான் மிருக வடிவில் அவதரித்த மச்சம், கூர்மம், வராகம் போன்றவை வெறும் பால் போன்றவை. அதேபோல் நர வடிவிலான ராமன், பலராமன், பரசுராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் சர்க்கரை போன்றவை.
ஆனால், மனித வடிவம் மிருக வடிவம் இரண்டும் கலந்த பகவானின் நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றது. நரசிம்மரைப் பற்றிக் கொண்டால் நலமே விளையும்'' என்று வந்தவருக்கு விளக்கி, ஆசி கூறினாராம்.