Published:Updated:

தினமும் நட்சத்திரங்கள் வழிபடும் குமரன் கோயில்!

நட்சத்திரக் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திரக் கோயில்

நட்சத்திரக் கோயில்

தினமும் நட்சத்திரங்கள் வழிபடும் குமரன் கோயில்!

நட்சத்திரக் கோயில்

Published:Updated:
நட்சத்திரக் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திரக் கோயில்

குன்றுதோறும் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் அருளும் தலம்தான் நட்சத்திர கிரி. கார்த்திகைப் பெண்களும் 27 நட்சத்திரங்களும் தினமும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை.

நட்சத்திரக் கோயில்
நட்சத்திரக் கோயில்


திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவில் அமைந்துள்ளது இத்தலம். நட்சத்திரக் குன்று, நட்சத்திரக் கோயில் என்றெல்லாம் வழங்கப்படும் இக்கோயிலின் சுயம்பு முருகனை வழிபட்டால் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

தென்கயிலாயம் என்ற போற்றுதலுக்குரியது பர்வதமலை. இங்கே போதன், போதவான், புத்திராண்டன், புருகூதன், பாண்டரங்கன் சோமன், வாமன் ஆகிய ஏழு தவசிகள் தவம் புரிந்து வந்தனர். இந்த நிலையில் அருகில் ஓர் க்ஷேத்திரத்தில் தவமும் சிவபூஜையும் செய்ய சித்தம் கொண்டாள் அன்னை உமையவள். அதன் பொருட்டு வாழைப் பந்தல் ஒன்று அமைத்தாள்.

சிவலிங்கம் பிடிக்க நீர் தேவைப்பட்டது. அதன்பொருட்டு கந்தனையும் கணபதியையும் அனுப்பிவைத்தாள். பிள்ளையார், முன்பு அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியைத் தோற்றுவித்தது போன்று, இப்போது ஜமதக்னி என்ற முனிவரின் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அதன் நீர் பெருகி, கமண்டல நதியாய்ப் பாய்ந்தது. முருகப்பெருமானோ தன் சக்திவேலை ஏவினார்.

குமரன்
குமரன்

சீறிப் பாய்ந்து சென்ற வேலாயுதத்தின் பயண வழியில் இருந்த தபஸ்விகள் எழுவரும், வேலால் தாக்குண்டு மோட்சகதி அடைந்தனர். இதன் காரணமாக கந்தப்பெருமானை தோஷம் பற்றிக்கொண்டது. பின்னர், அன்னை சக்தியின் அறிவுரைப்படி சேயாற்றின் வடகரையில் ஏழு `கரை கண்ட’ தலங்களையும்; தென்கரையில் ஏழு கயிலாய தலங்களையும் உருவாக்கி சிவவழிபாடு செய்து பாவ விமோசனம் பெற்றாராம். அப்போது அவர் தங்கிய மலைத் தலங்கள் இரண்டு உண்டு. அவைதான் தேவகிரியும் நட்சத்திர கிரியும் என்கின்றன புராணங்கள்.

நட்சத்திரகிரி
நட்சத்திரகிரி
தீர்த்தச் சுனை
தீர்த்தச் சுனை
படிக்கட்டுப் பாதை
படிக்கட்டுப் பாதை


யுகங்கள் கழிந்தன. பிற்காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த சிவாசார்யர் இருவர், ஆடிக்கிருத்திகை தினத்தில் திருத்தணி முருகனை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு வருடம் ஆடிக் கிருத்திகை அன்று அவர்களால் திருத்தணிக்குச் செல்ல இயலவில்லை. அதனால் இருவரும் மிகவும் கவலை அடைந்தனர்.

அன்று இரவில் அவர்களின் கனவில் குமரன் தோன்றினான். “நான் நட்சத்திரகிரி என்னும் குன்றில் - நடுமலையில் சுயம்பு வடிவாய் உள்ளேன். சூரிய சந்திரர் உள்ள வரையிலும் 27 நட்சத்திரங்களும் தினமும் வந்து என்னை வழிபடும் இடம் அது. அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள சந்திரபுஷ்கரணியில் தோன்றும் நாகம் ஒன்று உங்களுக்கு வழிகாட்டும். நீங்கள் என்னை வந்தடையலாம்’’ எனக் கூறி மறைந்தார்.

திடுக்கிட்டுக் கண் விழித்த சிவாசார்யர்கள் இருவரும் விடிந்ததும் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே கனவில் முருகன் குறிப்பிட்ட திருக்குளத்தை அடைந்தனர். அங்கே ஒளிபொருந்திய நாகம் தோன்றி வழிகாட்ட, இருவரும் பின்தொடர்ந்தனர். மலையில் மத்தியபகுதியை அடைந்ததும் நாகம் மறைந்தது.

அந்த இடத்தில் சப்பாத்திக்கள்ளிச் செடிகளுக்கு இடையே சுயம்பு லிங்கவடிவில் காட்சியளித்தார் முருகப்பெருமான். சிவாசார்யர் இருவரும் மெய்சிலிர்க்க, உள்ளம் உருக வணங்கித் தொழுதனர், சுயம்பு முருகனை. விரைவில் இந்தத் தகவல் ஊருக்குள் பரவ, ஊரே திரண்டு வந்து முருகனை தரிசித்துப் பரவசப்பட்டது. பின்னர், அந்த இடத்தில் வள்ளி - தெய்வானை தேவியருடன் முருகனின் திருவிக்கிரகமும் ஸ்தாபிக்கப்பட்டு, ஆலயம் எழும்பியது.

பைரவர்
பைரவர்
கணபதி
கணபதி
இடும்பன் சந்நிதி
இடும்பன் சந்நிதி


இங்ஙனம் சேயாற்றின் கரையோரம், நட்சத்தரக்குன்றின் மீது அழகுறக் கோயில்கொண்டார் முருகப்பெருமான். மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுப் பாதை உள்ளது. சுமார் 227 படிகள் உள்ளன. மேலே ஏறியதும் முதலில் தரிசிப்பது, சித்தி விநாயகரை. மூன்று நிலை ராஜகோபுரத்துடன் பிரதான வாயில் திகழ்கிறது. கோயிலில் வள்ளி தெய்வானை சமேதரான முருகனின் உற்சவர் மூர்த்தி, காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் ஆகியோரையும் தரிசிக்கலாம். மூலவர் முருகனின் சந்நிதி மகா மண்டபம், அர்த்தமண்டபத்துடன் திகழ்கிறது.

கருவறையில் வள்ளி - தெய்வானை தேவியருடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். அவரின் திருமுன் சுயம்புவாய் தோன்றிய கந்தனின் லிங்கத் திருமேனி. நாகம் தோன்றி அடையாளம் காட்டியதை நினைவுகூரும் விதம், லிங்கமேனியில் நாகபாசம் பொருத்தப்படுகிறது. அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் தினமும் இங்கு வந்து இந்த முருகப்பெருமானை பூஜித்து வழிபடுவதாக ஐதிகம். மலைக்கோயிலின் வெளியேயும் மலேசிய பத்துமலை முருகனை நினைவுகூரும் விதத்தில் கம்பீரமாய் தங்க நிறத்தில் தகதகக்கிறான் ஒரு முருகப்பெருமான்.

எழிலார்ந்த மலைத்தீரம், அகத்தையும் சேர்த்துக் குளிர்விக்கும் காற்று, அருள்பிரவாகமாகப் பொங்கிப்பெருகும் கந்தனின் சாந்நித்தியம் என மாண்புற்றுத் திகழும் கந்தனின் இந்த மலைக்கோயில், அவன் அடியவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் ஆகும். மலைக்குமேல் வாகனங்கள் செல்லும்விதமான பாதையும் உள்ளது. அடிவாரத்தில் தீர்த்தச் சுனையும், அனுமன், கணபதி, நவகிரகங்கள் மற்றும் இடும்பன் சந்நிதியும் உள்ளது.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இந்தத் தலத்தின்மீது நான்கு பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார். மேலும், சிவசுப்பிரமணிய மாலை, நட்சத்திரக் குன்று வழிநடைப் பதம், உடுமலைப் பாமாலை, நட்சத்திரக்குன்று அருள்மிகு சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் போன்ற பாமாலைகளும் புலவர் பலராலும் இயற்றப் பட்டுள்ளன.

சித்திரை வருடப்பிறப்பு பாற்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகைப் பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தை மற்றும் ஆடிக் கிருத்திகை விழாக்கள், பங்குனி உத்திர பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், மாதாந்திர கிருத்திகை வழிபாட்டு வைபவங்கள் ஆகியன இங்கே சிறப்புற நடைபெறுகின்றன.

கந்தசஷ்டியின்போது அருகிலுள்ள எலத்தூருக்குச் செல்லும் முருகப் பெருமான், அங்கே அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கி வந்து, நட்சத்திரக்கோயிலில் சூரசம்ஹாரம் செய்கிறார். பின்னர், சேயாற்றங்கரையில் அமைந்துள்ள குருவிமலை எனும் கிராமத்துக்குச் சென்று, அங்கே ஆற்றில் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

கிருத்திகை தினங்களில் இந்தக் கோயிலுக்குச் சென்று முருகனுக்குத் தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷம். இதனால் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல் நட்சத்திரகிரி முருகப்பெருமானுக்குப் பாலபிஷேகம் செய்து, சிவந்த வெட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபட்டால் நட்சத்திர தோஷங்கள் யாவும் நீங்கி நல்லருள் கிடைக்குமாம். வரும் ஜூலை 23 (ஆடி-7) சனிக்கிழமை அன்று ஆடிக் கிருத்திகைத் திருநாள். புண்ணியம் மிகுந்த இந்நாளில் குடும்பத்துடன் சென்று நட்சத்திரகிரி குமரனை வழிபட்டு, குறையில்லா வாழ்வைப் பெற்று வாருங்கள்.

எப்படிச் செல்வது?: திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில், சுமார் 8 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது நட்சத்திரக்குன்று எனப்படும் நட்சத்திரக்கோயில். போளூர் மற்றும் செங்கத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

- பழங்காமூர் மோ. கணேஷ்