Published:Updated:

நவராத்திரி நாள் - 4: நலமே அருளும் நவராத்திரியின் நான்காம் நாள் வைபவ மகத்துவங்கள்!

நவராத்திரி நான்காம் நாள்: இந்த நவராத்திரி நான்காம் நாளுக்கு உரியவளாக கூஷ்மாண்டா இருக்கிறாள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கூஷ்மாண்டா என்றால் அகிலத்தைப் படைத்தவள் என்று அர்த்தம்.

ஒன்பது நாள்கள் வழிபட்டாலும் நமக்கு அலுக்கவோ சலிக்கவோ செய்யாத அற்புத வழிபாடு, நவராத்திரி வைபவம் தான். நவராத்திரியின் தொடக்கமான மூன்று நாள்களில் அம்பிகை மாஹேஸ்வரி, கௌமாரீ, மகாதுர்கை என்ற பெயர்களில் சக்தியாகவும், அடுத்த மூன்று நாள்களில் ஸ்ரீமஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என்ற திருநாமங்களில் திருமகளையும் தொழுவோம். இறுதியான மூன்று நாள்களில் ஸ்ரீசரஸ்வதி, காயத்ரீ, சாரதா என்ற திருநாமங்களில் கலைமகளும் பூஜிக்கப்படுகிறாள் என்பது ஐதீகம். இது இச்சா, கிரியா, ஞான சக்திகளை வழிபடும் ஐதீகம் என்றே ஞானிகளால் கூறப்படுகிறது.
ஸ்ரீமஹாலட்சுமி
ஸ்ரீமஹாலட்சுமி

புராண காலத்தில் இருந்தே நவராத்திரி வழிபாடு நம்மிடையே இருந்தாலும் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் வீரத்தை மக்களிடையே விதைக்க இந்த விழா பயன்பட்டது. குறிப்பாக திருமலை நாயக்க மன்னர் காலத்தில் இந்த விழா தமிழகம் எங்கும் பரவியது. தனித்த பூஜை என்பது அன்றாட வழக்கமாய் நம்மிடையே இருந்தபோது அன்பர்கள் கூடி வீட்டில் வழிபடும் சத்சங்கமமாய் இந்த விழாவே முதலில் தொடங்கி உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அண்டை வீட்டு உறவுகளைப் பேணவும், உற்றார் உறவினர்களின் ஆசியைப் பெறவும் உருவான சமூகத் திருவிழா இது எனலாம்.

திருமகள்
திருமகள்

பாற்கடலில் உதித்து பரந்தாமனை அடைந்த மகாலட்சுமி சகல ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதியாகக் கொண்டாடப்படுபவள். இவளை நவராத்திரி நாளில் குறிப்பாக நான்காம் நாளில் வழிபட செல்வவளம் கூடும் என்கிறார்கள் பெரியோர்கள். அன்னை ஆதிபராசக்தி தனது விஸ்வரூப காட்சியில் தன்னிலிருந்து தன்னைப் போலவே இரு தேவிகளை உருவாக்கினார். அவர்களை தனது பணிக்குத் துணையாக வைத்துக் கொண்டாள். சக்தியின் இடது பாகத்திலிருந்து உருவானவள் ரமாதேவி, வலது பாகத்திலிருந்து உருவானவள் ராதாதேவி.

ரமா என்றால் அழகு என்று பொருள். ரமாதேவியை மகாலட்சுமி என்று அழைத்து, அவளை மகாவிஷ்ணுவின் மனைவியாக ஒப்படைத்தார் ஆதிபராசக்தி. மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி என்று தேவி பாகவதத்தில் கூறப்டப்படவில்லை. மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகச் சொல்லப்படுகிறது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான சுவர்க்க லட்சுமியும் தேவலோகத்தை விட்டு மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். அவளே மீண்டும் பாற்கடலில் உதித்து மகாலட்சுமி ஆனாள் என்று கூறப்படுகிறது. திருமகள் அன்னை சக்தியின் சம்ஹாரத்துக்கு உதவியாக சிங்க வாகனம் ஏறி போருக்குப் புறப்பட்ட நாளே நவராத்திரியின் நான்காம் நாள் எனப்படுகிறது.

அதேபோல் இந்த நவராத்திரி நான்காம் நாளுக்கு உரியவளாக கூஷ்மாண்டா இருக்கிறாள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கூஷ்மாண்டா என்றால் அகிலத்தைப் படைத்தவள் என்று அர்த்தம். அஷ்டபுஜம் கொண்ட இவளின் வாகனம் சிம்மம். தாமரை, வில், அம்பு, ஜபமாலை, கமண்டலம், சக்கரம், தண்டாயுதம், அதிர்ஷ்ட கலசம் தாங்கியவளாக இருக்கிறாள்.

அன்னை மகாலட்சுமி
அன்னை மகாலட்சுமி

அளவில்லாதப் பேரழகும் ஆற்றலும் கொண்ட இவளை வணங்க பாவத்தை அழித்து, இன்பத்தை அளிக்கக் கூடியவள். கூஷ்மாண்டாவின் கரத்தில் இருக்கும் அதிர்ஷ்ட கலசம் நவ நிதியும் அஷ்ட ஸித்தியும் அளிக்கக் கூடியது. நம் உடலில் அனாஹத சக்கரத்தில் அமர்ந்து ஆற்றலை அளிக்கும் இந்த தேவியை வழிபட உற்சாகமும் ஆற்றலும் பிறக்கும் என்பார்கள்.

இந்த நவராத்திரி நான்காம் நாளில் வைஷ்ணவி, மகாகௌரி வடிவிலும் அன்னை மகாலட்சுமியை வழிபடும் வழக்கம் உள்ளது.

நிம்மதியும் முன்னேற்றமும் அருளும் ஸ்ரீமகா வாராஹி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவராத்திரி நான்காம் நாளான 10-10-2021 அன்று அனுஷ்டிக்க வேண்டிய பூஜை முறைகள்:

திதி: சதுர்த்தி.

ரூபம்: சிம்ம வாகனத்தில் வெற்றி திருக்கோலமாக மகாலட்சுமியை எழுந்தருளச் செய்யலாம்.

கன்னியா பூஜை: 5 வயது சிறுமிக்கு ரோகிணி என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம்: ததியன்னம், பால் பாயாசம், அவல் பொரி, கற்கண்டு பொங்கல், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், அதிரசம்.

கோலம்: அட்சதை கோலம்.

புஷ்பங்கள்: மருக்கொழுந்து, செந்தாமரை, ஜாதி, ரோஜாப் பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

இலை: துளசி, கதிர்பச்சை எனும் பத்ரம்.

பழங்கள்: கொய்யா, இலந்தை.

வஸ்திரம்: சிவப்பு, கருநீலப் பட்டாடை

பாடலுக்கான ராகம்: பைரவி.

ஆபரணம்: கஸ்தூரி மஞ்சள், முத்து போன்ற மாலைகள்.

தாம்பூலம்: வெற்றிலை பாக்கோடு விரலி மஞ்சள்.

நான்காம் நாளுக்கான பலன்கள்: மாங்கல்ய பலம் கூடும். திருமண வரன் கைகூடும்.

நவராத்திரி விரதம்
நவராத்திரி விரதம்
இந்த நான்காம் நாளில் கொலுவில் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், செல்வத்தைக் குறிக்கும் மங்கலப் பொருள்களை வைத்து அலங்கரிக்கலாம். துளசியை நட்டு வளர்க்கத் தொடங்கலாம். பழங்கள் தானம் அளிக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. நவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்போருக்கு விரும்பியது ஈடேறும்; வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு