திருக்கதைகள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம்-22

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

ஆச்சியைப் பற்றிப் பேசும்போது எங்கள் வீட்டுக் கொலுவையும் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். நவராத்திரி முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தாலும், ஆச்சியைப் பற்றிய நினைவுகளில் கொலுவும் இரண்டறக் கலந்திருப்பதால், அந்த நினைவுகளைப் பகிர விரும்புகிறேன். கொலு என்பதும் லட்சுமிகடாட்சம்தான். அதைப் பற்றிச் சொல்வது இந்தத் தொடருக்கும் பொருத்தமாக இருக்கும்.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்


எனக்கு விவரம் தெரிந்து, நான் பிறந்ததிலிருந்தே வீட்டில் கொலு பார்த்துதான் வள்ர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் மண் பொம்மைகள்தான். 5 படியாக இருந்தது 7 படியாகி, 9 படியாக வளர்ந்து, 11 ஆகி... நான் வளர வளர கொலுவும் வளர்ந்து, சில நேரங்களில் 13 படிகள் வரை போயிருக்கிறது.

நம் வீட்டுக் கொலு அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. அம்மாவுக்கு அதில் மிகவும் ஆர்வம் என்பதால் பிரமாண்டமாக வைப்பார்கள். 1961-ல் நம் வீட்டுக் கொலுவுக்குச் சாவித்திரி அம்மாவை அழைத்திருந்தோம்.

‘கப்பலோட்டிய தமிழன்’ ஷூட்டிங்கில் இருந்து வந்து கலந்து கொண்ட சாவித்திரி அம்மா, ‘நீங்க வச்ச கொலுவைப் பார்த்த பிறகு, எனக்கும் கொலு வைக்கணும்னு ஆசையா இருக்கு ருக்மிணி’ என்று சொல்லிவிட்டுச் சென்றவர், அவர் வீட்டிலும் பெரிய கொலு வைத்தார். இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது அழகான அந்தக் கொலு. அவருடைய மகள் விஜயசாமுண்டேஸ்வரிக்கு அப்போது 5 வயதிருக்கும். எனக்கு 10 வயது.

லட்சுமி சிவச்சந்திரன்
லட்சுமி சிவச்சந்திரன்

சாவித்திரி அம்மா வீட்டில் வருபவர்களுக்குக் கொடுப்பதற்காக, தங்கத்தால் ஆன தட்டில் தங்கக் குங்குமச் சிமிழ் மற்றும் தங்க சந்தன பேலா வைக்கப்பட்டு, தங்கப் பூக்கூடையில் பூ வைத்திருந்தனர். வெள்ளியில் செய்து தங்க முலாம் பூசியது இல்லைங்க. முழுமையும் தங்கம். 1961-ல் சாவித்திரி அம்மா வீட்டுக் கொலுவின் நிலைமை இது.

அந்தக் காலத்தில் சின்ன பல்புக்குக் கலர் பேப்பர் சுற்றுவதுதான் சீரியல் செட். அந்த சீரியல் லைட்டிங், அது இது என்று அமர்க் களமாக இருந்த அந்தக் கொலுவைப் பார்த்துட்டு வந்ததும் நானும் என் சித்திப் பெண்ணும் ‘நம்ம வீட்டிலும் இந்த லைட் எல்லாம் போடலாமே... ஏன் போடல?’ என மெதுவாகப் பேசிக் கொண்டோம். ஏனென்றால் அப்போதெல்லாம் பெரியவர்களிடம் ‘இது செய்யுங்கோ, அது செய்யுங்கோ’ என்று சொல்லும் உரிமை சிறு பிள்ளைகளான எங்களுக்குக் கிடையாது.

`நாமும் சாவித்திரி அம்மா வீட்ல இருந்த மாதிரி லைட் போடலாமேம்மா? வெறும் விளக்கு மாத்திரம் ஏற்றி வைக்கிறோமே!’ என்று மிக மெதுவாகக் கேட்டதற்கே, “விளக்கு வெளிச்சத்தில் பகவானைப் பார்த்தா போதும்!” என்ற பதில் சுளீரென வரும்.

