Published:Updated:

நவராத்திரி நாள் - 8: துர்காஷ்டமி நாளில் வணங்கப்பட வேண்டியவர் துர்கையா, ராஜமாதங்கியா?

நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னை துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். இது மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் எட்டாம் நாளில் துர்க்கையை ‘மகாகௌரி’ என வழிபட வேண்டும்.

ஆணவத்தால் முனிவர்களிடம் சாபம் பெற்ற வரமுனி எருமையாகப் பிறப்பெடுத்து ரம்பன் என்ற அசுரனிடம் சேர்ந்து மகிஷன் என்ற மகாஅசுர சக்தியை ஈன்றது. பிரம்மனிடம் பல வரங்கள் பெற்ற மகிஷாசுரன் சகல ஜீவன்களையும் வாட்டி வதைக்கத் தொடங்கினான். இதனால் அவதியுற்ற தேவர்கள் அம்பிகையை வேண்டினர்.
மகாகௌரி
மகாகௌரி

தேவர்களின் துயர் தீர்க்க முப்பெரும் தேவியரின் அம்சமாக சக்தி தோன்ற, சகலரும் தங்களது படைக்கலங்களை தேவியிடம் ஒப்படைத்தனர். ஈசன் சூலம் தந்தார். திருமால் சக்கரம் தந்தார். இந்திரன் வஜ்ஜிராயுதமும், வாயு வில்லும் அம்பும் கொடுத்தார். இப்படி சகலமும் ஏற்ற அன்னை மகிஷனை சம்ஹாரம் சர்வ அலங்கார பூஷிதையாகப் புறப்பட்டாள். அம்பிகைக்கு உரிய தினமான அஷ்டமியில் நவராத்திரியின் எட்டாம் நாளில் திருமகளின் அம்சமான நரசிம்ஹி என்ற தேவியின் குணமும், துர்கையின் அம்சமாக மகாகௌரியின் வடிவமும் கொண்டு அசுரனை வதைத்தாள் அந்த ஆதிபராசக்தி. அசுரர் வாதம் செய்த பின்னர் சரஸ்வதியின் அம்சமாக ராஜமாதங்கியாக, அழகு கொண்ட சியாமளா தேவியாக அன்னை பீடம் ஏறினாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

சக்தி மகிஷாசுரனை வதம் செய்தது அஷ்டமி நாள் அன்று. தேவர்கள் அம்பிகையை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி நாள் அன்று. மகா சக்தியான ஆதிபராசக்தி மூலஸ்தானம் சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி நாள் அன்று. இந்த 3 நாள்கள்தான் நவராத்திரியின் முக்கிய விழா என்று கொண்டாடப்படுகிறது. இவை சரஸ்வதி தேவியின் ஆராதனைக்கு உரிய நாள்கள் என்று சொல்லப்படுகின்றன.

ராஜமாதங்கி
ராஜமாதங்கி

நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னை துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். இது மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் எட்டாம் நாளில் துர்க்கையை ‘மகாகௌரி’ என வழிபட வேண்டும். நவராத்திரியின் எட்டாம் நாளில் ஈசனால் ஆடப்பட்ட சுத்த தாண்டவ கோலத்திலிருந்து உதித்தவள் மகா கௌரி. இவள் வெண்மையான வடிவம் கொண்ட ஆவேச சக்தி எனப்படுகிறாள்.

வரம் தருவாள் வாராஹி! ஸ்ரீமகா வாராஹி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

நான்கு கரம் கொண்டவள், சூலத்தையும், உடுக்கையையும் தாங்கி, மற்ற இரு கரங்கள் அபய-வரம் தரும் வகையில் உள்ளன. இவளின் வாகனம் வெண்ணிற காளை. கருணையுடன் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இந்த அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும். இந்த எட்டாம் நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் சகல காரிய ஸித்தி கிடைக்கும். எல்லோரையும் வசீகரிக்கும் ஆற்றல் பெருகும். இவள் ஆதார சக்கரங்களில் ஸ்வாதிஷ்டானமாய் இருப்பவள்.

அதுபோலவே மகாலட்சுமியின் அம்சமான நரசிம்ஹி தேவியையும் இந்த நாளில் வழிபட வேண்டும். சப்த மாதரில் ஒருவரான இந்த தேவி துடியான தேவியாக விளங்குபவள். கரும்பு வில்லுடன் அணிமா, மகிமா, லகிமா போன்ற அஷ்ட சக்திகளுடன் போரில் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்த இந்த தேவி அச்சங்களை நீக்கக் கூடியவள். ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் வெளிப்பட்ட நரசிம்ஹரின் சக்தியாகத் திகழ்ந்தவள் நரசிம்ஹி. இதனால் இவளை திருமகளின் வடிவம் என்றும் போற்றுகிறோம்.

துர்காஷ்டமி
துர்காஷ்டமி

அதேபோல் கலைமகளின் அம்சமாக சியாமளா என்றும், ராஜமாதங்கி என்றும் அழைக்கப்படும் தேவியையும் வழிபடலாம். இவளால் கலைத்தேர்ச்சியும் ஞானமும் உண்டாகும் என்கிறார்கள். மதுரை மீனாட்சியம்மன் ராஜமாதங்கியின் அம்சம் என வணங்கப்படுகிறாள். இப்படி நவராத்திரியின் ஒன்பது நாள்களிலும் திருமகள், கலைமகள், மலைமகள் என மூவரின் அம்சத்திலும் ஒவ்வொரு சக்தியர் வணங்கப்படுகிறார்கள். எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் ஆதிசக்திகளை இந்த நவராத்திரி நன்னாளில் பயபக்தியோடு வழிபட சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு.

நவராத்திரி
நவராத்திரி

நவராத்திரி எட்டாம் நாள்:

திதி: அஷ்டமி

அம்பாள்: சியாமளா, நரசிம்ஹி, மகாகௌரி

கன்னியா பூஜை: 9 வயது சிறுமிக்கு துர்கை என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம்: பால் சாதம், மொச்சை சுண்டல், உப்பு உருண்டை, பால் கொழுக்கட்டை, பழங்கள்.

கோலம்: மருதாணிக் கோலம்.

புஷ்பங்கள்: மருதாணிப்பூ, தாமரை, நீலோற்பலம், மருக்கொழுந்து.

இலை: நாயுருவி, மாவிலை, மருதாணி இலை.

பழங்கள்: திராட்சை, வாழை, அன்னாசி, மாதுளை.

வஸ்திரம்: இளஞ்சிவப்பு, ஊதா.

பாடலுக்கான ராகம்: புன்னாகவராளி ராகம்.

ஆபரணம்: கண்ணாடி, காக்கைப்பொன் போன்ற மாலைகள்.

தாம்பூலம்: வெற்றிலை பாக்கோடு ரவிக்கைத் துணி.

எட்டாம் நாளுக்கான பலன்கள்: சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் நம்பிக்கையும் தைரியமும் சேரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு