Published:Updated:

`வள்ளலார் கோட்டம்' பக்தர்கள் கோரிக்கை!

வள்ளலார்
பிரீமியம் ஸ்டோரி
வள்ளலார்

நாரதர் உலா

`வள்ளலார் கோட்டம்' பக்தர்கள் கோரிக்கை!

நாரதர் உலா

Published:Updated:
வள்ளலார்
பிரீமியம் ஸ்டோரி
வள்ளலார்

அதிகாலையிலேயே நாரதரிடமிருந்து வாட்ஸப் தகவல் வந்து சேர்ந்தது. `நாகை தீரத்திலிருந்து இப்போதுதான் வந்து சேர்ந்தேன். சற்றுத் தாமதமாக வருகிறேன்’ என்று தகவல் அனுப்பியிருந்தார் நாரதர். அதன்படியே ஏறக்குறைய ஒரு மணி நேரம் தாமதமாக - பதிகம் ஒன்றைப் பாடியபடியே விஜயம் செய்தார் நாரதர்.

`சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே...’


நாரதர் பாடி முடிக்கும் வரை காத்திருந்தோம். அவர் பதிகத்தை நிறைவுசெய்தபடியே விபூதிப் பிரசாதத்தையும் நம்மிடம் வழங்கினார். பயபக்தியோடுப் பெற்று நெற்றியில் இட்டுக்கொண்டோம். பொட்டலத்தில் அச்சிடப்பட்டிருந்த விவரத்தைப் படித்து, அது திருப்பாம்புரம் திருக்கோயில் பிரசாதம் என்பதை அறிந்தோம்.

``திருப்பாம்புரம் சென்று வந்தீர்களா சுவாமி... பதிகமும் அந்தத் தலத்துக்கு உரியதுதானா... ராகம் அற்புதம்...’’

``ஆமாம்... திருப்பாம்புரம் பதிகம்தான். தக்க ராகப் பண்ணில் திருஞானசம்பந்தர் பாடி அருளியது. இந்தப் பதிகத்தை உள்ளம் உருகப் பாடினால் ராகு-கேது முதலான சர்ப்ப தோஷங்களின் பாதிப்புகள் நீங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு!’’

``அற்புதம்... அற்புதம்! திருப்பாம்புரத்தில் ஏதேனும் தகவல் உண்டா சுவாமி?’’

``உண்டு... உண்டு... திருப்பாம்புரம் மட்டுமல்ல காட்டுமன்னார் கோயிலுக்கும் சென்று வந்தேன். ஆகவே, பகிர்ந்துகொள்ள விஷயங் கள் உண்டு’’ என்ற நாரதர் தொடர்ந்தார்.

``திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே அமைந்துள்ளது திருப்பாம்புரம். இங்கே, அருள்மிகு வண்டுசேர்குழலி சமேத அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயிலில் ராகுவும் கேதுவும் ஒருசேர அருள்பாலிக் கிறார்கள். இறைவனுக்கு சேஷபுரீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு.’’

``இறைவனின் திருபெயரிலும் பாம்பு இடம்பெற்றுள்ளதே...’’

``ஆமாம்! அஷ்ட மகா நாகங்களும் வழிபட்ட தலமிது. ஆகவேதான் சர்ப்பப் பரிகாரங்களுக்குப் பெயர்பெற்ற தலமாகத் திகழ்கிறது!’’ என்று விளக்கம் தந்த நாரதர், ``பெயரில் பாம்பைக் கொண்ட இந்தத் தலத்துக் கோயிலில், சமீபத்தில் வண்டுகளால் சிறு பிரச்னை...’’ என்று விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

``கோயிலின் ஸ்தல விருட்சம் வன்னி மரம். வேண்டுதல் நிமித்தம் பக்தர்கள் இந்த மரத்தையும் வலம் வந்து வழிபடுவது வழக்கம். கொரோனா நடவடிக்கைகளின் காரணமாக பல மாதங்கள் கூட்டம் வராத நிலையில், இந்த விருட்சத்தின் பொந்துகளில் விஷக் கதண்டுகள் கூடுகட்டிவிட்டனவாம்.’’

``கதண்டு கடித்தால் வலி தாங்க முடியாதே... சில நேரம் உயிருக்கே ஆபத்து விளையவும் வாய்ப்பு உண்டு என்பார்களே...’’

``சரியாகச் சொன்னீர். இந்த வண்டு கடித்தால், கடிவாயின் வாசத்தை உணர்ந்து மற்ற கதண்டுகளும் கடிபட்ட மனிதரைக் கூட்டம் கூட்டமாய் மொய்த்துவிடுமாம். இதையறிந்த ஆலய நிர்வாகத் தரப்பில் உடனடியாக மரத்தைப் பக்தர்கள் நெருங்கமுடியாதபடி கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினார்களாம். கதண்டுகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகையையும் வைத்தார்களாம். அத்துடன் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.

தீயணைப்புத் துறை தரப்பினர் வந்து பார்த்துவிட்டு, `நெருப்பு மூட்டியே இந்தக் கதண்டுகளை விரட்ட முடியும். நெருப்பால் ஸ்தல விருட்சத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால், எங்களுக்குத்தான் கெட்டப் பெயர்’ என்று தயக்கத்தோடு பின்வாங்கிவிட்டார்களாம்...’’

``பிறகு என்ன செய்தார்களாம்?’’

`வள்ளலார் கோட்டம்' பக்தர்கள் கோரிக்கை!

``நான் சென்ற நேரத்தில் இந்த நிலையில்தான் இருந்தது பிரச்னை. பின்னர் நேற்று தொலைபேசி மூலம் விசாரித்தேன்... உரிய வல்லுநர்களின் வழிகாட்டலுடன் மருந்து தெளித்து கதண்டுகளை விரட்டினார்களாம். இருந்தாலும் ஒன்றிரண்டு கதண்டுகள் மீதமிருந்தாலும் மீண்டும் கூடுகட்ட வாய்ப்பு உண்டு. கோயில் தரப்பிலும் பக்தர்கள் தரப்பிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்...’’ என்ற நாரதர், அக்கறையோடு தொடர்ந்தார்.

``இன்னும் பல கிராமங்களில் பழைய ஆலயங்கள் உண்டு. அங்கெல்லாம் கூட்டம் அதிகம் வராது. அர்ச்சகரும் பக்தர்கள் சிலர் மட்டுமே வழிபட்டுச்செல்லும் அதுபோன்ற ஆலயங்களில் பாம்புகளே வந்து போவது உண்டு...’’ என்றவரை இடைமறித்துக் கேட்டோம்.

``இதற்கு தீர்வுதான் என்ன?’’

``ஆலயங்களைப் பாழடைய விடாமல் காப்பதும் தொடர்ந்து பராமரித்து வருவதும்தான் ஒரே வழி. ஆலயத் திருப்பணிகளில், உழவாரப் பணிகளில் ஆர்வம் கொண்ட அடியார்கள் - பக்தர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். மாவட்ட வாரியாக ஒவ்வொரு பகுதியிலும் அவர்களைத் தன்னார்வ தொண்டர்களாக ஒருங்கிணைத்தாலே போதும். அவர்கள் மூலம் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க இயலும்!’’

``நல்ல யோசனை... நாமும் நம் வாசகர்கள் மூலம் இயன்றவரையிலும் இதுபோன்ற இறைப்பணிகளைச் செய்து வருகிறோம். இன்னும் அதிகம் முனைந்து முன்னெடுப்போம்.’’

நாம் கூறியதை ஆமோதித்த நாரதர் அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

``காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோயில் பிரசித்திபெற்ற சிவத்தலம். இந்தக் கோயிலின் திருக்குளம் அனந்த தீர்த்தமாகும். அனந்தன் என்ற நாகம் உருவாக்கிய தீர்த்தம் என்கின்றன புராணங்கள். பெரியளவிலான இந்தக் கோயில் குளம், ஆக்கிரமிப்பு காரணமாக மிகவும் சுருங்கிவிட்டதாம். அதேபோல், பல வருடங்களாக இந்தக் குளம் தூர்வாரப் படாமல் திகழ்கிறதாம். ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கோயில் குளத்தைத் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். அரசுத் தரப்புக்கும் கோரிக்கை மனு அனுப்பத் தயாராகி வருகிறார்கள்.’’

``வடலூர் வள்ளலார், சென்னையில் வசித்த வீட்டை வள்ளலார் கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாமே... அதுபற்றி ஏதேனும் விவரம் தெரியுமா சுவாமி?’’

``ஆம்... எனக்குக் கிடைத்தத் தகவல்களைச் சொல்கிறேன், கேளும்...

`வள்ளலார் கோட்டம்' பக்தர்கள் கோரிக்கை!


வடலூர் வள்ளலார் குழந்தைப் பருவம் முதல் சுமார் முப்பது வருடங்களாக வாழ்ந்த இல்லம், சென்னை ஏழுகிணறு பகுதியில் - வீராசாமி தெருவில் உள்ளது. வள்ளலார் திருவருட்பாவின் முதல் 5 திருமுறைகளை இங்கு தான் எழுதினார் என்பர்.

இத்தகைய சிறப்புமிக்க இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்று வள்ளலாரின் வழி நடப்பவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வீடு பலரின் கை மாறிவிட்ட நிலையில், அவர் தியானம் இருந்த இடத்தில் கழிவறை கட்டிவிட்டார்களாம். விஷயம் தெரிந்து, வள்ளலாரின் பக்தர்கள் சென்று எதிர்ப்பு தெரிவித்த பிறகு, கழிவறையை அகற்றிவிட்டார்களாம்.

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்டதாம். அறிவிப்போடு சரி, இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். வள்ளலார் பக்தர்கள் எவ்வளவு போராடியும் எதுவும் நடக்கவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது, புதுச்சேரி ராமலிங்கர் தியான கூடத்தின் நிறுவனர் சார்பில், கமலக்கண்ணன் என்பவர் தமிழக முதல்வருக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். வள்ளலார் வாழ்ந்த அந்த வீட்டை அரசுடமை ஆக்கவேண்டும். வள்ளுவர் கோட்டம் போல் அங்கே ராமலிங்கர் கோட்டம் அமைக்கவேண்டும்.

வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாராம். கடிதம் பார்வைக்கு வந்ததும், `இதுபற்றி ஏன் இவ்வளவு காலம் என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை’ என்று கேட்டதுடன், முதற்கட்டமாக வள்ளலார் வாழ்ந்த வீடு பற்றி தகவல்களை திரட்டித் தரும்படி அதிகாரிகளிடம் பணித்துள்ளாராம் முதல்வர்.’’

``இப்போது தேர்தல் தேதி வேறு அறிவித்துவிட்டார்களே...நடவடிக்கை எடுப்பார்களா’’

``இனியும் எவ்வித காரணமும் சொல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பக்தர்களின் கோரிக்கை. ஒருவேளை தேர்தல் நெறிமுறைகள் காரணமாக நடவடிக்கைகள் தள்ளிப்போனாலும், தேர்தலுக்குப் பிறகு வரப்போகும் அரசு நிச்சயம் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு!’’ என்ற நாரதர், நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...

ஶ்ரீவராஹி
ஶ்ரீவராஹி

வராஹிதேவி வழிபாடு!

ஞ்சமி திதி நாட்கள் வாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாள்களில், ஆலயங்களில் சப்தமாதர்கள் சந்நிதியில் அருளும் வாராஹிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.

அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றிக் கூறி, தியானித்து வழிபட்டால், தீமைகளை வேரறுத்து சகல வரங்களையும் தந்தருள்வாள், வராஹிதேவி.

- கிருஷ்ணா, மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism