Published:Updated:

நவராத்திரி நாள் - 3: நன்மைகள் அருளும் நவராத்திரியில் பூஜிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நவராத்திரி நாள்களில் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக சிறு பெண்களை தேவியாக பாவித்து வழிபடுதல் கூடுதல் நன்மை அளிக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆலயம்தோறும் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் 10 நாள்கள் அம்பிகைக்கு வீடுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் காலம் என்றால் அது நவராத்திரி வைபவம்தான் எனலாம்.

நவராத்திரி விரத மகிமை உணர்ந்த ஈசன், அம்பிகையின் துணையோடு திரிபுரம் எரித்தார் என்று தேவியின் புகழ் பாடும் நூல்கள் கூறுகின்றன. திருமால் மது - கைடபர்களை அழிக்க, நவராத்திரி விரதம் இருந்து ஆதிபராசக்தியின் அருளைப் பெற்று வதம் செய்தார் எனவும் புராணங்கள் சொல்கின்றன. திருப்பதி சீனிவாச பெருமாளை கரம் பற்ற எண்ணிய அலமேலு மங்கைத் தாயார் இந்த நவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றார் என்கின்றன புராணங்கள்.

நவராத்திரி விரதம்
நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம் இருந்தே இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராமரும், பஞ்ச பாண்டவர்களும் இந்த நவராத்திரி விரதம் இருந்ததையும் புராணங்கள் கூறுகின்றன. ஆங்கரீஸ முனிவரே முதன் முதலில் மண்ணுலகில் நவராத்திரி பூஜையைத் தொடங்கி வைத்து பலருக்கும் நன்மைகள் கிடைக்க வழி செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.

நவ என்றால் ஒன்பது ராத்ரம் என்றால் மங்கலம். ஒன்பது மங்கலகரமான மாலை வேளைகளில் முறையே அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் தொழுதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை ஆன்மிக நூல்கள் விளக்குகின்றன. அவை.

நவராத்திரி முதல் நாள்: நறுமண மலர்களால் துர்கையை வழிபட்டால் ஜகத் ஜனனியான தேவி பராசக்தி நமது இல்லங்களில் கொலு வீற்றிருப்பாள்.

நவராத்திரி இரண்டாம் நாள்: அம்பிகைக்கு ஆபரணங்களை அணிவித்து வழிபட்டால், நீங்காத புகழை வழங்குவாள் எனப்படுகிறது.

நவராத்திரி மூன்றாம் நாள்: இசையோடு அவளைத் துதித்தால் இனிமையான வாழ்வை அருளுவாள் என்று சொல்லப்படுகிறது.

அம்பிகை
அம்பிகை

நவராத்திரி நான்காம் நாள்: இதுவரை அம்பிகையை வழிபட்ட நாம், அடுத்து வரும் மூன்று நாள்களும் மகாலட்சுமியை வணங்க வேண்டும். நான்காம் நாளில் லட்சுமியை நறுமணம் மிக்க தூப தீபங்களோடு வணங்க வேண்டும். இதனால் நிலையான செல்வவளத்தை வழங்குவாள் எனப்படுகிறது.

நவராத்திரி ஐந்தாம் நாள்: திருமகளை மங்கல நாண், தாம்பூலம் சமர்ப்பித்து வணங்க சகல செளபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும் என்கிறார்கள்.

நவராத்திரி நாள் - 2: கொலு வைப்பதன் காரணம் என்ன? அதன் பின்னிருக்கும் தாத்பர்யம் என்ன?

நவராத்திரி ஆறாம் நாள்: சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபட்டால் திருமகள் பதவி யோகங்களை வழங்குவாள்.

நவராத்திரி ஏழாம் நாள்: இதுவரை திருமகளை வணங்கிய நாம், இனி வரும் மூன்று நாள்களும் கலைமகளை வணங்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். நாத ஸ்வரூபமாக எழுந்தருளும் சரஸ்வதியை ஸ்லோகங்கள் சொல்லி வழிபட சொல்வாக்கையும் செல்வாக்கையும் அருளுவாள் என்கின்றன சாஸ்திரங்கள்.

நவராத்திரி எட்டாம் நாள்: ஸ்தோத்திர புத்தகங்களை வழங்கி வாணியை வணங்கினால் சகல கலைகளிலும் தேர்ச்சி அளிப்பாள்.

நவராத்திரி ஒன்பதாம் நாள்: நியாயப் பிரியை எனப் போற்றப்படும் கலைமகளை தானங்கள் அளித்து வழிபட்டால் எல்லா சபைகளிலும் முந்தியிருக்கச் செய்யும் யோகத்தை வழங்குவாள் என்கின்றன ஞான நூல்கள்.

பத்தாவது நாள் விஜயதசமி: விஜயம் என்றால் வெற்றி. இந்த நாளில் முப்பெரும் தேவிகளையும் ஒரு சேர சகல உபசாரங்களுடன் வணங்கினால் அந்த வீட்டில் எந்த தீமையும் அணுகாமல் நன்மைகள் நிறைந்து விளங்கும் திருமனையாக மாற்றுவார்கள் என்பது ஐதீகம்.

நவராத்திரி பூஜை
நவராத்திரி பூஜை

நவராத்திரி நாள்களில் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக சிறு பெண்களை தேவியாக பாவித்து வழிபடுதல் கூடுதல் நன்மை அளிக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். சிறு பெண்களை முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா என்ற திருநாமங்களால் அலங்கரித்து அர்ச்சித்து வழிபட வேண்டும்.

ஒன்பது நாளும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அதாவது ஆயுத பூஜையன்று முழு உபவாசம் இருந்து அன்று மாலை பூஜைக்குப் பிறகு உணவு எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சிறப்பாக மறுநாள் விஜயதசமி அன்றும் காலை ஒன்பது மணிக்கு முன் விரதம் முடித்து பாரணை செய்யலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு