Published:Updated:

நாரதர் உலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கல்யாண தீர்த்தம் 
அகத்தியர் - லோபாமுத்திரை
கல்யாண தீர்த்தம் அகத்தியர் - லோபாமுத்திரை

கல்யாண தீர்த்தம் அகத்தியர் - லோபாமுத்திரை

பிரீமியம் ஸ்டோரி

நாம் அலுவலகத்துக்குள் நுழைந்த நேரம் செல்போன் திரையில் எதையோ மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் நாரதர்.

நமது வருகையைக் கவனித்தவர், செல்போன் திரையிலிருந்து கண்களை விலக்காமலேயே, அருகில் தயாராக இருந்த சுக்குக்காபி கோப்பையை எடுத்து நம்மிடம் நீட்டினார். `இன்று நீர்தான் தாமதம்’ என்று அவர் சொல்லாமல் சொல்வதாகப் பட்டது நமக்கு. கோப்பையை வாங்கி சுக்குக் காபியைப் பருகியவாறே, ``மன்னிக்கவும் சுவாமி! ஒரு மீட்டிங். அதனால்தான் சிறிது தாமதம்...’’

நாரதர் உலா

நாமாகவே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு நாரதரிடம் கேட்டோம். ``என்ன சுவாமி... செல்போனில் ஏதேனும் முக்கியமான தகவலா?’’

நிமிர்ந்து நம்மை நோக்கியவர், ``நம் இணைய தளத்தில் வெளியான கட்டுரையையே வாசித்துக் கொண்டிருந்தேன்... அறநிலையத் துறையின் புதிய முயற்சி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்...’’

``கோரிக்கையைப் பதிவிடுக எனும் புதிய இணையவழித் திட்டத்தைச் சொல்கிறீர்களா?’’

``அதேதான்... இந்து அறநிலையத் துறை சார்ந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துவரும் சூழலில், இந்தப் புதிய முயற்சி பக்தர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்து அறநிலையத் துறை இணையதளத்தில் முகப்புப் பக்கத்திலேயே இந்த வசதி காணப்படுகிறது. திருக்கோயில் பராமரிப்பு, கட்டண தரிசனம் குறித்த புகார்கள், பழைமை வாய்ந்த கோயில்கள் புனரமைக்கப்படாத நிலை எனப் பல்வேறு பிரச்னை குறித்த கோரிக்கைகளைப் பக்தர்கள் இதில் பதிவிடலாம்.

பதிவிடுவோர் மாவட்டம், வட்டம், பெயர், மொபைல் போன் எண் ஆகியவற் றைப் பதிவிட்டுவிட்டு, கோரிக்கையை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவிடலாம். பதிவிட்டதும் பதிவு செய்தவரின் போன் எண்ணுக்குப் புகார் பதிவு எண் வந்துசேரும்.

60 நாள்களுக்குள் புகார்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 60 நாள்களுக்குப் பிறகு, பதிவிட்டவர் தன் புகார் பதிவு எண்ணைக் குறிப்பிட்டுப் புகார் மீதான நடவடிக்கையின் நிலையை அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.’’

``ஆன்மிக அன்பர்கள் பலரும் இந்த வசதியைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளார்கள். துறையின் அமைச்சர் சொல்லியிருப்பது போல், அப்படிப் பதிவிடப்படும் புகார்களை உடனுக்குடன் விசாரித்து, நடவடிக்கைகளை வேகப்படுத்தினால், திருக்கோயில்கள் சார்ந்த பல பிரச்னை களுக்குத் தீர்வாக அமையும்.’’

``நிச்சயமாக...’’ என்று ஆமோதித்த நாரதர் அடுத்ததொரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தார்: ``பாபநாசம் கல்யாண தீர்த்தம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவியது பார்த்தீரா...’’

``ஆம், அதுகுறித்தத் தகவலையும் நம் இணையதளத்தில் பகிர்ந்துள்ளோமே...’’

நாரதர் உலா

``நானும் படித்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடிவரும் அகஸ்தியர் அருவி நெல்லை மாவட் டத்தின் அடையாளங்களில் ஒன்று. இந்த அகஸ்தியர் அருவிக்கு மேலே கல்யாண தீர்த்தம் அருவி உள்ளது.

இந்த இடத்தின் அருகில் அகத்தியர் தவம் செய்ததாகவும், அவருக்கு சிவனாரும் பார்வதிதேவியும் கல்யாணத் திருக்கோலத்தில் காட்சி அளித்தாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஒருமுறை இந்த இடத்துக்குச் சென்று வந்தாலே கல்யாணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே, இது ஆன்மிகக் கேந்திரமாகவும் திகழ்கிறது.

இந்தக் கல்யாண தீர்த்தம் அருகே அகத்தியர் சிலை, உலோபாமுத்திரை சிலைகள் அமைந்திருந்தன. அகத்தியரின் பாதம் பதிந்த சுவடும் உண்டு. சித்ரா பெளர்ணமி இங்கு விசேஷம்.

இத்தனை சிறப்புக்குரிய கல்யாண தீர்த்தம் பகுதியில் அமைந்திருந்த அகத்தியர் - உலோபாமுத்திரை சிலைகள் சமீபத்தில் உடைக்கப்பட்டு விட்டதாகவும் வனத்துறையினரின் அலட்சியமே இதற்குக் காரணம் எனவும் சமூக வலைத் தளங்களில் தகவல் பரவியது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. அதனால் அதிருப்தியடைந்த ஆன்மிக அமைப்பினர் பலரும் பெரிதும் வருத்தமும் ஆதங்கமும் தெரிவித்தனர்.

`உலகின் தொன்மையான மலை பொதிகை. தமிழுக்கு இலக்கணம் தந்த அகத்தியரின் உறைவிடம் இது. ஆகவே பொதிகையின் உச்சியில் கல்யாண தீர்த்தத்துக்கும் மேலே உள்ள அகத்தியர் சிலையை பயபக்தியுடன் சென்று தரிசித்து வருவார்கள் பக்தர்கள் குழுவினர்.

நாரதர் உலா

ஆனால், வனத்துறையினரின் கெடுபிடி காரணமாக கடந்த 15 வருடங்களாக அகத்தியர் சிலையைத் தரிசிக்கச் செல்ல அனுமதியில்லை. அதனால் பக்தர்கள் பலரும் அகஸ்தியர் அருவியில் குளித்துவிட்டு கல்யாண தீர்த்தத்தில் உள்ள அகத்தியர் - உலோபா முத்திரை திருமேனிகளை வழிபட்டுவிட்டு வருவார்கள். ஆனால் கொரானா ஊரடங்கைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு முதல் வனத்துறையினர் அதற்கும் தடை போட்டுவிட்டார்கள்.

இந்த நிலையில் அங்கிருந்த அகத்தியர் சிலை உடை பட்டுக் கிடப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். அந்த இடத்தில் மீண்டும் சிலைகளை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிறார்கள் பக்தர்கள் தரப்பில். அத்துடன், ஆண்டு முழுவதும் வற்றாமல் விழக்கூடிய அகஸ்தியர் அருவியை மணல் மூட்டைகளால் அடைத்து மடை மாற்றம் செய்திருப்பது போன்ற படமும் வெளியாகி பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

``வனத்துறையினர் தரப்பில் விசாரித்தீரா?’’

``ஆம்! `கடந்த 60 வருடங்கள் இல்லாத வகையில் ஜனவரி 7 முதல் 18-ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. ஜனவரி 17 மற்றும் 18-ம் தேதிகளில் கல்யாண தீர்த்தம் அருவியில் வெள்ளம் வந்தது. அப்போது அகத்தியர், சிலையை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. அதுகுறித்து அப்போதே செய்திகள் வெளியாகின. உலோபாமுத்திரை சிலையை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். மீண்டும் அந்தச் சிலைகளை அதே இடத்தில் நிறுவ ஏற்பாடு செய்துவருகிறோம்.

வெள்ளச் சேதத்தின்போது வெளியான புகைப்படங்களை இப்போது யாரோ திட்டமிட்டு வெளியிட்டு, விஷமிகளால் சிலைகள் உடைக்கப் பட்டதாக வதந்தியைப் பரப்பியதால், பக்தர்கள் வருத்தம் அடைந்ததோடு எங்களிடமும் பலரும் கேட்கத் தொடங்கினார்கள். நாங்கள் அவர்களுக்கு விஷயத்தை விளக்கமாகத் தெரிவித்தோம். உள்ளூர் பக்தர்கள் எல்லோரும் புரிந்துகொண்டார்கள்.

அதேபோல், வெள்ளத்தின்போது அகத்தியர் அருவிக்குச் செல்லும் பாதை முழுமையாகச் சேதமடைந்து விட்டது. அதைச் சீரமைக்கும் பணிகள் நடந்தபோது, தண்ணீர் வராமல் இருப்பதற்காக அருவியில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரைத் திருப்பி விட்டிருந்தோம். அந்தப் புகைப்படத்தையும் சிலர் தவறாகப் பரப்பி விட்டார்கள்’ என்கிறார்கள் வனத்துறை தரப்பில்’’ என்ற நாரதர் மேலும் தொடர்ந்தார்.

``தலத்தின் முக்கியத்துவம் கருதி, உரிய வழிகாட் டல் விதிமுறைகளோடு பயணிகளும் பக்தர்களும் தரிசனத்துக்குச் சென்றுவர அனுமதி வழங் கலாம். அப்போதுதான் இத்தகைய சர்ச்சைகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் சில ஆன்மிக அமைப்பினர்.

வேறொரு கருத்தையும் அவர்கள் முன் வைக்கிறார்கள். பொதிகை உச்சியில் உள்ள அகத்தியரை தரிசிக்கச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று தமிழகப் பாதை. கல்யாண தீர்த்தம் - சொரிமுத்து ஐயனார் கோயில் - பாண தீர்த்தம் சித்திவிநாயகர் தரிசனம் - அகத்தியர் தரிசனம் என்று இந்தப் பயண வழி அமையும்.

இன்னொன்று கேரளப் பாதை. திருவனந்த புரம், நடுவன்காடு, விதுரா என்று பயணித்து காணித்தலம் என்ற பகுதியை அடைவார்கள். அங்கே பதிவு செய்துகொண்டு, போனக் காடு வழியே பேய்ப்பாறை ரேஞ்சைக் கடந்து அகத்தியரைத் தரிசிக்க செல்வார்கள்.

இவற்றில் கேரளப் பாதை வழியே பயணிக்க 2500 ரூபாய் வரையிலும் கட்டணம் பெற்றுக்கொண்டு தற்போதும் கேரள வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகிறார்கள். ஆனால் தமிழக வனத் துறையினரே கெடுபிடி காட்டுகிறார்கள் என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.’’

மதுரை ஏழுகடல் தீர்த்தம் புராணச் சிற்பம்
மதுரை ஏழுகடல் தீர்த்தம் புராணச் சிற்பம்

``விரைவில் நல்ல தீர்வு கிடைக்கட்டும்’’ என்ற நாம், ``மதுரை ஏழுகடல் வீதியிலுள்ள காஞ்சன மாலை அம்மன் கோயில் ஏழுகடல் தீர்த்தம் ஆக்கிரமிப்பு என்று தகவல் சொன்னீர்களே...’’ என்று நினைவூட்டினோம்.

``கோயில்கள் தீர்த்தங்களால் பெருமைபெற்ற ஊர் மதுரை. இங்கு நகர வளர்ச்சி என்ற பெயரில் புரதானப் பெருமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள்.பாண்டிய மன்னர்கள், கடலை பார்க்காத மதுரை மக்களுக்காக உருவாக்கியதுதான் ஏழுகடல் வீதி என்பார்கள். நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவான வீதி என்றும் தகவல் சொல்வார்கள்.

புராணம் அற்புதமான திருக்கதையைச் சொல்கிறது. மீனாட்சியம்மனின் அன்னை காஞ்சனமாலைக்காக ஏழு கடலையும் இறைவன் இங்கு வரவழைக்க, ஏழுகடல்களும் ஒரு கிணற்றில் சங்கமித்து ஆர்ப்பரித்தனவாம். அதை அமைதிப்படுத்தி புண்ணிய தீர்த்தமாக்கினாராம் இறைவன்.

மாநகராட்சி நிர்வாகம், ஏழு கடல் தீர்த்தம் இருந்த இடத்தை மேடாக்கி 30 வருடங்களுக்கு முன் வணிக வளாகத்தை கட்டியது. அதனால், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடமே இக்கால தலைமுறைக்குத் தெரியாமல் போய்விட்டது.

இதன் புராதன மேன்மையை அடுத்தத் தலைமுறையினரும் அறியும் விதம், ஏழுகடல் என்ற பெயரிலேயே புதிய தீர்த்தம் அமைக்கவேண்டும். என்று வெகுகாலமாக கோரிக்கை வைத்து வருகிறார்களாம் பக்தர்கள்!’’ என்ற நாரதர் நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு