திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

வழக்குகள் தீர்க்கும் சாட்சி நாதேஸ்வரர்!

சாட்சி நாதேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
சாட்சி நாதேஸ்வரர்

மனித வாழ்க்கை முன்வினைப் பயன்களால் நிகழ்வது. பூர்வ ஜன்மம் தொட்டு அறிந்தும் அறியாமலும் நாம் செய்த தீவினைகளே, இப்பிறவியில் நம்முடைய துன்பங்களுக்குக் காரணமாகின்றன.

னால் அந்த ஈசனை வணங்கி அவர் தாளில் சரணடைந்தால் தீவினைகள் நல்வினைகளாக மாறும். மரண பயமும் விலகும். ‘ஈசனைத் தவிர வேறு புகல் இல்லை’ என்பதை நம்பி அவர் சந்நிதியில் அழுதுபுலம்பினால், சகல துன்பங்களையும் மாற்றி அருள்வார் ஈசன். அதற்குச் சாட்சியாகத் திகழ்வதே திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயில்.

அரதனகுப்தன் என்னும் மதுரை வணிகன், தன் மாமன் மகளான ரத்தினாவளியுடன் வணிகம் செய்ய சோழ தேசத்துக்குப் பயணம் புரிந்தான். வழியில் திருப்புறம்பியத்தை அடைந்தபோது அரவம் தீண்டி அவன் உயிர் பிரிந்தது. ஏற்கெனவே தன் தாய் தகப்பனை இழந்திருந்த ரத்தினாவளி, ஒரே உறவாக இருந்த தன் மாமனும் இறந்துவிடவே தன் தீவினையை நினைத்து வருந்தி அழுதாள். அந்தத் தலத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவனாரின் சந்நிதிக்குச் சென்று புலம்பினாள்.

அடியவரின் துயர் தீர்ப்பதுதானே ஆண்டவ னின் வேலை; அதற்கென அவர் புரிந்தார் ஒரு லீலை. அரதனகுப்தனை உயிர்ப்பித்தார்.ரத்தினாவளியுடன் அவனைச் சேர்ப்பித்தார். இருவருக்கும் அங்கேயே திருமணம் நடந்தது. நல்ல காரியம் நான்குபேர் முன்னிலையில்தானே நடைபெற வேண்டும்...

ஈசன், ``நானும் இந்தத் தலத்தின் கிணறு, ஸ்தல விருட்சம், மடப்பள்ளி ஆகியவையுமே இந்தத் திருமணத்துக்கு சாட்சி'' என்று அருளினார். வணிகம் முடித்து மதுரை திரும்பினான் அரதனகுப்தன். அவன் முதல் மனைவி, அரதனகுப்தன் மரணத் திலிருந்து மீண்ட அதிசயத்தைவிடவும் அவன் திருமணம் செய்துகொண்ட தகவலைக் கேட்டுத்தான் அதிர்ந்தாள்.

சாட்சி நாதேஸ்வரர் கோயில்
சாட்சி நாதேஸ்வரர் கோயில்

‘சாட்சி இன்றி நடைபெற்ற திருமணம் செல்லாது’ என்று நீதிமன்றத்தை நாடினாள். ‘துயர் வந்தால் ஈசனின் துணை நாடினால் போதும்’ என்பதை அறிந்திருந்த ரத்தினாவளி ஈசனை வேண்டினாள். ஈசன் அசைந்தால் அகிலமும் அசையும். அவர் ஆட்டுவித்தால் ஆடாதன உண்டா என்ன?!

சிவனருளால் அற்புதம் நிகழ்ந்தது. அவரும், அசையாப் பொருள்களான கிணறு, மடப்பள்ளி, வன்னிமரம் ஆகியனவும் சாட்சிகளாய் மன்றத்தில் எழுந்தருள, ரத்தினாவளிக்கு நல்வாழ்க்கை எனும் வரம் கிடைத்தது. காலம் முழுமையும் இறைவனின் திருவிளையாடலுக்குச் சாட்சியாக மரமும், மடப்பள்ளியும், கிணறும் மதுரையிலேயே கோயில்கொண்டன.

வழக்குமன்றம் ஏறி சாட்சி சொன்னதால் அந்த இறைவனுக்கு ‘சாட்சிநாதர்’ என்ற திருநாமம் உண்டாயிற்று. இன்றும் தீராத வழக்குகள் உள்ளவர்களும், பொய் சாட்சிகளால் அநீதிக்கு ஆளானவர்களும் திருப்புறம்பியத்தில் கோயில் கொண்டிருக்கும் சாட்சிநாதரை தரிசித்துத் தொழுதால், விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள்.

சாட்சி நாதேஸ்வரர்
சாட்சி நாதேஸ்வரர்

இந்த அற்புதத் தலத்தின் மகிமைகள் ஏராளம். அம்பிகைக்கு இங்கு ‘கரும்படு சொல்லியம்மை’ என்று திருநாமம். அன்னை தன் இனிமையான சொல்லினால் பக்தர்களின் துயர்களை மாற்றுவாள் என்பதால் இந்தத் திருநாமம்! கையில் குமரக் கடவுளை ஏந்தியவண்ணம் தாயாய் அருளும் தயாபரி இந்த அம்பிகை. இந்த அம்பிகைக்குத் தேனால் அபிஷேகம் செய்வது இத்தல விசேஷம். நல்ல குரல்வளம் வேண்டுபவர்கள் அன்னைக்குத் தேனால் அபிஷேகம் செய்கிறார்கள்.

குமரகுருபரரைப் பேசவைத்துப் பாடவைத்து அருளியவன் குமரன். அந்தக் குமரனைச் சுமந்து திகழும் அம்பாளுக்கு தேனாபிஷேகம் செய்து, அபிஷேகப் பிரசாதத்தைத் திக்குவாய் உள்ள குழந் தைகளின் நாவில் தடவ, மடைதிறந்த வெள்ளம் போல மழலைகள் பேசுவர் என்பது ஐதிகம்.

இந்தத் தலத்தின் விநாயகருக்குப் பிரளயம் காத்த விநாயகர் என்று பெயர். ஏழு கடல்களும் பொங்கிப் பிரளயம் உண்டானபோது, தேவர்களும் முனிவர்களும் ஈசனைச் சரணடைந்து பூவுலகைக் காக்குமாறு வேண்டிக்கொண்டனர். அதற்கு இசைந்த ஈசன், அந்தப் பொறுப்பை முழுமுதற் கடவுளான விநாயகரிடம் ஒப்படைத்தார். கணபதி, ஏழு கடல்களையும் திருப்புறம்பியத்தில் இருக்கும் கிணற்றில் அடக்கினார். பிரளயத்திலிருந்து காத்து அருளிய கணபதிக்கு அங்கேயே ஓர் ஆலயம் எழுப்பினர். பாய்ந்து வந்த கடல்களிலிருந்து எஞ்சிய நத்தைக் கூடுகளையும், கிளிஞ்சல்களையும் கொண்டு அவருக்குத் திருமேனி செய்தனர்.

சிப்பிகளால் ஆன திருமேனி என்பதால் இந்த விநாயகருக்கு அபிஷேகங்கள் இல்லை. ஆனால், விநாயகர் சதுர்த்தி நாளில் மாலை தொடங்கி காலை வரையிலும் இவருக்குத் தேன் அபிஷேகம் நடைபெறும். அப்படி அபிஷேகிக்கப்படும் தேன் முழுவதையும் விநாயகரின் திருமேனி உறிஞ்சிக் கொள்ளுமாம். அன்று முழுவதும் திருக்கோயில் திறந்தே இருக்கும்.

ஈசன் தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி சனகாதி முனிவர்களுக்கு அக்னி உபதேசம் வழங்கிய தலம் இது. சனகாதி முனிவர்கள் பூஜித்த நான்கு லிங்கங்களும் தலவிருட்சத்துக்கு அருகிலேயே உள்ளன. இந்தத் தட்சிணாமூர்த்தியை வணங்க, மெய்ஞ்ஞானம் பிறக்கும் என்கின்றனர்.

இந்த ஆலயத்தில் பணி செய்யும் ராஜசேகர குருக்களிடம் பேசினோம்.

சாட்சி நாதேஸ்வரர் கோயில்
சாட்சி நாதேஸ்வரர் கோயில்

“குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். வேண்டுவன அனைத்தும் அருளும் கருணா மூர்த்தியாக சாட்சிநாதர் திகழ்கிறார். சாட்சிநாதரே தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி உபதேசம் அருளிய குரு ஸ்தலம் இது. எனவே, இங்கு குரு பரிகாரங்கள் செய்தால் பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்; கல்வி, தொழில், காரிய வெற்றி ஆகியன கிட்டும். இங்குள்ள பிரளயம் காத்த விநாயகரை வணங்க கடல்போல் வரும் துயரும் பனிபோல் மறைந்துவிடும்” என்றார்.

திருப்புறம்பியம் செல்பவர்கள் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் பள்ளிப்படைக் கோயிலையும் தரிசிக்கலாம். தென்னிந்திய வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஓர் ஊர் திருப்புறம்பியம். இங்கு நடந்த பெரும் போருக்கும் போரின் விளைவால் உண்டான பிற்காலச் சோழர் களின் ஏற்றத்துக்கும் சாட்சியாகத் திகழ்கிறது இந்தப் பள்ளிப்படைக் கோயில்.

எப்படி செல்வது: கும்பகோணம் சுவாமி மலை பாதையில், வடக்கில் சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, திருப்புறம்பியம். கும்பகோணத் திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

வள்ளிசேர்ப்பாக்கம்!

அகத்தியருக்காக முருகன், வள்ளியுடன் திருமணக்கோலம் காட்டிய ஊர் ‘வள்ளி சேர்ப்பாக்கம்’. இதுவே நாளடைவில் வளசரவாக்கம் என்றாகிவிட்டது. இவ்வூரின் மேற்கே கோயில் கொண்டுள்ள முருகனின் வலக் காலில் ஆறு விரல்கள் உள்ளன!

- சு. கீதா, சென்னை-91