Published:Updated:

நவகோள்களும் நன்மைகள் அளிக்கும்!

நவகிரகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நவகிரகங்கள்

முத்து. இரத்தினம்

தஞ்சாவூருக்கு நிகரான பெருமையையுடையது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில். இங்கு நவகிரகங்கள், ஒரே கல்லில் வாண சாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளனர். தாமரை வடிவ பீடத்தின் நடுவில் சூரியனும் அதைச் சுற்றி இதழ்கள் வடிவில் இதர கிரகங்களும் அமைந்துள்ளனர். சூரியனின் சாரதி ஏழு குதிரைகள் பூட்டித் தேரை ஓட்டுவது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி - ஞீலிவனநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு நந்தியம்பெருமானுக்கு எதிரே அகல்விளக்கு போன்று ஒன்பது குழிகள் உள்ளன. அந்தக் குழிகளை நவகிரகங்களாகக் கருதுகின்றனர். இந்தக் குழிகளில் விளக்கேற்றி வழிபட்டால், கிரக தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதிகம்.

சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி திருக் கோயிலில், நீலகண்ட விநாயகர் சந்நிதி எதிரே அமைந்துள்ள மணடபத்தின் மேல் விதானத்தில், நவகிரகங்கள் அவரவர் வாகனங்களுடன் அழகாகக் காட்சி தருகின்றனர். அவர்களை அண்ணாந்து பார்த்தே தரிசிக்க இயலும்.

சிவாலயங்களில் மட்டுமே நவகிரக சந்நிதி இருப்பதை அறிவோம். மதுரை கூடலழகர் கோயில், நாகப்பட்டினம் சவுரிராஜ பெருமாள் கோயில், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில், சத்திய மங்கலம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் ஆகிய வைணவத்தலங்களிலும் நவகிரக சந்நிதி அபூர்வமாக அமைந்துள்ளன.

நவகோள்களும் நன்மைகள் அளிக்கும்!

வேலூருக்கு அருகில் வாலாஜாபேட்டையில் இருந்து 5 கி.மீ தூரத்திலுள்ளது வன்னிவேடை அகத்தீஸ்வரர் கோயில். இங்கு வன்னி மரத்தின் கீழ் விநாயகர் சனீஸ்வரர் இருவரும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள்.

வீடு கட்டுதல் முதலான கட்டடப் பணியைத் தொடங்குவோர், அந்தப் பணிகள் தடங்கலின்றி நடக்க, சனிக்கிழமைகளில் 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து சனிபகவானுக்கு மாலையாக அணிவித்து எள் தீபமேற்றி வழிபடுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சனி பகவானிடம் அர்ப்பணித்துவிடுவதாகவும் இனி அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இப்படிச் செய்கின்றனர்.

மயிலாடுதுறை - காரைக்கால் மார்க்கத்தில் உள்ளது நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோயில். இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால் இங்கு நவகிரக சந்நிதி கிடையாது. இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவன் அக்னி சொரூபமாக இருப்பதால் வெப்பத்தைத் தணிக்கும்பொருட்டு அந்தத் தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது, இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும்.

சென்னை - கொல்கத்தா அகன்ற சாலையில் 30-கி.மீ தூரத்தில் உள்ளது பஞ்ஜேஷ்டி அகஸ்தீஸ்வரர் கோயில். இங்கு அம்பாள் ஆனந்தவல்லி சந்நிதியை நோக்கியபடி ஒரு தூணில் நவகிரகங்கள் மேலிருந்து கீழாக நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் உள்ள நவகிரக சந்நிதி, சுவாமி சந்நிதியைவிட ஒரு படி மேலே இருப்பதால் இங்குள்ள நவகிரக நாயகர்களுக்கு விசேஷ சக்தி உண்டு என்றும் இங்குள்ள நவகிரகங்களிடம் வேண்டியது கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ளது பழம் பெருமை வாய்ந்த ஸ்ரீபவானிசங்கரி சமேத ஸ்ரீபவானி ஈஸ்வரர் கோயில். இந்த ஆலயத்தின் ஈசான்ய மூலையில் உள்ள அழகிய மண்டபத்தில், நவகிரக நாயகர்கள் தங்களின் தேவியருடனும், ஆயுதங்கள் ஏந்தியபடியும், தத்தம் வாகனங்களுடனும் காட்சி அளிக்கின்றனர். நடுவில் சூரியபகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சி காணக் கண்கோடி வேண்டும். அழகிய சிலைகளுடன் கூடிய இச்சந்நிதியின் தூண்களில் பன்னிரண்டு ராசி தேவதைகளும் வடிக்கப்பட்டுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz