Published:Updated:

நவராத்திரி நாள் - 9: ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? அதன் தாத்பர்யம் என்ன?!

செயலாற்ற உதவும் கருவிகள் அம்பிகையின் அம்சம் என்பதால் உழவு ஆயுதங்கள், தொழில் கருவிகள், வாகனங்கள் எல்லாம் ஆயுத பூஜையில் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. அறிவை வளர்க்கும் அறிவாயுதங்களான புத்தகங்கள், இசை மற்றும் கலைக்கருவிகள் எல்லாம் சரஸ்வதி பூஜையில் கொண்டாடப்படுகின்றன.

ஆயுதங்கள் இல்லாமல் மனித வளர்ச்சியை, நாகரீகத் தொடர்ச்சியை எண்ணிப் பார்க்கவே முடியாது என்கிறது வரலாறு. மனிதன் கொடுமையான மிருகங்களிடம் இருந்து தப்பிப் பிழைத்து வாழ்ந்தது எல்லாம் ஆயுதங்களின் துணை கொண்டுதான் என்கின்றன உலக வரலாறு. நவீன அறிவியல் வளர்ச்சியும் பொருளாதாரப் பெருக்கங்களும் நடைபெற்றது எல்லாம் ஆயுதங்களின் வளர்ச்சியால்தான் என்பதை நீங்களும் அறிந்து இருக்கலாம். அதேபோல் தான் நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் ஆயுதங்கள் தேவைப்படுகின்றன என்பதை சூசகமாக கடவுளர்களின் துணை கொண்டு புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராஜராஜேஸ்வரி
ஸ்ரீராஜராஜேஸ்வரி

திருமாலுக்கு சக்கரம், முருகனுக்கு வேல், சக்திக்கு சூலம்...இப்படி சகல தேவர்களும் ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருவது, பக்தர்களுக்கு நம்பிக்கை அளிக்கவே என்கின்றன சாஸ்திரங்கள். 'உன்னைக் காக்க நான் ஆயுதம் ஏந்தி இருக்க, நீ என்னை சரண் அடைந்து நிம்மதியாக இரு! அன்பு வழியிலேயே செயல்படு!' என்பதைத்தான் நம் கடவுளர்கள் நமக்கு கூறுகிறார்கள். அழிக்க மட்டுமன்றி ஆக்கவும் ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அறிவாயுதமாக பயன்படுபவை அக்காலத்தில் கல்வெட்டுகள், குகை ஓவியங்கள், ஓலைச்சுவடிகள் தொடங்கி இன்றைய நவீன மொபைல் வரை அனைத்துமே அறிவாயுதங்கள் தான்.

அதைப்போலவே காக்கவும் ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. மருத்துவ உபகரணங்கள், விபத்திலிருந்து காக்கும் கருவிகள் என ஏகப்பட்ட ஆயுதங்கள் இன்றும் நம்மை காத்து வருகின்றன. எனவே ஆயுதங்களின் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், அவற்றைப் பாதுகாக்கவுமே நமக்கு 'ஆயுத பூஜை' என்ற ஐதீக விழா பயன்பட்டது. இது புராணத்தின் வழியே நம்மிடம் நிலை பெற்றும் விட்டது.

சரஸ்வதி
சரஸ்வதி

அசுர சக்திகளை வீழ்த்த ஸ்ரீராஜராஜேஸ்வரியிடம் அனைத்து தெய்வ சக்திகளும் தங்கள் ஆயுதங்களைக் கொடுத்தனர். எட்டு நாள்கள் போருக்குப் பின்னர், தேவி சம்ஹாரங்களை முடித்த பின்னர் 9-ம் நாளில் அந்த ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்தாள். அந்த பேராற்றல் கொண்ட ஆயுதங்களுக்கு, தேவியின் கரம் பட்ட ஆயுதங்களுக்கு தேவர்கள் விழா எடுத்து மகிழ்ந்தனர் என்று புராணங்கள் கூறுகின்றன. இதுவே ஆயுத பூஜை என்று கொண்டாடவும் பட்டது.

அள்ளித் தரப்போகும் குருபகவான் | மேஷ ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 -22 | GuruPeyarchi
செயலாற்ற உதவும் கருவிகள் அம்பிகையின் அம்சம் என்பதால் உழவு ஆயுதங்கள், தொழில் கருவிகள், வாகனங்கள் எல்லாம் ஆயுத பூஜையில் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. அதேபோல் அறிவை வளர்க்கும் அறிவாயுதங்களான புத்தகங்கள், எழுதும் பொருள்கள், இசை மற்றும் கலைக்கருவிகள் எல்லாம் சரஸ்வதி பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை

அம்பிகையும் சரஸ்வதியும் மட்டும் தானா இந்த நாளில் ஆராதிக்கப்படுகிறார்கள். இல்லையே பணம் வைக்கும் பெட்டிகள், மணி பர்ஸுகள், கல்லாப் பெட்டிகள், பணப் பரிவர்த்தனை அட்டைகள் எல்லாம் பூஜையில் வைக்கப்பட்டு அவையும் பெறுக வேண்டும் என்று திருமகளின் தயவையும் இந்நாளில் எல்லோரும் வேண்டிக் கொள்வதும் சகஜம்தானே.

எனவே முப்பெரும் தேவியரின் அம்சமாகத் திகழும் சகலப் பொருள்களும் இன்றைய ஆயுத, சரஸ்வதி பூஜையில் வைக்கப்படுகின்றன. அவற்றுக்கு நன்றி தெரிவிப்பது மட்டுமன்றி, அவை பன்மடங்குகள் பெருகவும் வேண்டிக் கொள்ளும் ஒரு பயனுள்ள விழாவாக இது இருக்கிறது. அதேபோல, இது சாதி, சமய பேதமின்றி எல்லோராலும் கொண்டாடப்படுவதும் ஒரு விசேஷம் எனலாம்.

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை

விஸ்வகர்மா தனது அழகிய படைப்புகளுக்கு உதவிய கருவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஆயுத பூஜையை அபராஜிதா தேவியை எண்ணி அனுஷ்டித்தார் என்று கூறப்படுகிறது. வனவாசம், அஞ்ஞாத வாசத்துக்குப் பிறகு பாண்டவர்கள் தாங்கள் வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களை எடுத்து வழிபட்ட நாளே ஆயுத பூஜை என்றும் கூறப்படுகிறது. இதேபோல் விஜயதசமி நாளில் ராவண வதம் செய்யப் புறப்பட்ட ஸ்ரீராமர் அதற்கு முந்தைய நாளில் ஆயுதங்களை கந்தமான பர்வதத்தில் இந்த நாளில் வைத்து வழிபட்டார் என்றும் கூறப்படுகிறது.

அசோக மாமன்னர் காலத்தில் ஆயுதம் களையும் நாளாக இது அனுஷ்டிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. அதாவது ஆயுதங்களால் உயிர்க் கொலையை தவிர்த்து ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே ஆயுதம் என்ற பிரதிஞை எடுத்துக் கொள்ளும் நாளாக இது இருந்ததாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவராத்திரி ஒன்பதாம் நாள்:

திதி: நவமி

அம்பாள்: சாமுண்டாதேவி, ராஜராஜேஸ்வரி, சுபத்ராதேவி

கன்னியா பூஜை: 10 வயது சிறுமிக்கு சாமுண்டாதேவி என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, பயறுகள் கலந்த சுண்டல், கேசரி, எள் உருண்டை, பணியாரங்கள்.

கோலம்: வாசனைப் பொடி கோலம்.

புஷ்பங்கள்: தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள், கதம்ப மலர்கள்.

இலை: கொன்றை, மாவிலை, வேப்பிலை, நாயுருவி, துளசி.

பழங்கள்: சீத்தாப்பழம், சாத்துக்குடி, வாழை

வஸ்திரம்: பச்சை, வெண்மை பட்டாடைகள்.

பாடலுக்கான ராகம்: வசந்தா ராகம்.

ஆபரணம்: பொன், பஞ்சலோகம், நவமணி போன்ற மாலைகள்.

தாம்பூலம்: வெற்றிலை பாக்கோடு பணம்.

ஒன்பதாம் நாளுக்கான பலன்கள்: வேண்டிய காரியங்கள் நிறைவேறும். சகல சௌபாக்கியங்களும் இல்லத்தில் சேரும்.

ஆயுத பூஜை
ஆயுத பூஜை

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வழிபட வேண்டிய நேரங்கள்:

அக்டோபர் 14, 2021 (புரட்டாசி 28) வியாழக்கிழமை

காலை 6 -7 மணி வரை (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை செய்யலாம்.

காலை 9 - 12 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) - ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்யலாம்.

பகல் 1 - 2 மணி வரை (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை

பிற்பகல் 4 - 6 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) - ஆயுத பூஜை மட்டும்

இரவு 9 - 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) - ஆயுத பூஜை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு