மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: ஊரடங்கால் பொலிவிழந்த ஆடி!

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

ஆடி அழைத்து வரும் என்ற சொல் வழக்குக்கு ஏற்ப தொடர்ச்சியாக கோயில் விசேஷங்கள் களைகட்டும் மாதம் இது.

"விரைவில் திருக்கோயில்கள் திறக்கப் பட்டு, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அரசு முடிவு செய்திருக்கிறது'' என்ற செய்தியை சொல்லிக்கொண்டு வந்தமர்ந்த நாரதருக்கு இஞ்சி டீ கொடுத்து உபசரித்தோம்.

அவர் பருகி முடிக்கும் வரை காத்திருந்து பிறகு கேட்டோம்.

``ஊரடங்கை மீறி பக்தர்களை தரிசனத் துக்கு அனுமதித்த காரணத்துக்காக அர்ச்சகர் ஒருவர் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளராமே?''

நாரதர் உலா: ஊரடங்கால் பொலிவிழந்த ஆடி!

``ஆமாம். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கந்தன்குடியில் உள்ளது ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில், 80 வயது உடைய அர்ச்சகர் கவுரீச குருக்கள் என்பவர் பூஜை செய்து வந்தார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பணி ஓய்வுக்குப் பிறகும் விருப்பத்தின் பேரில் மீண்டும் கோயிலில் பூஜை செய்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டது. பூஜைகள் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தன. ஆனால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்த நிலையில், கந்தன்குடி கோயிலுக்குள் கவுரீச குருக்கள் பக்தர்களை அனுமதித்து பூஜை செய்து வந்ததாக புகார் வந்தது. இதனையடுத்து தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு உத்தரவின் பேரில், செயல் அலுவலர் முருகையன் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஊரடங்கை மீறி கோயிலுக்குள் பக்தர்களை அனுமதித்தது தெரிய வந்தது. எனவே, கவுரீச குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என்ற நாரதர், ``விதிகளை மீறாமல் இருந்திருக் கலாம்'' என்றார் வருத்தத்துடன்.

``ஆடி மாதம் விழாக்கள் களை கட்டும். கோயில்கள் நிரம்பிய டெல்டா பகுதியில் ஆடிக் கொண்டாட்டங்கள் எப்படி நாரதரே ?"

``ஆடி அழைத்து வரும் என்ற சொல் வழக்குக்கு ஏற்ப தொடர்ச்சியாக கோயில் விசேஷங்கள் களைகட்டும் மாதம் இது. ஆயினும், `கோவிட் பேண்டெமிக்' (covid pandemic) காரணமாக இந்த வருடத்து ஆடி முற்றிலும் பொலிவிழந்து விட்டது.

குறிப்பாக டெல்டா மாவட்டத்து மக்களுக்கு ஆடிப்பிறப்பு என்பது அவர்கள் வாழ்வியலோடு கலந்துவிட்ட மிக முக்கியமான விஷயம். அதிலும், முந்தைய ஆண்டுகள் போலில்லாமல், இந்த வருடம் கடந்த ஜூன் 12-ம் தேதியே காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டு விட்டது. ஆனாலும் அந்த சந்தோஷத்தைக் கொண்டாட இயலாமல் போனதில், மக்கள் விரக்தி அடைந்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

புதுப்புனல் பெருக்கிப் பாய்ந்தோடி வரும் காவிரித்தாயைக் கண்டு ரசித்தபடி, வழிநெடுக ஆங்காங்கே ஆரத்தி எடுத்து, மலர் தூவி, தீபாராதனைக் காட்டி, வணங்கி வரவேற்கும் உற்சாகக் கொண்டாட்டங்கள் இவ்வருடம் இல்லை என்பது வேதனை தரும் விஷயம்தான். மட்டுமன்றி, மிக முக்கிய பண்டிகையான ஆடிப் பெருக்கும் இப்படியே கழிந்து விடுமோ என்ற ஆதங்கத்தில் இருக்கிறார்கள் மக்கள்!

தட்சிணாயனத்தின் தொடக்கமான ஆடிப் பண்டிகையன்று பெரும்பாலான கோயில்களில் நடைபெறும் விசேஷ வழிபாடுகள், மக்கள் கூட்டம் இன்றியே நடைபெற்றன. ஆடி மாதம் முதல் செவ்வாய் தொடங்கி முதல் வெள்ளி வரை கோயில்களில் பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆனால், இவ்வருடம் அந்தக் கொண்டாட்டங்களும் இல்லை.''

மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய நாரதரை இடைமறித்துக் கேட்டோம்.

``ஆடி அமாவாசை வழிபாடுகள் எப்படி நாரதரே?''

``காவிரித் தீர்த்தக்கட்டங்களில் அதிகளவு மக்கள் கூடி முன்னோர் வழிபாடுகளைச் செய்வார்கள். அவையும் இவ்வருடம் இல்லை.திருவையாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட கோயில்களில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு செய்யப்பெறும் வருடாந்திர உற்சவத் தொடக் கங்கள், பக்தர்கள் கூட்டம் இல்லாமல், கோயில் பணியாளர்களை மட்டும் கொண்டு நடைபெற்றன.

நாரதர் உலா
நாரதர் உலா

சீர்காழி, திருப்பனந்தாள், திருவையாறு முதலான தலங்களில், ஆடி முதல் வெள்ளியன்று அம்பாளுக்கு நிகழ்த்தப்பெறும் புகழ்மிக்க நவசக்தி அர்ச்சனை, வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடிக்கிருத்திகை, திருவையாறு அப்பர் கயிலை தரிசன ஐதிக விழா, சூரியனார் கோயிலில் முதல் ஞாயிறன்று நடைபெறும் தட்சிணாயன மகா அபிஷேகம்... என எதுவும் நடைபெற வில்லை'' என்றார் நாரதர்.

``வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் திறக்கப்படலாம் என்ற அரசு உத்திரவின்படி இயங்கத் தொடங்கிய கோயில்களில் எல்லாம் வழிபாட்டு நடைமுறைகள் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டனவா சுவாமி?''

``உதாரணம் ஒன்று சொல்கிறேன் கேளும்...மயிலாடுதுறை மாவட்டம் திருக்குளம்பியம் எனும் ஊரில் ஸ்ரீகோழம்பநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பழம்பெருமை வாய்ந்த பாடல்பெற்ற சிவாலயம் இது. அம்பிகை பசுவுருவில் பூஜித்த சுயம்புலிங்கம் இக்கோயிலின் சிறப்பு. வடநாட்டில் உள்ள காசி, கயா போன்று தென்னாட்டில் உள்ள..., `வ்யதீபாதம்' என்ற பித்ரு தின வழிபாட்டிற்கு உரிய தலம் என்ற பெருமையும் இதற்குண்டு. இங்கு தடையறாது முறையான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.''

``மகிழ்ச்சி. ஆகஸ்ட் ஒன்று முதல், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோயில்களில் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு மக்கள் ரியாக்‌ஷன் எப்படி நாரதரே?''

``உற்சவங்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றபோதிலும், குறைந்தபட்ச ம் தரிசனத்துக்காவது வழி கிடைத்ததே என்று பக்தர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

நாரதர் உலா: ஊரடங்கால் பொலிவிழந்த ஆடி!

ஆனாலும் அர்ச்சனைக்கு அனுமதி கிடையாது என்பதால், அர்ச்சனைப் பொருள்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள், இந்த அறிவிப்பால் தங்களுக்கு பலன் இல்லை; தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது என்று ஆதங்கப் படுகிறார்கள். அதேபோல், எப்போதும் ஆடி மாதத்தில் எலுமிச்சைப் பழங்களுக்கு அதீத தேவை இருக்கும். இவ்வருடமோ, வாங்க ஆளில்லாமல் கடைகளில் குவிந்து கிடக்கின்றன.

ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு, இன்னும்பிற ஆடி மாத நோன்புகள், குலதெய்வ வழிபாடுகள், நேர்த்திக் கடனாற்றுதல்கள்... என மிக முக்கிய வழிபாட்டுத் தினங்களில் நடைபெறும் பூஜைப்பொருள்கள் வணிகம், இந்த வருட ஆடியில் மிகவும் ஆட்டம் கண்டுவிட்டது.

இந்த நிலை நீங்குமா நீடிக்குமா என்ற கேள்விக்கு விடைதெரியாமல் விரக்தியோடு வரப்போகும் ஆடிப் பதினெட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், இந்த வணிகர்களும் பக்தர்களும்!''

``இறையருளால் பெருந்தொற்றின் பாதிப்பு விரைவில் விலகட்டும்'' என்று நாம் கூற, அதை ஆமோதித்த நாரதர், நமது ஆன்மிக மாலை நிகழ்ச்சி குறித்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

``இதுபோன்ற இக்கட்டானதொரு சூழலில், நீங்கள் ஆரம்பித்துள்ள இணைய வீடியோ வழியிலான ஆன்மிக மாலை நிகழ்ச்சி மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பக்தர்கள், அருளாளர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு.

ஆன்மிக ஆர்வலர்கள் பலரும் இந்த நிகழ்ச்சி குறித்துத் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். தொடரட்டும் உங்களின் இறைப்பணி!''

நாரதரின் பாராட்டுகளைப் பணிவோடு ஏற்றுக்கொண்டு நாம் நன்றி சொல்ல, நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார் நாரதர்.

- உலா தொடரும்...