நவராத்திரி கொலு
நவராத்திரி கொலு

அவருடைய அந்தத் தோரணையால், அதுதான் சரி போல என நானும் விட்டுவிட்டேன். காலங்கள் செல்லச் செல்ல, நாகரிகம் வளர்ந்து நம் வீட்டிலும் சீரியல் செட் வந்துவிட்டது. மண் பொம்மைகள் குறைந்து, காகிதக்கூழ் பொம்மைகள் வர ஆரம்பித்தன. நான் திரைத்துறைக்கு வந்து கொஞ்ச நாட்களிலேயே, கொலுவுக்கு எல்லோரையுமே வெற்றிலைப் பாக்கு வைத்து கூப்பிடுவேன். நவராத்திரி 10 நாட்களும் படப்பிடிப்புக்கு வரமாட்டேன்.

வீட்டில் பூஜைகள் இருக்கும். மொபைல் இல்லாத காலகட்டம். வாயால் அழைத்ததை நினைவு வைத்துக்கொண்டு வருவார்கள். கொலுவுக்கென இன்விடேஷன் அடித்து அழைத்த காலமெல்லாம் உண்டு. என்னவோ இந்த நவராத்திரி இல்லையென்றால் உலகமே இல்லை என்பது போல மிக மிக ‘ஆர்கனைஸ்டு’ஆகச் செய்வோம். எனக்கும் என் சித்திப் பெண் சரஸாவுக்கும் நவராத்திரி என்பது பெரிய திருவிழா. அதீதமாகக் கொண்டாடுவோம்.

நான் கொலு வைக்க ஆரம்பித்த புதிது. 1969 என நினைக்கிறேன். அப்போதுதான் ஒரு முறை, மறக்கமுடியாத அந்த மாமனுஷி... அந்த மகா நடிகை... ஆச்சி மனோரமா கேட்டார்...

“என்ன லக்ஷ்மி.. அது வாங்கணும், இது வாங்கணும்னு சொல்லிட்டிருக்கியே... என்ன விசேஷம்? நாங்கள்லாம் வரக் கூடாதா?” – அவருக்கே உரிய குறும்புப் பார்வையுடனும் அரும்புப் புன்னகையுடனும் கேட்டார்.

“ஐயோ... கொலுவுக்குத்தான் ஆச்சி. நீங்க கண்டிப்பா வாங்கோ” என்று நான் அழைக்க, அவர் வந்தார்.

அன்றிலிருந்து, அவர் இந்த உலகை விட்டுப் போவதற்கு 3 வருடங்கள் முன்பு வரையிலும் ஒரு நவராத்திரி கூட தவறாமல் தொடர்ந்து வந்தவர் ஆச்சி. வராமல் அவர் இருந்ததே இல்லை. அவர் வந்தால் அவருக்காகவே ஒரு தனிக் கூட்டம் வந்துவிடும் என்பதால், அவரை மட்டும் தனியாக விஜயதசமி அன்று அழைப்பேன். ஷூட்டிங் இருக்கிறதோ... வேறு என்ன வேலை இருக்கிறதோ... இரவு 9 மணி ஆனாலும் வந்துவிடுவார்.

என்னைச் செல்லமாக ‘எச்சுமி’ என்று அழைப்பார். அன்பு அதிகமாகும்போது, ‘எச்சுமி குட்டி’ என்பார். ஏனெனில், அவரை நான் முதன்முதலில் பார்க்கும்போது எனக்கு 10 வயதுதான். அப்போதிலிருந்து பார்த்துப் பழகி வந்ததால், என் மேல் அதிக பிரியம். கொலுவுக்கு வந்தால், கீழே பாயில் அமர்ந்து, என் மூத்த மகளை மடியில் உட்கார வைத்துக் கொஞ்சிப் பேசி மகிழ்வார்.

அப்போதெல்லாம் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று கூடத் தோன்றியதில்லை. ஒரு குழந்தை மாதிரி, நவராத்திரி சமயத்தில் வரும் ஒவ்வொரு தாம்பூலப் பரிசையும் பார்த்து, ரசித்து, அதைக் கொண்டாடி... அதைப் பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

என் அம்மா தன் கைப்பட செய்த பொம்மைகள் இருக்கின்றன. மீனாட்சிக் கல்யாணம் செட் பொம்மைகள் அம்மா செய்திருக்கிறார். நம் வீட்டுக் கொலுவுக்கு ரெகுலராக வருபவர்களுக்கு அந்த பொம்மைகள் பற்றித் தெரியும். முன்பெல்லாம் ‘டால் மேக்கிங்’ என்று வகுப்புகளுக்குப் போய் கற்றுக்கொண்டு பொம்மைகள் செய் வார்கள். ஆதிசங்கரர் போன்ற குருமார்களின் உருவ பொம்மைகள் எல்லாம் செய்திருந்தார் அம்மா.

“இவ்வளவு அழகாகப் பண்ணியிருக்காங்களே! நீ அம்மா கையால் எல்லா பொம்மைகளையுமே பண்ணி வாங்கி கொலுவில் வெச்சிடு. காலத்துக்கும் அவங்க பேர் சொல்லும். அம்மா ஞாபகமா எப்பவுமே இருக்கும்” என்று ஆச்சி சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவில் ஒலிக்கின்றன.

“ருக்மிணி அம்மா! நீங்க எல்லாமே எச்சுமிக்குப் பண்ணிக் கொடுத்துங்கம்மா” என்று உரிமையோடு அம்மாவிடம் சொன்ன அந்த அன்பு... அளப்பரியது.

ஒரு குழந்தையின் குதூகலத்தோடு ஒவ்வொரு பொம்மையாக கிட்டே நின்று பார்த்து ரசிப்பார். ‘கண்ணு பாரு எச்சுமி.. என்ன அழகு... கடல் மாதிரி’ என்று ஒவ்வொரு பொம்மைக்கும் கமென்ட் வேறு! கூடவே என் குழந்தைகளையும் தூக்கிக்கொள்வார். “பாட்டி பண்ணிருக்காங்க பார்த்தியா. இதெல்லாம் நீயும் பண்ணனும்” என்று கொஞ்சிக் கூத்தாடுவார்.

அவருக்கு மட்டும் ஒவ்வொரு வருஷமும் எளிமையான ஒரு புடவை வைத்து, வெற்றிலைப் பாக்கு கொடுப்பேன். எல்லோருக்கும் ரவிக்கைத் துணிதான். ஆனால் ஆச்சி ஸ்பெஷல் இல்லையா! இனிமேல் இன்னொரு ஆச்சி வரமாட்டார். இன்றும் நவராத்திரி வரும்போது, `ஆச்சி, வந்து வெத்தல பாக்கு வாங்கிட்டுப் போயிடுங்க!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். கொலு வந்தாலே அவர் நினைப்பும் கூட வரும்.

கடைசி வரை போய்ப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவர் ஒரு பெரிய நடிகை என்பதால் மட்டுமல்ல, ஒரு நல்ல மனுஷி! மதியம் தூக்கம் வந்தால் ‘சட்’டென்று தரையில் படுத்துவிடுவார். யார் வீட்டுக்குப் போனாலும் சகஜமாகப் பழகுவார். ரயில் பயணத்தின்போது ரசிகர்கள் யாராவது பேசினால் மிக சகஜமாகப் பேசிப் பழகுவார். நகைச்சுவை உணர்வு இயல்பிலேயே மிகுந்தவர். யார் மனதையும் நோகடிக்காமல், மிகவும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்பவர். மிக மிக எளிமையான மனுஷி! துளிகூட அகந்தையே இல்லாமல், ‘இப்படித்தான் வாழணும்’ என்று வாழ்ந்து காட்டிய ஒற்றைத் தாய்!

அகந்தை எந்தக் காலகட்டத்திலும் வரக்கூடாது என்பதற்கு எனக்குக் குருவே ஆச்சிதான். அவர் வாழ்க்கைதான் எனக்குப் பாடம்!

-கடாட்சம் பெருகும்...ராம நாமம்!

‘ராம நாமத்தை ஒருமுறை கூறுவது, மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கூறுவதற்குச் சமம்’ என்று பார்வதி தேவிக்கு சிவபெருமான் அருளியதாகக் கூறுகிறது பாரதம்.

காசியில் உயிர் விடும் ஜீவன்களின் காதில், தாரக மந்திரமான ராம நாமத்தை ஓதி, அவர்களுக்கு மோட்ச கதி அளிப்பதாக நம்பிக்கை. ஓர் அனுபவத்தின் மூலம் இதை மெய் என்று உணர்ந்ததாக ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்.

ஒன்பது கோடி முறை ராம நாமம் ஜபம் செய்து துளசிதாசரும், திருவையாறு தியாகப்பிரம்மமும் ராமனை நேரில் தரிசித்தனர். கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தில் போதேந்திர சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்றும் ராம நாமம் ஒலிப்பதைக் கேட்கலாம். நாமும் ஜகம் புகழும் ராம நாமத்தை ஜபித்து மேன்மையுறுவோம்.

- ஆர்.கண்ணன், சென்னை-61