Published:Updated:

நவராத்திரி நாள் - 5: பெண்கள் கொண்டாடும் விழா மட்டுமல்ல, பெண்மையைக் கொண்டாடும் விழாவே நவராத்திரி!

நவராத்திரி நாள் - 5: 'எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்' என்கிறது தேவி மகாத்மியம்.

ஒரு பெண் தன்னை வெற்றி பெற்று விட முடியுமா என்று இறுமாந்து இருந்த அசுர சக்திகளை அன்னை ஆதிபராசக்தி அண்டம் நடுநடுங்க சம்ஹாரம் செய்து ஜெயக்கொடி நாட்டிய விழாவே நவராத்திரி. இது பெண்களால் கொண்டாடப்படும் விழா மட்டும் இல்லை. பெண்மையைக் கொண்டாடும் உன்னத விழா!
ஆதிபராசக்தி
ஆதிபராசக்தி

நமது தர்மத்தில் பெண்களை அடக்கி வைக்கிறார்கள், பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்றெல்லாம் கருத்துகள் முன்வைக்கப்படுவது உண்டு. அவர்களுக்கு எல்லாம் விடை சொல்லும் விழாவாக இந்தியா எங்கும் கொண்டாடப்படும் விழாவே நவராத்திரி. பெண்மையே சக்தியின் ஆதாரம். அவளின்றி இங்கு ஒரு அணுவும் அசைவதில்லை. அவளே படைக்கிறாள்; அவளே காக்கிறாள்; அவளே அழிக்கிறாள்! அந்த ஆதார சக்தியின் பெயரே ஆதிபராசக்தி என்கிறது தேவி மகாத்மியம்.

'ஒரு பெண்ணின் கருவில் தோன்றாத, கன்னியான ஒரு பெண்ணால் மட்டுமே தங்களுக்கு மரணம் உண்டாக வேண்டும்!' என்று வரம் வாங்கியவர்கள் சண்ட முண்டர்கள். கேவலம் உடலால் பலவீனமான ஒரு பெண் தங்களை அழிக்க முடியாது என்ற மமதையால் தான் இந்த வரத்தை அவர்கள் வேண்டினார்கள். ஆனால் மும்மூர்த்திகளுக்கும் சக்தியை அளித்த அந்த மகாசக்தி அவர்களைக் கொன்று சாமுண்டேஸ்வரியாக எழுந்தருளினாள்.

சாமுண்டேஸ்வரி
சாமுண்டேஸ்வரி

அதேபோல் ' ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும்' வரம் பெற்று துர்கையால் அழிந்தவன் மகிஷாசுரன். தேவி மகிஷாசுர மர்த்தினி என்ற திருநாமம் கொண்டாள். அரக்க உருவமும் விலங்கு மனமும் கொண்ட மூர்க்கனை அழித்து தேவி மூவுலகையும் காத்தாள் என்கின்றன புராணங்கள்.

மகிஷாசுர வதத்துக்குப் பின் இந்த உலகம் சும்ப நிசும்பர்கள் கையில் சிக்கிக் கொண்டது. அவர்களும் 'ஒரு கன்னிப் பெண்ணால் மட்டுமே தங்களுக்கு மரணம் நேர வேண்டும். மற்றபடி மும்மூர்த்திகள் கூட தங்களை வதைக்க முடியாது!' என்ற வரத்தைப் பெற்றனர். இதுவும் பெண்மையைக் குறைத்து மதிப்பிடும் மூடத்தனம் தான் என்கின்றன புராணங்கள்.

இவர்களை வதம் செய்யத்தான் தேவி கௌசிகி தேவி என்ற அழகிய வடிவம் கொண்டாள். இவள் அழகில் மயங்கிய சும்ப நிசும்பர்கள், தங்களை மணக்க வேண்டினர். தேவியோ 'போரில் தன்னை வெற்றி பெறுபவரையே தாம் மணப்பேன்' என்றாள். போர் நீண்டது. சும்ப நிசும்பர்களோடு பல நூறு அசுரர் தலைவர்களும் மாண்டனர் என்கின்றன புராணங்கள்.

குமரி அம்மன்
குமரி அம்மன்

மன்மதனை எரித்த சாம்பலில் இருந்து தோன்றியவன் பண்டாசுரன். இவனும் ஒரு பெண்ணால் தனக்கு அழிவு வரக்கூடாது என்றே வேண்டினான். பண்டாசுரனையும் இதேபோல குமரி அம்மன் வடிவெடுத்த பராசக்தி, ஈசனை மணக்க முடியாத கோபத்தில் சம்ஹாரம் செய்தாள். அப்போது தேவியுடன் பாலா திரிபுரசுந்தரி, அஸ்வரூடா, சம்பத்காரி, மந்திரிணீ, தண்டநாதா, ஜ்வாலா மாலினி ஆகிய சினம் கொண்ட சக்திகளும் அசுரர்களை அழித்தனர் என புராணங்கள் கூறுகின்றன.

ரக்த பீஜன், விஷுக்ரன், துர்மகன் போன்ற எண்ணற்ற அசுர சக்திகளை அழித்தவள் ஆதிபராசக்தி. இது போன்ற சம்ஹாரங்கள் யாவும் ஒவ்வொரு யுகத்திலும் நவராத்திரி நாள்களில் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த அசுரர்களின் அழிவுக்கு பெரும் காரணமாக இருந்தது, பெண்மையை இழிவாக நடத்தியதே என்று புராணங்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றன.

சக்தி
சக்தி

சக்தி என்பவள் சகல தேவர்களையும் கடந்த மகா சக்தியாக, ஆதிசக்தியாகப் போற்றப்படுகிறாள். அமைதி, கருணை, அழகு, தியாகம், ஞானம், செல்வம், பொறுமை, இரக்கம், மகிழ்ச்சி, வீரம் என அத்தனை விரவி நிற்பவள் சக்தி. சுருங்கச் சொல்லின் அனைவருக்கும் தாயாக விளங்கும் சக்தியை இகழ்ந்தால், அவளை முறையின்றி நடத்தினால் அங்கு மாபெரும் சக்தி தோன்றும். அதனால் தீமைகள் வீழ்த்தப்படும் என்ற நம்பிக்கைதான் நவராத்திரியின் அடிப்படை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவராத்திரி நாள் - 3: நன்மைகள் அருளும் நவராத்திரியில் பூஜிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
'எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்' என்கிறது தேவி மகாத்மியம். எல்லா உயிரிலும் கலந்து நிற்கும் மகாசக்தியை ஒவ்வொரு உயிரும் கொண்டாடும் ஒரு மகத்தான விழாவே இந்த புரட்டாசி நவராத்திரி விழா.
பராசக்தி
பராசக்தி

நவராத்திரி ஐந்தாம் நாள்:

திதி: பஞ்சமி

அம்பாள்: வைஷ்ணவி

கன்னியா பூஜை: 5 வயது சிறுமிக்கு ரோகிணி என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம்: புளியோதரை, உளுந்து பலகாரங்கள், பருப்பு பாயசம்.

கோலம்: மலர் கோலம்.

புஷ்பங்கள்: தாமரை, செவ்வல்லி, முல்லை

இலை: துளசி, வில்வம்.

பழங்கள்: வாழை, நெல்லிக்கனி

வஸ்திரம்: பச்சை, இளம் சிவப்பு பட்டாடைகள்

பாடலுக்கான ராகம்: அடானா

ஆபரணம்: சந்தனம், சிவப்புக்கல் போன்ற மாலைகள்.

தாம்பூலம்: வெற்றிலை பாக்கோடு இனிப்பு வகைகள்.

நான்காம் நாளுக்கான பலன்கள்: பதவி யோகம், செல்வாக்கு, விரும்பிய வேலை வாய்ப்பு கிட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு