Published:Updated:

திருநங்கையரைப் போற்றும் நவராத்திரி விழா... கும்பகோணத்தில் நாளை நடைபெறுகிறது!

கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம், நவராத்திரி விழாவை திருநங்கையரைப் போற்றும் விழாவாக ஏற்பாடுசெய்துள்ளனர்.

நவராத்திரி
நவராத்திரி

நவராத்திரி விழா, நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாள்களும் சக்தியின் பல்வேறு வடிவங்களைப் போற்றி வழிபடுவது வழக்கம். கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தோடு அம்மை திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நவராத்திரி!
நவராத்திரி!

கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பாக, இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நவராத்திரி விழாவை திருநங்கையரைப் போற்றும் விழாவாக அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தைச் சேர்ந்த திருவடிக்குடில் சுவாமிகளோடு பேசினோம்.

"சிவபெருமானைத் துதிக்கும்போது, 'உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி' என்று போற்றுகிறோம். இறைவனின் திருவடிவங்களில் முக்கியமானது, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம். இன்றைக்கு சமூகம் நிறைய மாறிவிட்டது. அறிவியல் வளர்ச்சியில் உயர்ந்துகொண்டேயிருக்கிறோம். ஆனால், சக மனிதர்களான திருநங்கையரை மதிக்கும் பண்பில் முன்னேறியிருக்கிறோமா என்றால் அது சந்தேகம்தான். கல்வியில், கலைகளில், சாதனைகளில், பாலின பேதமின்றி அனைவரோடும் அவர்கள் போட்டிபோட்டாலும், இன்றும் சமூகத்தில் சில இடங்களில் அவர்களை எள்ளி நகையாடுவதைக் காண்கிறோம். இந்த நிலையை மாற்ற, சமூகப் போராளிகள் தொடர்ந்து முயன்றுவருகிறார்கள். அவர்களோடு ஆன்மிகவாதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

திருவடிக்குடில் சுவாமிகள்
திருவடிக்குடில் சுவாமிகள்

இதன் ஒரு முயற்சியாகத்தான், நம் திருக்கூட்டம் சார்பில் நவராத்திரிப் பண்டிகையை திருநங்கையரைப் போற்றும் விழாவாகக் கொண்டாட முடிவுசெய்திருக்கிறோம். நாளை (02.10.19), 'ஆற்றல்கொண்ட திருநங்கையரை ஏற்றம் காண வாழ்த்துவோம்' என்னும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். இதில், சாதித்த திருநங்கையர்களை அழைத்து கௌரவிக்க இருக்கிறோம். இந்த நல்முயற்சிக்கு அனைவரின் ஆதரவும் தேவை. இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்" என்றார்.

நவராத்திரியின்போது வரும் அஷ்டமி திதியன்று, கேதார கௌரி விரதமும் தொடங்குகிறது. கேதார கௌரி விரதம் மேற்கொண்டுதான் அன்னை பார்வதி, சிவபெருமானில் ஒரு பாகமாக மாறி, ஈசன், அர்த்தநாரீஸ்வர சொரூபமாகக் காட்சிகொடுத்தார். எனவே, நவராத்திரி விழாவை திருநங்கையரைப் போற்றும் விழாவாகக் கொண்டாடுவது பொருத்தமானது என்கின்றனர் பக்தர்கள்.

அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தநாரீஸ்வரர்

இந்த நிகழ்ச்சி, கும்பகோணம் வட்டிக்குருக்கள் தெருவில் உள்ள திருநாவுக்கரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நாளை நடைபெறவிருக்கிறது.