Published:Updated:

மங்கலங்கள் அருளும் நவராத்திரி!

நவராத்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
நவராத்திரி

- சந்திரமெளலி

மங்கலங்கள் அருளும் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது மரபு. இதனால் அம்பிகை மனம் மகிழ்ந்து நம் இல்லத்தில் சகல சுபிட்சங்களையும் நிறையச் செய்வாள். மட்டுமன்றி, நவராத்திரி வழிபாடு செய்யும் வீடுகளுக்கு அம்பாளே நேரில் வருவாள் என்பது நம்பிக்கை. ஆகவே உரிய துதிப்பாடல்கள் பாடி, விசேஷ நைவேத்தியங்கள் சமர்ப்பித்து அம்பாளை வரவேற்போம்; வரம் பெறுவோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதல் நாள்: அசுரர்களாகிய மது - கைடபரை சம்ஹரிக்க உதவிய அம்பிகையை, துர்கையாக அலங்கரிக்க வேண்டும்.

நவராத்திரி நாள்களில் ஒன்பது விதமான பெண்குழந்தைகளை தேவியாக பாவித்து பூஜிக்க வேண்டும் என்கிறது தேவி பாகவதம்.இந்தக் குழந்தைகள், 2 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வகையில் முதல் நாளன்று 2 வயது குழந்தையை ‘குமாரி’யாக பாவித்து வணங்க வேண்டும். இதனால் ஆயுளும் செல்வமும் பெருகும். முதல் நாளன்று செவ்வரளி, சாமந்திப் பூக்களால் தேவியை அர்ச்சித்து வணங்கலாம். நைவேத்தியமாக காலை எலுமிச்சை சாதமும் மாலை பாசிப்பயறு சுண்டலும் நைவேத்தியம் செய்யலாம்.

2-ம் நாள்: மகிஷாசுரனை வதைக்கப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரியின் வடிவில் அலங்கரிப்பர். இந்த நாளில் 3 வயதுள்ள பெண் குழந்தையை, ‘திரிமூர்த்தி’யாக பாவித்து வழிபடுவது நலம். இதனால் தன-தான்யங்கள் பெருகும். அம்பாளுக்குச் சிவப்பு நிறக் கொன்றை உகந்தது. காலையில் எள்ளு சாதமும் மாலை மொச்சை சுண்டலும் நைவேத்தியம் செய்யலாம்.

3-ம் நாள்: மகிஷாசுர வதம் செய்த கோலத்தில் அம்பிகையை அலங்கரித்தும் தியானித்தும் வணங்கலாம். இந்தக் கோலத்தில் இருக்கும் தேவியை கல்யாணி என்றும் சொல்வர். 4 வயதுள்ள பெண் குழந்தையை ‘கல்யாணி’ என்ற திருநாமத்தால் வழிபட வேண்டும். இதனால் வித்தைகளில் வெற்றி, அரச மரியாதை உண்டாகும். செம்பருத்தி, தாமரை மலர்கள் அர்ப்பணித்தும், காலையில் தயிர் சாதமும் மாலையில் காராமணி சுண்டலும் நைவேத்தியம் செய்தும் வணங்குங்கள்.

மங்கலங்கள் அருளும் நவராத்திரி!

4-ம் நாள்: ஜயதுர்கை திருக்கோலத்தில் அலங்கரித்து வழிபடவும். இவளை, ரோகிணி என்பர். இன்று ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை, ‘ரோகிணி’ என்ற திருநாமத்துடன் வழிபட வேண்டும். இதனால் ரோகங்கள் நீங்கும். இந்த நாளில் செந்தாமரை கொண்டு அம்மன் வழிபாடுகளைச் செய்யலாம். காலையில் சர்க்கரைப் பொங்கலும் மாலையில் பட்டாணிச் சுண்டலும் சமர்ப்பிக்கலாம்.

5-ம் நாள் : அமர்ந்த கோலத்தில் இருப்பது போல் அம்பாளை அலங்காரம் செய்வர். இன்று 6 வயதுள்ள பெண் குழந்தையை, ‘காளிகா’ என்ற திருநாமத்தில் அழைத்து வழிபட வேண்டும். இதனால் சத்ரு பயம் நீங்கும். இந்நாளில் செவ்வரளி மலர்களைச் சமர்ப்பித்து வழிபடலாம். காலையில் பால் அன்னம், மாலையில் காய்கறிகள் கலந்த சுண்டல் படைக்கலாம்.

6-ம் நாள்: சர்ப்பராஜ (பாம்பு) ஆசனத்தில் சண்டிகாதேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் அலங்கரிப்பர். இந்த தினத்தில் ஏழு வயதுள்ள பெண் குழந்தையை, ‘சண்டிகா’ எனும் திருநாமத்துடன் வழிபடுவதால் செல்வம் சேரும். செந்தாமரை, செம்பருத்தி, ரோஜா ஆகிய மலர்களைச் சமர்ப்பிக்கலாம். நைவேத்தியம்: காலையில் கற்கண்டு சாதம், மாலையில் கொண்டைக்கடலைச் சுண்டல்.

7-ம் நாள்: தேவியை, தங்கமயமான பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் சாம்பவியாக அலங்கரிக்க வேண்டும். இன்று 8 வயதுள்ள பெண் குழந்தையை, சாம்பவியாக பூஜிக்க வேண்டும். இதனால் அரச போகம் கிடைக்கும். மல்லிகையால் அர்ச்சித்து அம்பாளை வழிபடலாம். நைவேத்தியம்: காலையில் வெண்பொங்கல்; மாலையில் கடலைப்பருப்பு சுண்டல்.

8-ம் நாள்: ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும். 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க, பெரும் வல்லமைகள் கிடைக்கும். முல்லை மலர்களால் வழிபடலாம். நைவேத்தியம்: காலையில் தேங்காய் சாதம்; மாலையில் கொண்டக் கடலைச் சுண்டல்.

மங்கலங்கள் அருளும் நவராத்திரி!

9-ம் நாள்: காமேஸ்வரி எனும் சிவசக்தி கோலத்தில் அம்பாளை வழிபடுவர். இன்று 10 வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். இதன் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று அடுக்கு மல்லி, நந்தியாவட்டை மலர்களைச் சமர்ப்பித்து வழிபடலாம். நைவேத்தியம்: காலையில் வெல்லப் புட்டு; மாலையில் பாசிப்பருப்பு சுண்டல் சமர்ப்பிக்கலாம்.

10-ம் நாளான விஜயதசமி அன்று ஆதிபராசக்தியாக - ராஜராஜேஸ்வரியாக அம்பாளை தியானித்து, சித்ரான்னங்கள் படைத்து, வாசனை மலர்களைச் சமர்ப்பித்து வழிபட்டு அருள் பெறலாம்.