Published:Updated:

அபயம் அளிப்பாள் தேவி!

மகிஷாசுரமர்த்தினி அவதாரம்
பிரீமியம் ஸ்டோரி
மகிஷாசுரமர்த்தினி அவதாரம்

மகிஷாசுரமர்த்தினி அவதாரம்

அபயம் அளிப்பாள் தேவி!

மகிஷாசுரமர்த்தினி அவதாரம்

Published:Updated:
மகிஷாசுரமர்த்தினி அவதாரம்
பிரீமியம் ஸ்டோரி
மகிஷாசுரமர்த்தினி அவதாரம்

வரமுனி என்றொரு முனிவர் இருந்தார். மிதமிஞ்சிய அவரது கர்வத்தின் காரணமாக, கடும் சாபம் பெற்றார். அதன் விளைவு, முனிவர் மகிஷனாக மாறினார். அகில உலகங்களையும் துன்புறுத் தினான் மகிஷன். தேவலோகமும் அவனுக்கு வசப்பட்டது.

தேவேந்திரன் மும்மூர்த்தியரைச் சரணடைந்தான். அவர்களின் தெய்வ சக்திகள் ஒன்றுகூடி உருவானவளே துர்காதேவி. இந்த அன்னை தன்னுடைய திருக்கரங்களில்... ஈசனின் சூலம், விஷ்ணு வின் சக்ராயுதம், பிரம்மனின் கமண்டலம், இந்திரனின் வஜ்ராயுதம், அக்னி-வருணன் ஆகியோரின் சக்தி, வாயு பகவானின் வில், ஐராவதத்தின் மணி, எமதருமனின் தண்டம், நிருதி தேவனின் பாசம், காலனின் கத்தி-கேடயம் ஆகியவற்றை ஏந்தி நின்றாள்.

சமுத்திர தேவன் தாமரை மலரையும், குபேரன் பாணங்கள் நிறைந்த பாத்திரத்தையும், ஹிமவான்- சக்தி மிக்க சிம்மத்தை வாகனமாகவும், சூரியதேவன் - தேக காந்தியையும், இன்னும் பிற தேவர்கள் பல்வேறு ஆடை-ஆபரணங்களையும் அளித்ததால், சர்வலங்கார நாயகியாய்த் திகழ்ந்தாள் துர்கை.

மகிஷன் பெற்றிருந்த வரத்தின்படி, அவன் எந்தப் பெண்ணை மோகிக்கிறானோ, அவளால் அவனுக்கு மரணம் நிகழும். துர்கை அம்மன் அசுரனை அழிக்க அவனைத் தேடிச் சென்றாள். அவளது அழகைக் கண்டு மோகித்தான் மகிஷன்; தன்னை மணக்கும்படி வேண்டினான். ‘யுத்தத்தில் என்னை ஜெயித்தால், உன்னை மணக்கிறேன்’ என நிபந்தனை விதித்தாள் தேவி.

யுத்தம் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நிகழ்ந்த யுத்தத்தின் முடிவில், மகிஷாசுரன் கொல்லப்பட்டான். தேவர்களும் ரிஷிகளும் அம்பிகையின் மீது பூமாரி பொழிந்தனர். தேவி துர்கையின் வெற்றி யைக் கொண்டாடிய திருநாளே விஜயதசமி. இந்த நன்னாளில் அன்னையை வழிபட்டு தொடங்கப்படும் நற்காரியங்கள் மாபெரும் வெற்றி பெறும்.

ஒன்பது சக்திகள்!

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளைத் தியானித்து வழிபட வேண்டும். முதல் நாள்- குமாரி; இரண்டாம் நாள்- திரிமூர்த்தி; மூன்றாம் நாள் - கல்யாணீ; நான்காம் நாள் - ரோகிணி; ஐந்தாம் நாள்- காளிகா; ஆறாம் நாள் - சண்டிகா; ஏழாம் நாள் - ஸாம்பவி; எட்டாம் நாள்- துர்கா; ஒன்பதாம் நாள் - ஸுபத்ராவாக அம்பிகையை வழிபட வேண்டும்.

ஒன்பது நாள்களும் மலர் மாலைகள் சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், புளியோதரை முதலான சித்ரான்னங்கள் நைவேத்தியம் செய்து, வணங்கி வழிபடலாம்.

பிறந்த வீட்டுக்கு வரும் துர்கை!

பாரதம் முழுவதும், நவராத்திரி கொண்டாடப்படுகிறது. தென் னகத்தில், முப்பெருந்தேவியரின் விழா. வடநாட்டில், ராம்லீலா. வடகிழக்கு மாநிலங்களில், துர்கா பூஜை. இவை யாவுமே, ஒவ்வொரு வகையில் துன்பத்தை நீக்கி, வெற்றியை நல்கும் திருவிழா!

வங்காளியரின் துர்கா பூஜையில், அற்புதமான முறையன்று உண்டு. அவர்களைப் பொறுத்தவரை, துர்கை, அவர்கள் வீட்டுப் பெண். திருமணமாகிக் கணவன் வீடு சென்றுவிட்ட அவள், ஆண்டுக்கு ஒருமுறை, பிறந்தகம் வரும் காலமே நவராத்திரி.

பிறந்த வீடு வரும் மகளை வரவேற்க, வீட்டையும் தோட்டம் இருப்பவர்கள் அங்குள்ள மரம், செடி-கொடிகளையும் அலங்கரிப் பார்கள்.ஏனெனில், அவை அவள் வளர்த்த மரங்கள். பனி மலையில் இருந்து வருபவள், வீட்டுத் தோட்டத்தில், மரத் தடியில் ஓரிரவு தங்குவாள். பின்னரே வீட்டுக்குள் வருவாள். அவளை வரவேற்றுப் பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி... துர்கா பூஜையின் நிறைவில், துர்கா விசர்ஜனம் நடைபெறும். துர்கையின் படிமங்களைக் கடலில் சேர்ப்பார்கள். அவள் மீண்டும் கணவனின் இல்லமான கயிலைக்குச் செல்வதாக ஐதீகம்.

சிவ தாண்டவமும் நவ துர்கைகளும்!

சிவபெருமானின் தாண்டவ மகிமைகளைச் சொல்லும் ஞான நூல்கள், அவரின் ஒன்பது வகை தாண்டவத்தை விவரிக்கின்றன. அந்தத் தாண்டவங்கலில் இருந்து நவதுர்கைகள் தோன்றியதாகவும் விளக்குகின்றன.

ஆனந்த தாண்டவம்: வலக் காலை ஊன்றி, இடக் காலைத் தூக்கி சிவனார் ஆடிய இந்தத் தாண்டவத்தின்போது, ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவள் சைலபுத்ரி.

சந்தியா தாண்டவம்: பகலும் இரவும் சந்திக்கும் வேளையில், இடக் கால் விரலால் சிவனார் இடும் கோலம் ஸப்த ஒலிக்கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா.

திரிபுர தாண்டவம்: இந்தத் தாண்டவத்தின்போது ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப்பட்டது, அஷ்டவகைக் கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.

ஊர்த்துவ தாண்டவம்: பிரணவக் கோலம் காட்டிய இந்தத் தாண்டவத்தில் உதித்தவள், ஆடிய இந்த பிரணவக் கோலத்தில் இருந்து தோன்றியவள் சந்த்ரகாந்தாதேவி.

புஜங்க தாண்டவம்: ஆலகால விஷத்தை அருந்தி, அதைத் தன் கண்டத்தில் இருக்கச் செய்த சிவனார் நீலகண்டராக புஜங்க தாண்ட்வம் ஆடிட, அப்போது தோன்றியவள் ஸ்கந்தமாதா.

முனி தாண்டவம்: பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய ஆட்டம். அப்போது நெற்றிக் கண்ணில் தோன்றியவள் காத்யாயினி.

பூத தாண்டவம்: கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம். இந்தக் கோலத்தில் தோன்றியவள் காலராத்திரி.

சுத்த தாண்டவம்: தண்டகாரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டம். இதில் தோன்றியவள் மகாகௌரி.

சிருங்கார தாண்டவம்: நவ ரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம்; இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் சித்திராத்திரி.

தொகுப்பு: பி.சந்திரமெளலி